காட்சி—41
காட்சி 41·46 காட்சிகளில்
(இடம் நீதிமன்றம். குற்றவாளிக் கூண்டிலே கல்யாணி)
நீதி : (கல்யாணியைப் பார்த்து) இக்கொலையைப் பற்றி என்ன சொல்லுகிறாய்?
கல் : (மெளனம்)
நீதி : இப்படி மெளனமாக இருந்தால் கோர்ட்டை அவமதிப்பதாகும்! கொலை, தற்கொலை முயற்சி இப்படி குற்றம் சாட்டப்பட்டிருக்கிறாய். உண்மையாக நடந்தால் நிரபராதியாகிவிட முடியாது பதில் சொல்! நீ யார்? உன் பெயர் என்ன? உன் சொந்த ஊர் எது? குழந்தையைக் கொல்ல வேண்டிய காரணம்? குழந்தைக்குத் தகப்பன் யார்? தகப்பன் பெயர் தெரியாத குழந்தையா?
கல் : ஆம் தெரியாததுதான்! பச்சைக் குழந்தைக்கு எப்படித் தகப்பன் பெயர் தெரியும்? நீதிபதி அவர்களே திருப்பித் திருப்பி எதையும் கேட்காதீர்கள் தீர்ப்பைக் கூறிவிடுங்கள்.
நீதி : விசாரணையின்றி எப்படியம்மா தீர்ப்புக் கூறுவது?
நீதி : உன்மேல் சாட்டப்பட்டுள்ள குற்றங்களைப் பற்றி நீ என்ன சொல்லுகிறாய்?
கல் : நான் என்ன சொல்வது? உங்கள் சட்டம் என்ன சொல்லுகிறதோ அப்படியே செய்யுங்கள்.
நீதி : நீ கொலைகாரிதானே?
கல் : ஆம்! உங்கள் சட்டப்படி; நியாயப்படி அல்ல.
நீதி : பெற்ற குழந்தையை கொல்வதுதான் நியாயமா?
கல் : நான் பெற்றேன், நானே அழித்தேன், பெறுவதற்கு உரிமையிருக்கிறது போலவே அழிப்பதற்கும் உரிமை இருக்கிறது.
நீதி : ஆக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் அரசாங்கத்துக்குச் சொந்தம்.
கல் : சொந்தம், சோற்றுக்கு கஷ்டப்பட்டோம். சுகத்தைத் தேடி சுற்றியலைந்தோம், சொறிநாயிலும் கேவலமாக நடத்தப்பட்டோம். பசிபசியெனப் பதறியழுதோம்; பட்டினி புழுக்களாய் துடித்தோம்; துவண்டோம் நெளிந்தோம்—அப்போதெல்லாம் சொந்தம் பாராட்டி ஆதரிக்கவில்லை அரசாங்கம். அதிசயமான அரசாங்கம்! சாவத் துணிந்தபோது சட்டம் என்ற கையை நீட்டி சொந்தம் என்ற குறுக்கி மொழி பேசுகிறது! அரசாங்கம் அதிசயமான அரசாங்கம் அற்புதமான நீதி.
நீதி : குழந்தை பேசாதே குழந்தையைக் கொன்றது குற்றம் ஒப்புக்கொள்கிறாயா இல்லையா?
கல் : குற்றம்! இது குற்றமென்றால் ஏழு குழந்தைகளைக் கிணற்றிலே எறிந்தாளே நல்லதங்காள் அது எவ்வளவு பெரிய குற்றம்? நல்லதங்காள் கதை நாடெல்லாம் நடக்கிறதே அதை ஏன் தடுக்கவில்லை சட்டம்? பிள்ளை கறி சமைத்தார் சிறுத்தொண்டர் என்று பெருமை பேசுகிறீர்களே அது என் தடுக்கப்படவில்லை? அவர்கள் கற்றுக்கொடுத்த பாடத்தைத்தானே நான் செய்தேன் இது எப்படி குற்றம்?
நீதி : நல்லதங்காளையும் சிறுத்தொண்டரையும் காரணங்காட்டி இங்கே பேசாதே. உன் ஆத்திர உணர்ச்சி நீதியை அவமதிக்கக்கூடாது, நடந்த விஷயத்தை மட்டும் நீ கூற வேண்டுமேயன்றி அரசாங்கத்தையோ சமுதாயத்தையோ குறை கூறுவது பொருத்தமில்லை.
கல் : பசியால் பதறினேன் என் பாலகன், வெட்கமில்லாமல் சொல்கிறேன் இங்கிருப்பவர்களெல்லாம் சகோதரர்களாக நினைத்து. என் குழந்தை நாக்கு வறண்டுபோய் என் மேலாடையை நகர்த்துவான், பலநாள் பட்டினி கிடந்த இப்பாவியிடம் பாலா இருக்கும்? அந்தக் கொடுமை தாங்க முடியவில்லை, கொன்று விட்டேன். இது குற்றமா?
நீதி : குழந்தையை எப்படியும் காப்பாற்ற வேண்டும்.
கல் : என் குழந்தை என்ன திருஞானசம்பந்தரா பார்வதி வந்து பால் கொடுத்துக் காப்பாற்ற? நான்தானே காப்பாற்றியாக வேண்டும். என்னை வாழவிடாமல் என் வாழ்வில் எனக்கு இடையூறு இருந்தது. வஞ்சகர் வலையிலே விழாத காரணத்தால் சட்டத்தின் முன் நிற்கிறேன் குற்றவாளியாக. ஆனால் நான்மட்டும் கொஞ்சம் உடலை அசைத்திருந்தால் உப்பரிகையிலே உலவிக் கொண்டிருப்பேன் விதவையாக அல்ல விஷம் பிடித்தவளாக அல்ல. விபச்சாரியாக! விபச்சாரியாக! அதைத்தானே இந்த சமூகம் விரும்புகிறது. அப்படித்தானே இந்த சமுதாயத்தை எதிர்க்க முடிகிறது. வேறு எப்படி வாழ முடியும் அனாதையாக.
நீதி : நீ அனாதையா?
கல் : ஆம் காலம் என்னை அனாதையாக்கிற்று.
நீதி : கதை பேசாதே விஷயத்தைச் சொல்.
கல் : பிறந்த மறுநாளே தாயார் இறந்துவிட்டாள். தகப்பனார் நிழலிலே வளர்ந்தேன். தலைமகனார் மூன்று பேர் அவர்களை நான் சரியாகக் கூட பார்த்தது கிடையாது. அவ்வளவு இளமையிலேயே இரங்கூன் சென்றுவிட்டார்கள். கல்யாணமாயிற்று எனக்கு. கணவர் இறந்தார், தந்தையும் இறந்தார். இரங்கூனிலிருந்து எனது அண்ணன்மார் சந்திரசேகரன், ஞானசேகரன், குணசேகரன் வந்துவிடுவார்கள் என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தேன்; வரவில்லை அண்ணன்மார். பிள்ளையைத் தூக்கிக்கொண்டு பிச்சைக்காரியாய்த் திரிந்தேன். நாட்டிலே எனக்குக் கிடைத்த பதில் போடி வேலையற்றவளே என்பதுதான். ஒரு நீதிபதியாம் நேர்மையை அனுஷ்டிப்பவராம். பிச்சை கேட்டுப்போன என்னைப் பூட்ஸ் காலால் உதைத்தார். (நீதிபதி சேகர் கல்யாணி தன் தங்கையென தெரிந்து அதிர்ச்சியடைந்து கீழே விழுகிறார்.)