காட்சி—17

காட்சி 17·46 காட்சிகளில்

(கல்யாணி தன் குழந்தையை தொட்டிலில் போட்டுப் பாடிக்கொண்டிருக்கிறாள். இதைப் பார்த்துக்கொண்டே கண்கள் கடலாக நெஞ்சைத் துளைக்கும் சோகத்தோடு நிற்கிறான் குணசேகரன்)

கொஞ்சும் மொழி சொல்லும் கிளியே—செழும் கோமளத் தாமரைப் பூவே—ஒரு வஞ்சமிலா முழுமதியே இன்ப வானில் உதித்த நல்லமுதே! கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

மாமன்மார் மூவர் தம்பி—நல்ல வாழ்வளிக்க வருவார் உன் மாம்பழக் கன்னத்தில்—முத்த மாரி பொழிந்திட வருவார் கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

மாணிக்கப் பாலாடை—பச்சை மாமணித் தொட்டிலுடன்—வெள்ளி யானையும் வாகனமாய்—சின்ன மாமன் தருவார் சீதனமாய் கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

வெள்ளியினால் செய்த ஏட்டில்—நல்ல வைர எழுத்தாணி கொண்டு தெள்ளு தமிழ் பாடம் எழுத உனை பள்ளியில் சேர்த்திட வருவார்—மாமன் அள்ளி அணைத்திட வருவார் கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

(பாடலின் கருத்து அவன் வருத்தத்தைப் பன்மடங்கு வளர்க்கிறது)

ஆம். மாமன்மார்கள் ஆடம்பரமாக வருவார்கள்...கல்யாணி உன் ஆசைக்கனவை நான் அழிக்க வேண்டாம். இந்தப் பைத்தியக்கார வேஷத்தில் நீ என்னைக் கண்டு கொள்ளவே வேண்டாம்—(இது குணசேகரனின் மனசாட்சி)

குண : கடலிலே திசை மாறிப்போன கப்பல் அப்படியே கவிழ்ந்தே போயிருக்கக் கூடாதா? கல்யாணி உன்னை இந்த நிலையில் காணவா இவ்வளவு ஆவலோடு ஓடிவந்தேன். (சுமைதாங்கி அருகே செல்கிறான்) சுமைதாங்கி இனி இதுவே என் சோகம் தாங்கி! இதுவே என்வீடு! இங்கேயே என்வாழ்வு! கல்யாணியை நிழல்போல பின்தொடர்ந்து கொண்டிருப்பது என் உத்தியோகம்.