பிரிவு 6 / 11

ஒருதலைக் காதல் — 6

One-Sided Love — 6

X
உறுபகையின் நெடுவாலை ஒட்ட அறுத்து,இருகிழமை நடந்த போரில் வெற்றிகுவித்துமுக்காவல் நாட்டு மண்ணின் முரசதிர,எக்காள முழக்கம் எட்டுத்திசை ஒலிக்க,வருகின்றான் தித்தன் மகன் என்று வாழ்த்திதருகின்றார் வரவேற்பு ஆமூர் மக்கள்!
மணலில்லை வீதிகளில்; மலர்களேதான்!முகிலில்லை விண்வெளியில்; கொடிகளேதான்!வீட்டுக்குள் இருந்திட்ட மாந்தரெல்லாம்நாட்டுக்கு வெற்றி தேடித்தந்தவனைக் காண்பதற்கு,காட்டுக்குள் பெய்திட்ட மழைநீராய் ஓடிவந்தார்!
கூட்டுக்குள் கிடக்குமோ நற்கண்ணைக் கிளி மட்டும்?“வெற்றி யாருக்கு?” என விரைந்தோடி வந்தவளை,“வேறு யாருக்குக் கிட்டும்?” எனத் தழுவிக் கொண்டு,சுற்றிச் சுழன்றாடுகின்றாள் பொற்கொடியாள்! அந்தச்சுந்தரியோ மகிழ்ச்சியெனும் சுமைதாங்க முடியாமல்தள்ளாடுகின்றாள்!
பேரிகையின் ஒலிக்கேற்பப் பீடுநடை போட்டுபெருமிதமாய் நிமிர்ந்துவரும் வெண்புரவிமீதுதூரிகை கொண்டெழுதா வீர ஓவியமாய்ப்பெருநற்கிள்ளி அமர்ந்திருந்தான்!
களம் புகுந்து ஓய்வின்றிப் போர்புரிந்த காரணத்தால்முகம், மழிக்க நேரமில்லை போலும் - அதனாலேகருநிறமுடி கொஞ்சம் நாற்றுவிட்டுக்குறுந்தாடி போலத் தோற்றமளித்திடினும் - அதுவும்
நற்கண்ணை நயனங்களில் புதிய போதையூட்டிநாடி நரம்பெலாம் காதல் இசை மீட்டியது!ஆமூர் வீதிகளின் இருமருங்கும் வாயிலோரம்ஆடவர் பெண்டிர் அகலவிழித் திறந்துகொண்டு
கச்சைகட்டிக் களம் சென்ற தம் வீட்டுச் செல்வங்களில்மிச்சம்மீதி, யார் வருவாரென எதிர்பார்த்து நின்றிருந்தார்!
வாள் ஓங்கிப் பிடித்தவாறு வரும் வீரன் - தாய்தந்தைதாள் வணங்கித் தன்னுயிர்ப் பேடைதனைத் தழுவிக்கொள்வான்!மற்றோர் போர்வீரன் களத்தில் மறைந்த செய்தியினைமாலையொன்றை வாளுக்கிட்டுத் தந்து,மறைமுகமாய் வீட்டார்க்கு உரைப்பர்;மகனையிழந்த தாய்தந்தை ஆயினும்மங்கலமிழந்த மனைவியே ஆயினும்மனப்புயல் அடக்கிக்கொண்டுமண்புகழ் ஓங்கிற்றென்பார் - அவர்கண்மட்டும் சோகம் காட்டும் - நெஞ்சம்புண்பட்டுப் போவான் கிள்ளி!
ஓரிடத்தில்,தந்தை தனக்கென ஒடித்துவந்த யானையின்தந்தங்கள் கண்டு மழலைகள் குதிக்கும்!
பிறிதோரிடத்தில்,“தந்தை ஏன் வரவில்லை அம்மா?” என்றுதளிர்நடைப் பிள்ளைகள் கொதிக்கும்!
குதிரை மீதமர்ந்தவாறு கிள்ளி அவற்றைகுமுறுகின்ற உள்ளமுடன் பார்ப்பான் - “நாட்டைக்கொலைக்காடாய் ஆக்குகின்ற போர் ஒன்றுதேவைதானா?” என்றுகுற்றத்தால் குறுகுறுக்கும் நெஞ்சத்தைக் கேட்பான்!“மாற்றார்; அமைதியெனும் கொள்கையினைக்கோழைத்தனமெனக் கூறும்வரைமாற்றமுடியுமோ மானமிகு வீரர்களின் போர்க்குணத்தை?போர்வாளைப் பகையாளி ஓங்கும்போது - நாம்மட்டும்பூப்பறித்துக் கொண்டிருந்தால்;வீரமெனும் சுடுநெருப்பு;ஈரம்பட்ட கரிதானே?”உறுத்துதலால் உருகிவிட்ட கிள்ளியின் நெஞ்சில்உடனடிக் கேள்விகளாய் இவை பிறக்கும்!
“நிறுத்தலாமே போரை” என்ற நியாயவாதம்நில்லாமலே ஓர் நொடியில் பறக்கும்!“போர்வாளைத்தான் காதலிக்கின்றேன் - எனையீன்ற தமிழ்ப்பூமியைத்தான் நேசிக்கின்றேன் - எதிரியின்கூர்வாள் ஒன்று என் மார்பைக் கீறிக்கொட்டுகின்ற ரத்தம்தான் மணம் வீசுகின்ற சந்தனமாம்!வீரர்களைக் களத்தில் இறக்கிவிட்டுவேடிக்கை பார்க்கும் வீணனல்ல!வெங்கொடுமைச் சாக்காட்டுப் போர்க்களத்தை நான்
விளையாடும் பூக்காடாய் ஆக்கிக் கொண்டேன்!சிங்கமெனச் செருமுனையில் சீறுகின்ற படையிலோர்அங்கம் நான்! அவர்களில் ஒருவன் நான்!களம்பட்டு மாண்ட வீரர்களைத் தொழுதிடுவேன் - அந்தக்கடமை வீரர் வகுத்தவழிதான் எனக்குமென்று,பகைவர் உடல் வாளால் உழுதிடுவேன்!”
இவ்வாறு,உள்ளத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டுவெள்ளம் போல் திரண்டமக்கள் வாழ்த்தொலிக்குக்கையசைத்துமுக்காவல் நாடுபெற்ற வெற்றியினைக் கொண்டாடும்முத்துமண்டபத்துள் நுழைந்திட்டான்!
ஆமூர்த்தலைவன் அவனை ஆரத்தழுவி வரவேற்று,“அஞ்சா நெஞ்சினனே! நீ பொற்காலம் படைப்பாய்ச்சோழநாட்டில்!” என்றான்.
சாத்தந்தைப்புலவர் அருகில் வந்து உச்சிமோந்து,“சரித்திரத்தின் வைர எழுத்தாய் ஒளிவிடுவாய்” என்றார்!பின்னர், சுற்றுமுற்றும் பார்த்த புலவர்;“இன்னும் எங்கே காணவில்லை நற்கண்ணையை?” என்றார்!ஆயிரத்தில் ஒருத்தியாக அரங்கின் கோடியிலேஅமர்ந்திருந்தாள் நற்கண்ணை, தன் தோழியுடன்!
“அவளை எதற்காகத் தேடுகின்றீர் புலவரய்யா?அதைக் கொஞ்சம் சொல்லுங்கள் முதலில்” என்றாள்;குவளை மலராம் நற்கண்ணைக்கு அன்னையெனவாய்த்திட்ட பெருந்தேவி!
“எதற்காகப் புலவர் அழைப்பார் என்று நாணிடுவேன்குதர்க்கமாய் நீ எதுவும் கேட்டு குழப்பாதே” என்று,பெருங்கோழிநாய்கன் குறுக்கிட்டுத் தடுத்துபெருந்தேவி நாச்சியாரைக் கையமர்த்தி வாயடைக்கச்செய்தான்!
“நற்கண்ணை, நல்ல தமிழ்க் கவியரசி என்பதால்நற்கிள்ளி பெற்ற வெற்றியினைப் பாராட்டிஅற்புதமாய்ப் பாடல் ஒன்று வழங்கிடுவாள் என்றே, - அன்புதழைத்திட்ட உள்ளத்தால் - அவளைஅழைத்திட்டேன்” என்றார் புலவர்!
“வெட்கம் இன்னும் எதற்காகப் பெண்ணே!கடகம் ஏந்திய காளையின் முன்னே,கயல்விழியே; நீ நின்று புகழ்ப்பாட்டு உரைத்திட்டால்,காலத்தை வென்று நிற்கும் புறப்பாட்டாய் அது,அமையும் கண்ணே!தயங்காமல் சென்றிடுக, அவை நடுவே! உன் பாடல் கேட்டு;மயங்காமல் போகமாட்டான் உன் மனங்கவர்ந்தோன்” எனத்துணிவுரை தந்த தோழியின் செவியில்தோகை நற்கண்ணை உதிர்த்த சொற்கள் - அந்தபொற்கொடி புகன்றதுபோல்புறப்பாட்டாய் ஆனது உண்மை!
1) “கண்ணுக்கிடும் மை போன்ற கருத்த குறுந்தாடியுடன்காலில் வீரக்கழல் அணிந்த இளங்காளையினைக் கண்டுகைவளைகள் தானே கழன்று எனைக் காட்டிக்கொடுக்குமென
கன்னியெனப் பெற்ற என் தாய்க்காக அஞ்சுகின்றேன்!கடும்பகை வெல்லும் கிள்ளியின் தோள் தழுவற்குகனிமரம் கண்ட கிள்ளைபோல் தவிக்கின்றேன் - எனினும்,கற்றறிந்தோர் குழுமியுள்ள அவையினைஎண்ணினால், இந்தநற்கண்ணையினை நாணம் வந்து தடுக்குதடி!”
தோழி குறுக்கிட்டு,“ஆதியிலே இருந்திருக்க வேண்டுமிந்த அறிவெல்லாம்- இப்போதுபாதிப்பனை ஏறியபின் அஞ்சுவதால் என்ன பயன்?மீதிமரம் ஏறினால்தான் நுங்கெடுத்துச் சுவைக்கலாம்!பீடிகொண்டு இறங்காதே! பின்னர் பீத்து கொண்டு திரியாதே!”தோழியின் சொற்கேட்டு நற்கண்ணைத்துணிவுடனே எழுந்து வந்து - அவையோரைத்தொழுது நின்றாள்!
ஆழியின் முத்துப் போல் தமிழ் எடுத்துஆமூர்த் தலைவனுக்கு வணக்கம் சொல்லி,
அறிஞர் பெருந்தகை சாத்தந்தையின்அடிதொட்டு வாழ்த்துப் பெற்று,
அயலாரை வென்று வந்த உறையூர் இளவரசைக்கயலாடும் விழியாலே கண்டு களித்து;
அவன் அஞ்சா நெஞ்சுக்கோர் எடுத்துக்காட்டு;அவள், அவனை நினைத்தேங்கும் அகத்துறைப்பாட்டு;
வெற்றி விழா காண வந்தோர் வியந்து போற்ற
நெற்றியினைச் சுருக்கிக் கொண்டு, தாய் மட்டும்விழித்துப் பார்க்கப் பாடுகின்றாள்!
2) வலிய தன் பாதத்தால் தாக்குண்ட விலங்குகள்வலப்புறம் வீழ்வதல்லால் இடப்புறம் வீழ்ந்தறியாவேங்கைப்புலியினையும் வேட்டையாடிவெல்லுகின்ற ‘பாணி’ என்னும் மிருகங்கள்குன்றனைய யானைகளைக் கொன்று அதன்கொம்புகளை முறிக்கின்ற,குளிர்ச்சோலையடர் மலைத்தொடர்களிடையேகூர்வேல் ஒன்றை மட்டும் துணையாய்க் கொண்டு - எனதுபோர்த்தலைவன் தனியனாய் வருவதற்கு அஞ்சிடான்!அவனைப் பிரிந்திருக்கும் நானோஅந்தப் பிரிவென்னும் நோயினால் அவதியுறுகின்றேன்!பனித்துளி பொழியும் என் கண்களைத் தேற்றிஇனி ஆற்றுவதுதான் எவ்வாறு தோழி?”
நற்கண்ணை பாடி முடித்து நடுங்கினாள் தாயைப் பார்த்து!“நானிருக்க பயமேன் நங்காய்!” என்றுரைத்தவாறுபொற்புடைய புலவர்பிரான் அவையை நோக்கி;“கற்புடைய இக்குல விளக்கை உங்கள் முன்னேஇளவரசன் நற்கிள்ளி பெற்ற வெற்றிக்குப் பரிசாகவளமிகு பெருங்கோழிநாய்கன் வழங்குவதற்குமுன்வந்துள்ளார்!விருப்பம் பெண்ணுக்குண்டு நானறியேன்!மறுப்பேதும் கூறாமல் ஒப்புக்கொண்டுள்ளார் தந்தை!தாய்க்கு மட்டும் இது நடக்குமா என்ற தயக்கம்! அதனால்
தமிழ் மலரை கிள்ளியின் தடந்தோளில் சூட்டுதற்குத்தடையாக யாருமில்லை” என்றார்!
“தடையுண்டு” எனத் தனல் மொழி பொழிந்தவாறுபடைகொண்டு வென்று வந்த நற்கிள்ளி அதிர்ந்தெழுந்தான்!“போர்வாளைத்தான் நான் காதலிக்கின்றேன்;பூவிதழை அல்ல! அல்ல, அல்லவே, அல்ல!” என்றான்!போய்விட்டான் அவையை விட்டு!
தாய்போட்ட கூச்சல் செவியைத் துளைத்திடுமுன்உலகம் இரண்டு சுற்றியதால் நற்கண்ணை; இதயம்உடைந்து நொறுங்கத் தரையில் சாய்ந்தாள்!
★ “அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்கு, என்தொடிகழித் திடுதல்யான் யாய் அஞ்சுவலே;அடுதோள் முயங்கல் அவை நாணுவலே....”
(புறநானூறு : பாடல் : 83பாடியவர் : நற்கண்ணையார்)
★ “இடம்படு அறியா வலம்படு வேட்டத்துவாள்வரி நடுங்கப் புகல் வந்து, ஆளிஉயர்நுதல் யானைப் புகர்முகத்து ஒற்றி,வெண்கோடு புய்க்கும் தண்கமழ் சோலைப்பெருவரை அடுக்கத்து ஒருவேல் ஏந்தித்தனியன் வருதல் அவனும் அஞ்சான்;பனிவார் கண்ணேன் ஆகி, நோய் அட,
எமியேன் இருந்தலை யானும் ஆற்றேன்,யாங்குச் செய்வோம் கொல் - தோழி!...”
(புறநானூறு : பாடல் : 252பாடியவர் : நற்கண்ணையார்)
பொருள் விளக்கம் :1) மை அணல் = மை போன்ற தாடி. தொடி = வளையல்.கழித்திடுதல் = கைவிட்டுக் கழன்று விழுதல். யாய் = தாய்.முயங்கல் = தழுவுதல்2) வலம்படு = வலிமையுள்ள. வாள்வரி = புலி.புகல்வந்து ஆளி = வெற்றி விருப்புடன் வந்த யாளி எனும்ஒருவகை மிருகம். ஒற்றி = அறைந்து கொன்று.
♦ ♦ ♦

மூலமும் சான்றும்