காட்சி—12
காட்சி 12·46 காட்சிகளில்
(கல்யாணி கண்ணீர் சிந்திய முகத்துடன் கையிலே குழந்தையை வைத்துக்கொண்டு வாசலில் உட்கார்ந்து பாடுகிறாள்)
பூமாலே நீயே புழுதி மண்மேலே வீணே வந்தேன் தவழ்ந்தாய்? (பூமாலே பாராயோ என் பன்னீர் செல்வமே சீரோடு வாழ்ந்தோம் வேரோடு சாய்ந்தோம் ராஜாங்கம் போலே வாழ்ந்த வாழ்வும் வீழ்ந்ததே பாரான எந்தன் வயிற்றில் பிறந்தாய் ராஜா? நீயேன் பிறந்தாய் (பூமாலே பறவை வீட்டில் நீ பிறந்திருந்தாலும் பசி நீங்கவே உணவும் பறந்தோடி வந்திடும் கோடானு கோடி ஏழை மாந்தர் வாழும் சீமான்கள் வாழும் நாட்டில் பிறந்தாய்—ராஜா நீயேன் பிறந்தாய்? (பூமாலே
(பாடல் முடிந்ததும் பார்வதி வருகிறாள்)
பார் : கல்யாணி எப்ப பார்த்தாலும் இப்படிக் கண்ணீரும் கம்பலையுமாக இருந்தால் என்ன ஆகும்? நடக்க வேண்டியதைப் பாரு.
கல்யா : இந்தக் குழந்தையை வளர்க்க யாராவது முன் வந்தால் நடக்க வேண்டியதுதானே நடக்கும்.
பார் : குழந்தை என்ன செய்யும் பாவம்...
கல் : அக்கா குழந்தை ஒண்ணும் பாவமில்ல! இந்தக் குழந்தையை வறுமையிலே வளர்க்க முடியாததுதான் பெரிய பாவம்.
பார் : கல்யாணி! நான் சொல்வதைக் கேளு. ஊர்க் கோடியிலே எங்களுக்கு இருக்கும் காலி மனையிலே ஒரு வீடு ஒண்ணு கட்டிக்கோ ஒரு சாதாரண இட்லி கடை வைத்தால் வயிறு வளர்க்க முடியாமலா போகும்?
கல் : ஆ! இட்லிக் கடையா?
பார் : தமிழ் நாட்டிலே தாலி அறுத்தவர்களுக்கெல்லாம் அது தானே தாசில் உத்தியோகம்.