காட்சி—45
காட்சி 45·46 காட்சிகளில்
(கோர்ட்டில் குணசேகரன்)
குண : நீதி மன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது புதுமையான மனிதர்களைக் கண்டிருக்கிறது ஆகவே இவ்வழக்கு விசித்திரமுமல்ல வழக்காடும் நான்புதுமையான மனிதனுமல்ல வாழ்க்கைப்பாதையிலே சர்வ சாதாரணமாக காணக்கூடிய ஜீவன் நான். கோவிலிலே குழப்பம் விளைவித்தேன் பூசாரியைத் தாக்கினேன் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்; நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேனென்று இல்லை! நிச்சயமாக இல்லை! கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்
கோவில் கூடாது என்பதற்காக அல்ல கோவில் கொடியவரின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக பூசாரியைத் தாக்கினேன் அவன் பக்தனென்பதற்காக அல்ல பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக
[நடுவில் ஒரு வக்கீல் எழுந்திருக்கிறார்]
உனக்கேன் இவ்வளவு அக்கறை? உலகத்தில் யாருக்குமில்லாத அக்கறை என்று கேட்பீர்கள் நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாகப் பாதிக்கப்பட்டேன்! சுயநல மென்பீர்கள் என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது ஆகாரத்திற்காக அழுக்கைச்சாப்பிட்டுத் தடாகத்தை சுத்தப்படுத்துகிறதே மீன் அதைப்போல் என்னைக் குற்றவாளி குற்றவாளி என்கிறீர்களே இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்சதூரம் பின்நோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்துவந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்குப் பார்க்கமுடியும் பாட்டொலிக்கும் குயில்கள் இல்ல என் பாதையில் படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன தென்றலைத் தீண்டியதில்ல நான் ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன் கேளுங்கள் என் கதையை நீதிபதி அவர்களே தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவுசெய்து கேளுங்கள்! தமிழ் நாட்டினிலே இத்திருக்குவளையிலே பிறந்தவன் நான், பிறக்க ஒருநாடு, பிழைக்க ஒருநாடு தமிழ் நாட்டின் தலைவிதிக்கு நானென்ன விதிவிலக்கா? ரங்கூன் அது என் உயிரை வளர்த்தது என்னை உயர்ந்தவனாக்கியது திருமண கோலத்திலிருந்த என் தங்கையைக் காணவந்தேன் மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ குற்றவாளிக்கூண்டிலே உங்கள் முன் நிற்கிறேனே இந்த ஜாலக்காரி ஜாலி இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன் பணப்பெட்டியைப் பறிகொடுத்தேன் பசியால் மெலிந்தேன் நலிந்தேன் கடைசியில் பைத்தியமாக மாறினேன். காண வந்த தங்கையைக் கண்டேன் கண்ணற்ற ஓவியமாக ஆம்! கைம்பெண்ணை, தங்கையின் பெயரோ கல்யாணி மங்கல கரமான பெயர்! ஆனால் கழுத்திலே மாங்கல்யமில்லை செழித்து வளர்ந்த குடும்பம் சீரழிந்து விட்டது. கையிலே - பிள்ளை! கண்களிலே நீர்! கல்யாணி அலைந்தாள் கல்யாணிக்காக நான் அலைந்தேன், கல்யாணிக்குக் கருணை காட்டினர் பலர் அவர்களிலே காளையர் சிலர் அவளுடைய காதலைக் கேட்டனர். கொலை வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறேனே இக்கொடியவன் வேணு இவன் பகட்டால் என் தங்கையைக் கற்பழிக்க முயன்றான் நான் தடுத்திராவிட்டால் கல்யாணி அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பாள். கடவுள் பக்தர்களும் கல்யாணிக்குக் கருணைகாட்ட முன்
வந்தார்கள் பிரதி உபகாரமாக அவள் கடைக்கண் பார்வையைக் கேட்டனர். அதில் தீவிரமானவன் இந்தப் பூசாரி கல்யாணியின் கற்பை காணிக்கையாக கேட்டிருக்கிறான் பராசக்தியின் பெயரால் உலகமாதாவின் பெயரால் கல்யாணி உலகத்தில் புழுவாகத் துடித்தபடியாவது உயிரோடிருந்திருப்பாள் அவள் தற்கொலை செய்துகொள்ளத் துணிந்தது இந்த பூசாரிதான் தன் குழந்தையை இந்த இரக்கமற்ற உலகத்தில் விட்டுச் செல்ல அவள் விருப்பவில்லை தன் குழந்தை ஆதரவற்றுத் துடித்துச் சாவதைக்காண அவள் விருப்பவில்லை அவளே கொன்று விட்டாள்.
விருப்பமானவர்களைக் கொல்வது விந்தையல்ல உலக உத்தமர்காந்தி, அகிம்சாமூர்த்தி ஜீவகாருண்யசீலர் அவரே நோயால் துடித்துக்கொண்டிருந்த கன்றுக்குட்டியைக் கொன்றுவிடச் சொல்லியிருக்கிறார் அது கஷ்டப்படுவதைக் காணச் சகியாமல். அந்த முறையைத்தான் கையாண்டிருக்கிறாள் கல்யாணி, இது எப்படி குற்றமாகும்? வெளிநாட்டிலிருந்து திரும்பிய ஒரு தமிழனுக்கு வாழ்வுரிமையில்லா தமிழ் நாட்டில் பிறந்த பெண்ணுக்கு வாழ்வதற்கு தக்க பாதுகாப்பில்லை ஆனால் என் தங்கை கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால் கோடீஸ்வரன் வீட்டுப்பள்ளியறையிலே ஒருநாள் மானத்தை விலை கூறியிருந்தால் மாளிகைவாசியின் மடியிலே ஒருநாள் இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்டுக்கே, இதைத்தானு இந்த நீதிமன்றம் விரும்புகிறது பகட்டு என் தங்கையை மிரட்டியது—பயந்து ஓடினாள் பணம் என் தங்கையைத் துரத்தியது—மீண்டும் ஓடினாள் பக்தி என் தங்கையை பயமுறுத்தியது—ஓடினாள், ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே. ஓடினாள் அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்க வேண்டும், வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும் இன்று சட்டத்தை நீட்டுவோர் செய்தார்களா? வாழவிட்டார்களா என் கல்யாணியை?
வக் : குற்றவாளி யார் வழக்கிற்கோ வக்கீலாகமாறுகிறீர்
குண : யார் வழக்கிற்குமில்ல. அதுவும் என் வழக்குத்தான், என் தங்கையின் வழக்கு தங்கையின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட அண்ணன் ஒருவனில் என்ன தவறு? கல்யாணி தற்கொலை செய்துகொள்ள முயன்றது ஒரு குற்றம் குழந்தையைக் கொன்றது ஒரு குற்றம் நான் பூசாரியைத் தாக்கியது ஒரு குற்றம் இத்தனை குற்றங்களுக்கும் யார் காரணம் கல்யாணியை கஞ்சிக்கில்லாமல் அலையவிட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா அல்லது விதியின் பெயரைச்சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா பணம் பறிக்கும் கொள்ளைக்கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா அல்லது பஞ்சத்தை மஞ்சத்
திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா? கடவுளின் பெயரால் காமலீலைகள் நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாடவிட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும் கல்யாணிகளும் குறையப்போவதில்லை இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப்பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம் பகுத்தறிவு பயனுள்ள அரசியல் தத்துவம்.
நீதி : குற்றவாளியைத் தண்டிக்க தனிப்பட்ட எவருக்கும் உரிமை கிடையாது உன்னுடைய வாதம் சர்க்காரையோ, சட்டத்தையோ அவமதிப்பதாக இருக்கக்கூடாது நடந்ததை சொல்வதுதான் உனக்கு உரிமை கொடுக்கப்பட்டதே தவிர அனுவசியமா எதையும் பேசக்கூடாது உன்னிடம் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல் கல்யாணி உண்மையிலேயே உன் தங்கைதானு?
குண : இந்தக்கேள்வி தங்களுக்கு வேடிக்கையாக இல்ல
நீதி : சரி கல்யாணியை வரச்சொல்
நீதி : இவன் உன் அண்ணனா?
கல் : இல்லை கிறுக்கண்ணு என்று கூப்பிடுவேன்! சொந்த அண்ணன் கிடையாது.
குண : கல்யாணி நான் உன் சொந்த அண்ணன்! நான் தான் குணசேகரன்.
நீதி : என்னம்மா?
கல் : அவருக்கு கொஞ்சம் பைத்தியம்!
குண : ஆம்! பைத்தியம்தான் பைத்தியக்காரனாக நடித்தேன் என் தங்கையின் வாழ்வை வேதனை படுத்தக்கூடாது என்பதற்காக நீதிபதி அவர்களே தயவுசெய்து இதை நம்பி விடாதீர்கள் எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்.
நீதி : அதைப்பற்றி நீ பேசக்கூடாது, அது குழந்தையை கொன்ற குற்றம் (விமலா குழந்தையுடன் வந்து)
விம : இல்லை! இல்லை! கல்யாணி குற்றம் செய்யவில்லை குழந்தையும் கொல்லப்படவில்லை. இதோ இருக்கிறது கல்யாணியின் குழந்தை.
குண : விமலா
விம : குண!
நீதி : குழந்தை எப்படி உன்னிடம் கிடைத்தது.
விம : நிலவுகால இரவில் நான் வழக்கமாக ஆற்றில் படகில் செல்லுவது வழக்கம். அப்போது இந்தக் குழந்தை என்
படகில் வந்து விழுந்தது; குழந்தை யாருடையதென்று தெரியாமல் நானே வளர்த்து வந்தேன் சுற்றுப்பயணம் சென்றிருந்த என் அண்ணு வந்து சேர்ந்தார். (திருப்புக் காட்சி)
விம : பாருங்கள் அண்ணு!
அண் : இந்த குழந்தை யாருடையது?
விம : வழக்கம் போல நான் படகில் செல்லும்போது இந்த குழந்தை படகில் வந்தது விழுந்தது யார் குழந்தை என்று தெரியாமல் எடுத்து வளர்த்தேன்.
அண் : கல்யாணியின் குழந்தையாக இருக்கலாம்?
விம : யாரைச் சொல்கிறீர்கள்?
அண் : பட்டினியால் குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள போகும்போது கல்யாணி என்ற பெண் பிடிபட்டாள் வாசிக்கிறீர். (திருப்புக் காட்சி)
விம : உண்மையை அறிந்த நான் குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடிவந்தேன்.
நீதி : இவர்களை யார் என்று உனக்குத் தெரியுமா?
விம : தெரியும்! இவர் குணசேகரன்! குணசேகரன் தங்கை கல்யாணி.
கல் : (குணசேகரனைப் பார்த்து) அண்ணு....
குண : கல்யாணி?
நீதி : வேடிக்கையான வழக்கு. (நீதிபதி கருண காட்டலாம் என சிபார்சு செய்கிறார்) (கல்யாணி விமலா குணசேகரன் சந்திரசேகர் வீட்டுக்குப் போகின்றனர்)