காட்சி—42
காட்சி 42·46 காட்சிகளில்
(ரோட்டில் பிரசங்கி பேசுகிறார்)
பிர : உலகப் பேரழகி கிளியோபாட்ரா தமிழ் நாட்டின் முத்துக்களை சாராயத்திலே போட்டு குடித்தாளாம். அத்தகைய தமிழகத்தின் பெண்களோ இரங்கூனுக்கும் சிங்கப்பூருக்கும் சென்று ஆடவர்கள் சம்பாதித்து அனுப்பும் பணத்தை எதிர் பார்த்து பட்டினி கிடக்கிறார்கள். ஆலயங்கள் இங்கே. ஆண்டவனுக்கு வைரக்கவசம் ரத்தின சிம்மாசனம், அந்த ஆண்டவனின் அருமைக் குழந்தைகளோ அரைவயிற்றுக் கஞ்சிக்கும் அல்லல்படுகிறார்கள். கோவில்புரம் நிறைய நண்பர்களே தாய் தன் குழந்தையை விற்றாள் என்று. பசியின் கொடுமையால் பல தாய்மார்கள் குழந்தையை
விற்றுவிட்டார்களாம். தாயார் குழந்தையை விற்றாள்! பத்து மாதம் சுமந்து படாதபாடு பட்ட தாய், பாராட்டி சீராட்டி வளர்த்த தாய், தொட்டிலிலே போட்டு ஆராரோ பாடிய தாய், வெள்ளிக்கிண்ணத்தில் பால்சோறு போட்டு தாழ்வாரத்திலே தவழ்ந்தோடும் பிள்ளைக்கு ஊட்ட வேண்டும் என்று கனவு கண்டிருந்த தாய், மஞ்சள் நீராட்டி மகனின் மழலைமொழி கேட்டு “பள்ளிக்குச் செல்லடா கண்மணி” என்று அவன் பின்னழகைக் காணவேண்டுமென்று துடித்துக் கிடந்த தாய், மகனுக்கு திருமணம் செய்து மகனும் மருமகளும் மஞ்சத்திற்குச் செல்லும் அந்த நாளும் வராதோ என்று ஏங்கிக்கிடந்த தாய், தான் பெற்ற குழந்தையை தன் வயிற்றிலே கிடந்த வைரத்தை வறுமையினால், கோமேதகத்தை, தங்கத் தாம்பாளத்தை விற்றாளாம் கூறுகிறேன். பிள்ளையோ பிள்ளை, என்று மார்க்கெட்டில் கீரைப்போல் கூறுவதுபோல் எட்டு ரூபாய்க்குக் குழந்தையாம்! பெரிய குழந்தை ஐந்து ரூபாய் பிஞ்சுக் குழந்தை மூன்று ரூபாய், கொடுமை! கொடுமை!
(இதைக் கேட்டுக் கொண்டிருந்த குணசேகரன் எழுந்து ஓடுகிறான். எதிர்ப்பட்ட குப்பனை சந்திக்கவே தன் தங்கை கல்யாணியை பூசாரி கற்பழிக்க முயற்சித்தான் என்பது அறிந்து ஆத்திரத்துடன் பராசக்தி கோவிலுக்குச் செல்கிறான்.)