காட்சி—13

காட்சி 13·46 காட்சிகளில்

(மார்வாடிக் கடை)

(சென்னையில் பணத்தை இழந்ததால் மதுரை செல்லப் பணத்திற்காகக் கஷ்டப்படுகிற குணசேகரன்)

வியாபாரி : வாங்கோயா...நிம்மின்கி என்ன வேணும்? சொல்லுங்கோயா?

குண : அய்யா...எனக்கு ஒண்ணும் வேண்டாம் இந்த பேண்டை விலைக்கு எடுத்துக்கிட்றீங்களா?

வியா : இது ரொம்ப புராணு இருக்காங்க! எட்டு அணா தருங்க.

குண : புதுசய்யா! ஐம்பது ரூபாய் போட்டு தைச்சேன் மதுரைக்குப் போகணும் ரயில் சார்ஜ்க்காவது கொடுங்கையா.

வியா : நீப்பன்—பம்பாய் போறன்—மதராஸ் போறன் நம்பள்கி என்னப்பா. எட்டணா தர்றன்

(குணசேகரன் நகருகிறான். ஒரு வீட்டில் போய் பணம் கேட்கிறான்)

குண : அய்யோ! கப்பல்லே வந்தேன்—பணம் பெட்டி எல்லாம் திருட்டுப் போயிடுச்சி.

வீட்டுக் : பணம் பெட்டியெல்லாம் திருட்டுப் போயிட்டா போலீஸ் ஸ்டேஷனிலே ரிப்போர்ட் பண்ணு.

குண : மதுரைக்குப் போகணும் ஏதாவது...

வீட்டுக் : போ...போ...

(இரவு நேரம் குணசேகரன் ஒரு திண்ணையில் தூங்கிக் கொண்டிருக்கிறான், வீட்டுக்காரன் தண்ணீரைக் கொண்டு வந்து ஊற்றுகிறான் குணசேகரன் மீது)

வீட்டுக் : ஏண்டா அயோக்கியப் பயலே! யாரைக் கேட்டுடா இங்கே வந்து படுத்தே?

குண : அய்யா...இன்னும் கொஞ்சம் தண்ணி இருந்தா கொண்டு வந்து ஊத்துங்க! குளிச்சு ரொம்ப நாளாகுது கொஞ்சம் சோப்பு இருக்குங்களா?

வீட்டுக் : அட திருட்டுப் பயலே—(மனைவியிடம்) பார்த்தியாடி இவன் திமிரை?

குண : அம்மா லட்சுமி மாதிரி இருக்கீங்க! உங்க தம்பியாக இருந்தால் இப்படி பார்த்துக்கிட்டு இருப்பீங்களா?

பெண் : பார்த்தீங்களா! தம்பி முறையில்லா கொண்டாட வந்துட்டான் தடிப்பயல்!

வீட்டுக் : கொண்டாடுவான் இன்னும் கொஞ்சம் கழிச்சா ஒவ்வொரு முறையும் கொண்டாட ஆரம்பிச்சிடுவான். நீ முதல்லே போயிடு உள்ளே (உள்ளே போகிறாள்) குணசேகரனைப் பார்த்து போடா போடான்னு...

(குணசேகரன் போய் ஒரு பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறான்)

போலீஸ் : டேய் டேய் டேய் சோம்பேறி பிக்பாக்கெட் அடிச்சிட்டு வந்துதானே படுத்திருக்கே என்னடா முழிக்கிறே

குண : தூங்கிறவனை எழுப்பினால் முழிக்காம வேற என்ன பண்ணுவான்?

போலீஸ் : டேய்! நீ பிக்பாக்கெட் தானே?

குண : (இரண்டு பைகளிலும் கையை விட்டுத் தடவி) இல்லே எம்ப்டி பாக்கெட்

போலீஸ் : பின்ன ஏண்டா இங்கே வந்து படுத்தே?

குண : இங்கக்கூட படுக்கக் கூடாதா? மாடு செய்த புண்ணியம்கூட இந்த மனிதன் செய்யலியா? ஆமா! மதராஸிலே மனுஷன் மிருகமாத்தான் இருக்கான்

போலீஸ் : யாரையடா சொல்றே?

குண : உங்களச் சொல்லலீங்க முதுகெலும்பு ஒடிய ஒடிய மூட்டை வண்டி இழுக்கிறேனே...குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்கத்தெறிக்க ரிக்ஷா இழுத்துக் கூனிப் போயிருக்

கிறேனே நாயைப்போல சுருண்டு நடைபாதையில் குடும்பத்துடன் வாழ்கிறேனே அந்த நல்லவன், நாதியற்றவனை நாலு காலு மிருகத்தைப் போல உழைக்கிறேனே அவனை சொல்லுகிறேன். சென்னை புனிதமான நகரம்! அங்கே மனிதன் மிருகம்.

போலீஸ் : நீ மெட்ராசுக்கு மேயராக வர்ற காலத்திலே மிருகத்தையெல்லாம் மனுஷனுக்கு.

குண : ஏன்...இப்பவே எத்தனையோ மிருகங்கள் மனித உருவத்தில்தானே இருக்கு.

(அந்த இடத்தை விட்டு நகர்கிறான்)

குண : (குழாயைப் பார்த்து)...ஆஹா...கடவுள் தண்ணீரையாவது காட்டினாரே! (தண்ணீர் விழவில்லை) பராசக்தி உன் மகனின் கதியைப் பார். அவனுக்கு உண்ண உணவு இல்ல. உடுத்த மாற்றுத் துணியில்லை! உறங்க ஒரு இடம் இல்ல! பராசக்தி—