காட்சி—14
காட்சி 14·46 காட்சிகளில்
(மதுரையில் இட்லி கடை வைத்துப் பிழைப்பு நடத்தும் கல்யாணி வீட்டில் ஓர் நாள்—)
சாப்பிடுபவர் : இன்னியோட மூணு ரூபாய் ஆச்சி நாளைக்குத் தர்றேன்,
(இந்நேரம் கடன் கொடுத்த வியாபாரி வருகிறான்.)
வியாபாரி : ஏ கல்யாணியம்மா! கல்யாணியம்மா கொடுக்க வழி இல்லேன்னு ஏம்மா கடன் வாங்குறே?
கல் : இன்னும் ரெண்டுநாள் பொறுத்துக்குங்க; வாடிக்கைக்காரங்க பணம் கொடுத்தவுடனே தர்றேன்.
வியா : அதெல்லாம் முடியாதம்மா; (இந்நேரம் வேணு வருதல்)
வேணு : ஓய்! யாருங்காணும்? தனியாக இருக்கிற பொண்ணுகிட்டே வந்து தகராறு பண்ணுறது? பெரிய மனுஷன் நிக்கறது கண்ணுக்குத் தெரியலே?
வியா : மாப்கரோஜ் மகராஜ்
வேணு : மாப்கரோஜ்—மண்ணாங்கட்டி. ரோஜ்—எவ்வளவு காணும் தரணும்.
வியா : பத்து ரூபாய்,
வேணு : இந்தாங்கணும் (ரூபாய் எடுத்துக் கொடுக்கிறான்)
கல் : அண்ணே! நீங்க தரவேண்டாம்.
வேணு : பரவாயில்ல! போய் இட்லி கொண்டு வா!
(கல்யாணி இட்லி கொண்டுவரப் போகிறாள்)
மைனர் : தனியா இருக்கிற பொண்ணுகிட்டே வந்து இப்படியா கலாட்டா பண்ணது வெட்கங்கெட்ட நாய்ங்க!
வேணு : ஏன் கல்யாணி இந்த மாதிரி தரந்தெரியா தவங்கிட்டேயெல்லாம் ஏன் கடன் வாங்குறே?
கல் : என்ன செய்யுறது அண்ணே? வயிறு வளர்க்கணுமே.
வேணு : அப்படின்னு நான் சொல்றபடி செய்—இப்ப நான் கொடுத்தேன் பாரு பத்து ரூபாய் அதை ரூபாயா தர வேண்டாம். தினம் காலையிலே ரெண்டு ஆளுக்கு இட்லி கொடுத்திடு. நான் இராத்திரியிலே பலகாரம்தான் சாப்பிட்ற வழக்கம் அதுனாலே தினம் இராத்திரியிலே நாலு அணாவுக்கு கொடுத்திடு இந்த பத்து ரூபாய் கழிஞ்சிடும்னு சொல்லு. அப்புறம் போகப் போக உன் நாணயத்தைப் பார்த்து வேண்டிய பணம் தர்றேன்.
மைனர் : ஆமாம்பா! இந்த மாதிரி ஏழைகளுக்குத்தானய்யா உதவி செய்யணும்.