காட்சி—16
காட்சி 16·46 காட்சிகளில்
(குணசேகரன் பைத்தியக்காரன்போல் நடித்து சென்னையிலிருந்து மதுரையில் தன் வீட்டுக்கு அருகே வந்து சேருகிறான். அவ்வீடு பூட்டி இருப்பதால் பக்கத்தில் பிச்சை போட்டுக்கொண்டு நின்ற பார்வதியை விசாரிக்கிறான்)
பார் : அட! நீ யாரையா இரு வர்றேன்
குண : இல்லேம்மா, நான் பிச்சைக்காரனில்லை பக்கத்து வீட்டிலே மாணிக்கம் பிள்ளைன்னு ஒருத்தர் இருந்தாரே, இப்ப அவரு எங்கம்மா இருக்காரு!
பார் : யாரு! கல்யாணி அவுங்க அப்பாதானே?
குண : ஆமாம்மா!
பார் : அவரு செத்துப் போயிட்டாரு.
குண : ஆ...செத்துப் போயிட்டாரா? அப்ப அவரு பொண்ணு கல்யாணி?
பார் : கல்யாணி! எனக்கும் பொண்ணு மாதிரிதான்! கடைஞ்செடுத்த சிலைமாதிரி இருப்பாள் கல்யாணம் எல்லாம் நல்லாதான் நடந்திச்சி. பாழும் தெய்வம் அவளையும் வாழ விடலே...கல்யாணம் நடந்த மறுவருஷம் அவளை சிசுவும் கையுமா விதவையாக்கிருச்சி!
குண : ஆ அய்யய்யோ...இப்ப கல்யாணி எங்கம்மா?
பார் : அதோ அந்தத் தெருக்கோடியிலே இட்லி கடை வச்சிருக்கு. இப்படித் துயரப்படுறியே நீ யாரு?
குண : நான் யாருன்னு சொன்னால் உங்களுக்குத் தெரியாதம்மா.
(கல்யாணியைத் தேட தெருக்கோடி வீட்டுக்கு செல்கிறான் குணசேகரன்)