காட்சி 21

காட்சி 21·46 காட்சிகளில்

[காமவெறி பிடித்த கருநாகம் வேணு, கல்யாணி என்ற கனியைச் சுவைக்கும் நோக்கத்தோடு கல்யாணியின் வீட்டுக் கதவைத் தட்டுகிறான்.]

வேணு : கல்யாணி!

கல் : [கதவைத் திறந்தவுடன்] ஏண்ணா இவ்வளவு நாழி? இனிமேல் சீக்கிரமா வந்துடுங்க.

வேணு : வரவேண்டிய நேரத்திலேதானே வந்திருக்கேன் ஏன் கல்யாணி இன்று வியாபாரம் எப்படி?

கல் : என்றைக்கும் போலத்தான் இன்னிக்கும்

வேணு : ம்...இட்லி இருக்குல்லே?

கல் : இருங்கண்ணா! கொண்டு வர்றேன்

வேணு : ஏன் கல்யாணி! அரிசி கிடைக்காத நேரத்திலே இப்படி தனி அரிசியாய்ப் போடாமல் கொஞ்சம் கோதுமையைச் சேர்த்தால்—

கல் : சேர்க்கலாம் ஆனா ருசி கெட்டுடும்

வேணு : எதுவும் தனிமையாக இருக்கிறதைவிட இரண்டாக இருந்தால் நல்லா இருக்கும். கோதுமையும் கலந்துகிட்டால் லாபமும் அதிகம் இருக்குமே!

கல் : லாபத்துக்காக அக்கிரமம் செய்யலாமா அண்ணா?

வேணு : என்னடி மூச்சிக்கு முப்பத்திரண்டு அண்ணா போட்ற?

கல் : அண்ணா! எனக்கு மூன்று அண்ணன்மார்கள் உண்டு அவர்களில் ஒருவரைக்கூடப் பார்க்க கொடுத்து வைக்காத பாவியானேன்! ஆசைக்கு உங்களையாவது அண்ணா அண்ணாண்ணு கூப்பிட்றேன்

வேணு : அட பைத்தியமே ஆசை அதிகமாயிட்டா அதுக்கு அண்ணாண்ணு கூப்பிட்றது?

கல் : அண்ணா! உங்கள் பேச்சில் விபரீதமிருக்கிறதே?

வேணு : ஆசையைக் காட்டிக்கொள்ளும் வழி அது வல்ல கல்யாணி!

கல் : அண்ணா தனியாக இருக்கும் பெண்களிடம் இப்படிப் பேசுவது—

வேணு : ஆமா! தளிர்க்கொடி தனியாக இருக்கக் கூடாதுன்னுதான் படர்வதற்கேற்ற பலாமரமாக நான் இருக்கிறேன். மாமான்னு கூப்பிடு! அது எவ்வளவு மனோகரமான வார்த்தை! அத்தான்னு கூப்பிடு அது எத்தனை சத்தான மாழி.

கல் : நிறுத்து இனி என்னால் பொறுக்க முடியாது.

வேணு : இங்கே என்ன வாழுதாம்! தானும் அப்படித்தான் நீ சரின்னு சொல்லு. ஓலைக்குடிசை இருக்கும் இடத்திலே உப்பரிகை கட்டித் தருகிறேன். கந்தல்பாயிலே படுத்த கல்யாணி கனகமணிக் கட்டிலிலே படுப்பாள்.

கல் : சீ நெருங்காதீர்கள்! வறுமையால் வாடும் பெண்கள் வஞ்சக வலைவீசினால் விழுவார்கள் என்று இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கிறீர்கள்?

வேணு : போர்க்களத்திலே ஒப்பாரி! போகக் களத்திலே புலம்பல் கோழைகள் செயலடி என் கோமள நாயகி

கல் : என்னைத் தொட முயன்றால் சப்தம் போடுவேன்

வேணு : போடு! உன் சப்தம் எனக்கு சங்கீதமாக இருக்கட்டும்.

[என்று கல்யாணியைக் கட்டி அணைத்து அவள் செவ்விதழைச் சுவைக்கப் போகிறான், காம வெறியன் கயவன் வேணு, இந்நேரம் குணசேகரன் வந்து...)

குண : மரியாதை வேண்டாமடா, மைத்துனு [என்று வேணுவை அடித்து விரட்டுகிறான்]

கல் : நீ வரலின்னா என்கதி என்ன ஆகியிருக்கும்! கிறுக்கண்ணா நீ எங்கே இங்கு வந்தே

குண : உன்னைப் பார்க்கத்தான்

கல் : கிறுக்கண்ணா பத்துநாளா அந்த மரத்தடியிலே என்ன செய்யுறே!

குண : ராஜாங்கம் நடத்துறேன்

கல் : கிறுக்கண்ணா இட்லி தர்றேன் திங்கிறியா?

குண : ம்...நீ காசு கேட்பியே

கல் : காசு வேண்டாம்

குண : நான் யாருன்னு சொன்னா நீ காசே கேட்க மாட்டே

கல் : நீ யாரு?

குண : நானு...நானு மரத்தடி மகாராஜா!

கல் : இட்லி கொண்டு வாறேன்

குண : வேண்டாம்... வேண்டாம்மா... இட்லி வேண்டாம்மா... சட்டனி வேண்டும்மா...

கல் : சரி ரெண்டும் கொண்டு வாறேன் (போகிறாள்)

(குணசேகரன் பின்னூல் சென்று தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கும் தன் மாப்பிள்ளைக்கு முத்தமிடுகிறான் அவன் கண்ணில் கண்ணீர்)

கல் : (இட்லியுடன்) ஏன் கிறுக்கண்ணு அழுறே

குண : உம்......என் ராஜாங்க பிரஜையெல்லாம் சந்தோஷமாக இருக்காங்க...அதுலே நான் அழுறேன்.

(என்று தன் கையிலிருந்த ரூபாயை இட்லித் தட்டில் போட்டு விட்டுப் போய்விடுகிறான்)

கல் ! கிறுக்கண்ணு! கிறுக்கண்ணு!