காட்சி 19
காட்சி 19·46 காட்சிகளில்
[பைத்தியம்போல் வேணுமென்றே பிதற்றிக் கொண்டிருக்கிறான்]
குண : கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்...குடிக்கத்தான் கற்பித்தானா? (சிரிக்கிறான் நானே மகாராஜன் இல்லை சந்தேகம்—யாரவர்கள், மந்திரி பிரதானீகளே வருக இவ்வாசனத்தில் அமருங்கள்! பரத நாட்டியம் ஆரம்பமாகட்டும் டுமீர் டுமீர் டுமீர்!)
கோபாலனோடு நான் ஆடுவேனே—நந்த கோபாலனோடு நான் ஆடுவேனே—வேணு கோபாலன்—ஆ நந்தகோபாலன்—ஊ நந்த கோபாலன் இசைக்குயில் போல் ஆடுவேனே
ஐயோ! ஐயோ! போதும் போதும்! தேச விசாரணை ஆரம்பமாகட்டும் டும் டும் டும்! மந்திரி நமது மாநகர் தன்னில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா? டுமீர்! டுமீர்! அதுக்குத்தான் வருண பகவானுக்கு ‘கடக்கட்டு’ கட்டி தந்தி அடிச்சிருக்கோம் மகாராஜ்! சபாஷ் சபாஷ்! யார் அவர்கள்? ஏன் கத்துகிறார்கள்? ஓய் ஓய் மகாராஜா வயிறு பசி தாங்கல்லே—குடும்பம் குடும்பமாக சாகிறோம். வாட் வசிக்குதா? அப்படிச் சொல்லாதே பாவி! பவுன் விளையுற நாடுடா! பரதேசிப் பசங்களா பட்டினி கிடக்கிறீங்களா? சாவுங்க சந்தோஷமாக சாவுங்க! அப்படித்தாண்டா வால் நட்சத்திரம் கிளம்பும். சர்—சர்—ர் மகாராஜ் பணம் இல்லையா? வேர் யு ஆர்! வேறே வாட் யு வாண்ட்? வடமலையானுக்கு காவடி எடுங்கடா—வடமலையானுக்கு... (ஒரு செங்கல்லை எடுத்து) அரோகரா சர்வராம சஞ்சீவி நாம பர்வதம் ராம சங்கீர்த்தனம்...கோவிந்தா...ஹரே கோவிந்தா!
(கல்லை சுமைதாங்கி மீது வைத்துக்கொண்டு)
நட்டகல்லை தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே சுற்றிவந்து மொணமொணன்னு சொல்லும் மந்திரம் ஏதடா நட்டகல்லும் பேசுமோ நாதனுள்ளிருக்கையில்—சுட்ட சட்டி சட்டுவங் கறிச்சுவை அறியுமோ?
பஜனை செய்வோம் கண்ணன் நாமம் பட்டினிகிடந்து பஜனை செய்வோம் கண்ணன் நாமம் பஜனை செய்வோம் கண்ணன் நாமம்-பட்டினி கிடந்து பஜனை செய்வோம் கண்ணன் நாமம்
(இவ்வாறாக பைத்தியக்காரனைப் போல் பல வேஷத்தில் பல பேச்சுக்களை பேசும் குணசேகரனைக் கண்ட கல்யாணி)
கல்யாணி : அய்யோ—பாவம்—யாரோ பைத்தியம்—போலிருக்கு.
குண : தங்கச்சி தங்கச்சி இங்கே வாயேன்.
கல்யா : என்ன? அப்பா நான் உனக்கு தங்கச்சியா?
குண : ஆமா! நான் உன்கிட்டே ரெண்டு மூணு நாளா ஒண்ணு சொல்லலாம்னு நினைச்சேன்.
கல் : என்ன?
குண : ஒண்ணுமில்லே நான் ஒரு பொண்ணு பெத்து தர்றேன் உன் பையனுக்கு கட்டிக்கிறாயா?
கல் : அது சரி சீதனம்?
குண : அது அப்புறம் பார்த்துக்கிடலாம் முதல்லே என் மாப்பிள்ளையை கொஞ்சம் கொடு—ஒரு முத்தம் கொடுத்துட்டு தர்றேன்.
கல் : அய்யோ—நான் மாட்டேன்.
குண : தங்கச்சி ஒண்ணே ஒண்ணு! தரமாட்டியா? தங்கச்சி சத்தியமா—நான் பைத்தியக்காரனில்லே உன் பிள்ளையை ஒண்ணும் செய்யல்லே கொடுக்கமாட்டியா? ஆம் நான் பைத்தியக்காரன்தான் (தாளா துயரத்தோடு சென்று விடுகிறான்)