காட்சி—25—
காட்சி 25·46 காட்சிகளில்
[கள்ள மார்க்கெட் கயவன் நாராயணப்பிள்ளை பதுக்கி வைத்திருந்தவற்றைக் கணக்கிடல்].
நாரா : சர்க்கரை மூட்டை, இருபது, மில் துணி பீஸ் முப்பது, நூல் பேல் ஆறு, ஆக மொத்தம்.
கருப் : அம்பத்தாறு
நாரா : சீ மடையா அதுதெரியாது எனக்கு! லாபத்தைக் கணக்குப் பண்ணினால், ஐம்பத்தாறும்
கருப் : லாபம் என்னங்க, இப்பவே வித்தால்கூட முப்பதாயிரம் கிடைக்குங்க.
நாரா : ஏன் அப்புறம் வித்தால் ஆகாதோ? இது ஒண்ணும் கத்திரிக்கா இல்லேடா அழுகிப்போகறதுக்கு கன்னிப் பொண்ணு.
காந் : கன்னிப்பெண்ணைக்கூட விக்க ஆரம்பிச்சுட்டீங்களா?
கருப் : விக்கலாம் அம்மா! ஆனால் அதை இந்த மாதிரி மூட்டையாக கட்டிப்போட முடியாதே.
நாரா : சும்மா இருடா மடையா.
காந் : ஏன்...இவரு ப்ளாக் மார்க்கெட்டு பூதத்தைக்கூட மூட்டையாகக் கட்டிப் போட்டுருவாரே.
நாரா : அப்படிக் கட்டிப் போட்டாமலா உன் கழுத்திலே தாலியைக் கட்டினேன்! நீ ப்ளாக் மார்க்கெட்டை கேவலமா பேசறே எல்லாம் பணம்தான். ஒளவையார் கூழுக்குப் பாடினள், கம்பர் பொன்னுக்குப் பாடினாரு, இதுவும் ப்ளாக் இல்லாமல் வேறு என்ன?
(இந்நேரம் தமிழ்ப் பண்டிதர் வருதல்)
நாரா : என்ன தமிழ்ப் பண்டிதரே,
சி. ஜி. டி. நாராயணப்பிள்ளைவாள் நான் இப்பொழுது தமிழ்ப் பண்டிதரல்ல. துப்பறியும் இலாகாவில் பணியாற்றுகிறேன். உங்களிடம் நிறைய நூல் இருப்பதாக கேள்விப்பட்டேன்.
நாரா : அரகரா, அது யாருங்க சொன்னது? என்னண்ட நூல் இருக்கிறதா. நான் ஒரு நாணயமான வியாபாரி ஊருக்கு பெரிய மனுஷன்! சன்மார்க்க சங்கத்துக்கு தலைவன்.
கருப் : திருட்டுப் பயல்க!
நாரா : யாருடா திருட்டுப் பயல்க?
கருப் : முதலாளி கிணற்றுக் கரையிலே நாலு அணாவைச் வச்சிருந்தேன். எவனோ அடிச்சிட்டு போயிட்டான்.
நாரா : போடா மடையா.
சி. ஜி. டி. அமைதி அமைதி, நாராயணப் பிள்ளைவாள் நான் குறிப்பிட்டது ஆடை நெய்யும் நூல் அல்ல; அறிவு வாடை வீசும் நூல், புத்தகம்.
நாரா : புத்தகமா? சரிதான் சி. ஜி. டி. சார்! எங்கிட்ட ஏராளமான புத்தகம் இருக்கு! டேய் கருப்பா அய்யா கேக்குற புத்தகத்தையெல்லாம் போயி கடையிலே வாங்கிக் கொண்டு வந்து கொடு தெரிஞ்சுதா? அப்போ புறப்படுங்கோ நேரம் ஆகுது.
சி. ஜி. டி. : நன்றி வணக்கம்
நாரா : சந்தோஷம்
(இந்நேரம் மதுரையை விட்டு வெளியேறிய கல்யாணி திருச்சிக்கு வந்து நாராயண பிள்ளையின் வீட்டு வாசலருகே பசியால் துடித்து நிற்கிறாள்)
கல் : ஐயா நானும் குழந்தையும் பட்டினி ஏதாவது
நாரா : ஏம்மா இந்த இளம் வயதிலேயே பிச்சை எடுக்க ஆரம்பிச்சுட்டியே நீ யாரு?
கல் : நான் ஒரு அநாதையா ஏதாவது ஒரு வீட்டுவேலை கிடைச்சாலும் போதும்.
நாரா : அப்போ இங்கே வேலை பார்க்குறியா?
கல் : தயாராய் இருக்கேன்யா
நாரா : டேய் கருப்பா உள்ளே கூட்டிக்கிட்டு வாடா