காட்சி—43

காட்சி 43·46 காட்சிகளில்

(இடம் காளியம்மன் கோவில்)

(பராசக்தி கோவிலில் குணசேகரன் பூசாரியைத் தாக்கும் காட்சி)

பூசாரியின் தடபுடல்கள் காவடிகள் அம்பாளுக்கு ஆராதனைகள் அர்ச்சனைகள் தேவி விழா! ஒரே அமர்க்களம். பாடைக் காவடியொன்று பராசக்தி சன்னதிக்கு வருகிறது. பூசாரியின் அதிதீவிர பூஜைக்குப் பின் பாடையிலிருந்தவன் எழுந்திருந்தான்.

கிழவி : தாயே! பராசக்தி! என் மகனுக்கு செலுத்த வேண்டிய காணிக்கையை செலுத்திட்டேன். என் குழந்தையைக் காப்பாற்று தாயே.

பூசாரி : ஓம்...ரீங்கரீம் உன் பிள்ளை உடம்புக்கென்னம்மா?

கிழ : அம்பாள் குடிகொண்டிருந்தா என் பிள்ளை உடம்பிலே ஒரு வில்லங்கமும் வராமல் இருந்தால், பாடைக் காவடி

எடுக்கிறதா வேண்டிக்கிட்டேன். அவ தயவுலே ஒரு கண் மாத்திரம் போய் பிழைச்சுக்கிட்டான் காணிக்கையும் செலுத்திட்டேன்.

பூசாரி : பயப்படாதே உன் மகன் தீர்க்காயுசா இருப்பான்.

(பராசக்தியின் சிலையின் பின்னிலிருந்து ஒரு குரல்)

குரல் : ஏ பூசாரி! முதலில் உன் ஜாதகத்தைக் கணித்துக்கொள்.

பூசாரி : யார் அம்பாளா பேசுகிறது.

குரல் : அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள் அறிவு கெட்டவனே?

பூசாரி : பராசக்தி தாயே!

(அம்பாள் சிலைக்குப் பின்னிலிருந்து பெரும் சிரிப்புடன் குணசேகரன் வெளிப்படுகிறான்)

குண : இந்தப் பராசக்தி உனக்குத்தாயா என் தங்கை கல்யாணி உனக்குத் தாசியா மானங்கெட்டவனே! அப்படித்தானே?

பூசாரி : யாரப்பா நீ? இது என்ன விபரீதம்.

குண : விபரீதம் வருமென்று தெரியாத காரணத்தினால்தான் என் தங்கையோடு விளையாடியிருக்கிறாய். நீ பக்தர்களுக்கு ஆசீர்வாதம் புரியும் பரமபாதகா நீ இப்போது கூண்டிலே நிறுத்தப்பட்டிருக்கிறாய். இவர்கள் அத்தனை பேரும் நீதிபதிகள் தீர்ப்புக் கூறட்டும்.

பூசாரி : பராசக்தி! பராசக்தி!

குண : அது பேசாது கல் பேசுவதாயிருந்தால் என் தங்கையின் கற்பைச் சூறையாட துணிந்தபோது “அட பூசாரி அறிவுகெட்ட அற்பனே நில்” என்று தடுத்திருக்காதா? உனது பலாத்கார அணைப்பிலே சிக்கிய என் தங்கை ஆயிரம் முறை அந்த பராசக்தியை அழைத்தாளாமே ஓடி வந்து அபயம் கொடுத்தாளா?

பூசாரி : பக்தகோடிகளே! பார்த்துக்கிட்டு நிற்கிறீங்களே.

குண : ஏன் மனித உதவியை நாடுகிறாய்? தேவிபக்தனே உன் தேவியின் கையில் சூலமிருக்க, சுழலும் வாளிருக்க சுக்குமாந்தடியிருக்க ஏன் பயந்து சாகிறாய்?

பூசாரி : அபச்சாரம்! அபச்சாரம்!

குண : அபச்சாரம். அம்பாளின் சன்னதியை ஆண்கள் அறையாக்கிக் கொண்டது அபச்சாரமில்லையா? ஆஸ்திகம் விதியாக்கிக் கொண்டது அபச்சாரமில்லையா? கன்னியர் கற்பைப் பறிக்கும் காமக்கோட்டையாகிக் கொண்டது அபச்சாரமில்லையா? ஏ பூசாரி நான் சாவுக்குத் துணிந்து

விட்டேன் எனக்குத் தெரியும் நான் செய்யப்போகும் காரியத்திற்கு எது வெகுமானமென்று, தூக்குமேடை தூக்குமேடை பரவாயில்லை புழுத்துப்போன சமுதாயத்தில் உன்போன்ற போலிப் பூசாரிகள் புண்ணியவான்கள் வேஷம் போடும் நாடகத்தை விட்டுக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்திற்கு என் செய்கை ஒரு பாடமாக இருக்கட்டும்.

பூசாரி : என்னடா தேவிக்கு விழா கொண்டாடுறபோது வந்து கலாட்டா பண்றே! (பூசாரி அரிவாளை ஓங்குகிறான்)

குண : (பூசாரியின் கையிலிருந்து அரிவாளைப் பிடுங்கிக் கொண்டு) விழா! தங்கையின் வாழ்வை போக்க எண்ணிய உனக்கும் உன் தேவிக்கும் விழா! இல்லை, இதோ இந்தக் கத்திக்கு விழா! இரத்த விழா! வீர விழா! வெற்றிவிழா! (பூசாரியின் தலையில் வெட்டுகிறான்)