காட்சி—15—
காட்சி 15·46 காட்சிகளில்
(சென்னையில் பசியால் துடித்து பைத்தியம்போல் ஒரு பிளாட்பாரத்தில் குணசேகரன் இருக்கிறான்)
பழக் : பழம்... பழம்... ஆரஞ்சு... ஆப்பிள்...பழம் ஏம்பா பழம் வேணுமா?
குண : வேண்டாம்மா! காசு இல்ல.
பழக் : காசில்லையா? அப்படின்னு இந்தாபாரு இதைப் பார்த்துக்கோ! போயி தண்ணி குடிச்சிட்டு வர்றேன்.
(பழக்கூடையை வைத்துவிட்டுப் போகிறாள். குணசேகரன் பழக்காரியை கேளாமலேயே பழத்தை எடுத்துச் சாப்பிடுகிறான்.)
பழக் : டேய்! டேய்—ஏண்டா என் பழத்தை எடுத்தே?
குண : பசிக் கொடுமையம்மா!
பழக் : பசிக்குதுன்னு திருடியா திங்கச்சொல்லுது பாழாப் போனவனே...நான் பாடுபட்டு பங்கப்பட்டு நாலு தெரு சுத்தி நாலு காசு சம்பாதிக்க அதைப் பறிக்க வந்துட்டியா?
குண : உன் மகனு இருந்தா மன்னிக்க மாட்டியா பாரா-2.
பழக் : உன்னைத் தெய்வந்தாண்டா கேக்கணும்.
குண : அவன் கேட்கலையம்மா என் வேதனைக் குரல், அவன் மனசுதான் கல்லாய் போச்சே.
பழக் : என் பழம் எல்லாம் மண்ணைப் போச்சே! உனக்கு எந்த மாரியம்மன் கோயில் மண்ணுவாரி இறைப்பேன்? டேய் மரியாதையா பணத்தை எடுத்து வைக்கலே பல்ல உடைச்சிடுவேன்.
குண : பணத்துக்கு எங்கேயம்மா போவேன். வேணும்னு கூலி இல்லாமல் இந்தப் பழத்தை சுமந்து வித்துத்தாரேன்.
பழக் : வித்தாத்தானே வீணுப்போனவனே? மூஞ்சைப் பாரு அட பழத்தைத் தின்னுட்டு தோல் உரிச்சு அதிலேயே போட்டிருக்கே? தூக்கு அடே தூக்கடா!
(இந்நேரம் ஒரு பைத்தியக்காரன் வந்து பழக்கூடையைத் தட்டிவிட்டு பழத்தை எடுத்து ஓடுகிறான், போலீஸ் அவனை விரட்டுகிறது. ஆனால் அவனே போலீசை மிரட்டிவிட்டுச் செல்கிறான். இக் காட்சியைக் கண்ட குணசேகரன்)
குண : பைத்தியக்கார உலகம், இந்த உலகத்தில் ஏமாற்றித் திரிபவன்தான் பிழைக்க முடியுமா நான் திருடியது வேட்டி வாங்கிக் கொள்வதற்கா? அல்லது வீடு கட்டிக் கொள்வதற்கா? வயிற்றுப்பசி தாங்கமாட்டாமல் ஒரு பழம் திருடினேன்...அதற்கு பரிசு அடி, உதை, திட்டு பைத்தியக்காரன் ஒரு சீப்பு பழத்தைத் திருடுகிறான். உலகம் அவனுக்குப் பயப்படுகிறது. அவனை மன்னித்து விடுகிறது. இனி நாமும் வேறு வழியைக் கையாண்டால்தான் பிழைக்க முடியும்.
(இந்நேரம் ரோட்டில் ஒரு பெண் செல்லுகிறாள். இரு மைனர்கள் அவள் செல்லும் அழகைப் பார்த்து)
மைனர் : இவள் நடையே தனி அழகு சார்! இந்த மாதிரி உருவப்படி நமக்குப் கிடைக்கணுமே!
வந்த : எல்லாம் பணம் போட்டால் கிடைக்கும் சார்...
(குணசேகரன் மைனர்களை அடித்து)
குண : சிகரெட்...(மைனர்கள் கொடுத்துவிடுகின்றனர்) ஹா...ஹா...லக்ஸ் (இன்று முதல் நானும் ஒரு ஏமாத்துக் காரன்.)
(பைத்தியக்காரன் மூலம் ஏமாத்துக்காரனே பிழைக்க முடியும் என்றபட்டம் பயின்ற குணசேகரன் தானும் ஓர் பைத்தியம் போல் நடித்து ஆடிப்பாடி பலரிடம் பணம் பறிக்கிறான்.)
தேசம், ஞானம், கல்வி, ஈசன் பூசையெல்லாம் காசுமுன் செல்லாதடி குதம்பாய் காசுமுன் செல்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில் காசுக்குப் பின்னாலே—குதம்பாய் காசுக்குப் பின்னாலே காட்சியான பணம் கைவிட்டுப் போனபின் சாட்சி கோர்ட்டு ஏறாதடி
பை பையாய் பொன் கொண்டோர் பொய் பொய்யாய் சொன்னாலும் மெய் மெய்யாய் போகுமடி—குதம்பாய் மெய் மெய்யாய் போகுமடி
நல்லவரானாலும் இல்லா தவனை நாடு மதிக்காது—குதம்பாய் நாடு மதிக்காது கல்வி இல்லாத மூடரைக் கற்றோர் கொண்டாடுதல் வெள்ளிப் பணமடியே—குதம்பாய் வெள்ளிப் பணமடியே
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே—காசுக் காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே
உள்ளே பகைவையடா தாண்டவக்கோனே—காசுக்கு உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே
முட்டாபயலையெல்லாம் தாண்டவக்கோனே—காசு முதலாளியாக்குதடா தாண்டவக்கோனே—காசு கட்டி அழும்போது தாண்டவக்கோனே—பிணத்தைக். கட்டி அழும்போது தாண்டவக்கோனே—பணப் பெட்டிமேலே கண்வையடா தாண்டவக்கோனே