பிரிவு 5 / 11

ஒருதலைக் காதல் — 5

One-Sided Love — 5

X
“நானும் சிலநாளாய்ப் பார்க்கின்றேன் உன்னை!‘தேனும் கசந்ததடி’ எனும் நிலையில் இருக்கின்றாய் பெண்ணே!
பருவத்தின் கோளாறெனக் கண்டும் காணாதிருந்தால் ஒருதுருவத்தில் நின்று நீ, மறுதுருவத்தைத் தொடுகின்ற முயற்சியிலே
இளங்கன்று பயமறியாதென்பது போல் ஈடுபடல்தீதாகும் - அதனை,இப்போதே தடுத்துவிடல் ஒரு தாயின் கடமையாகும்!
உச்சிமலை மீதுள்ள குறிஞ்சி மலர் பறிப்பதற்குஊனமுற்றுக் கால்நொண்டும் பெண்ணொருத்தி முனையலாமா?
உருள்பெருந்தேரின் கலசத்தில் ஒளிர்கின்ற கொடி அசைய,உறையூரின் சோழமகன் போர்முனைக்குச் செல்லும்போது; நீ
ஓடிச்சென்று வழிமறித்து உரையாடல் நிகழ்த்தியதைஊர்கண்டால் என்ன சொல்லும்?
பேர்கொண்ட பெருவணிகன் குடும்பத்துக்கோர் இழுக்குவரின்நேர் நின்று உற்றார் முன் பேசுதற்கு உன் தந்தைநாணவேண்டும்!
வாணிபக் குடியினர் நாம் - அவனோ வையம் ஆளப்பிறந்த குலம்!ஏணிகள் அடுக்கடுக்காய் வைத்தாலும் எட்டாத காதலுக்கு,
ஏங்கித் தவிக்காதே, ஏந்திழையே! என் மகளே!வீங்கிக் கிடக்குது உன் விழியிரண்டும் விரால் மீனாய்!
தூங்கித் தொலைத்திடுக; முன்போல சேல்கெண்டைஆகிவிடும்!”
ஆத்திரத்தைக் காட்டியும் அரவணைப்பைக் கொட்டியும்
அறிவுரை புகன்ற அன்னை, அவளை விட்டகன்ற பின்னே“அவனை மறப்பதெனில் என் ஆவியைத் துறக்கவேண்டும்” என்றலறி,
அணைத்துக் கொண்டாள் நற்கண்ணை; பொற்கொடியை!“மறப்பதா? ஆவிதுறப்பதா? என்பதை நாம்மறுபடி யோசிக்கலாம்; முதலில்அல்லதை விடுத்து நல்லதையே சிந்திப்போம்!புல்லர்தம் படையுடன் பொருதிடும் கிள்ளியைப்பொழுதெல்லாம் நீ எண்ணியெண்ணி - கன்னத்தில்உழுதிடும் அளவுக்குப் பெருக்குகின்றாய் கண்ணீர்!தடுக்கின்றாள் அன்னையென்று துடிக்கின்றாய்,ஒடிக்கின்றாள் உன் மனத்தையென்று நினைக்காதே!ஓடுகின்ற கோயில் தேர்களுக்குப்போடுகின்ற முட்டுக்கட்டையெல்லாம் - தேரைஓடாமல் செய்வதற்கா? இல்லை, இல்லை! தெருவில்ஒழுங்காகச் செல்வதற்கே!பாய்ந்தோடும் குதிரையின் கடிவாளம் இழுத்தலும் தளர்த்தலும்,ஓய்ந்து ஓரிடம் வீழ்ந்து கிடப்பதற்கோ?
ஆய்ந்துபார் ஆரணங்கே!காய்ந்து சினந்து கடிந்துகொண்டாலும் அன்னை,
தேய்ந்திடுநிலவாய் நின்காதல் ஆகாதிருக்கவேஎச்சரிக்கின்றாள் உன்னை!
வளர்பிறையாய் உம் காதல் வளர்ந்துகுளிர்நிலவாய் அமுதமழை பொழிந்தால்குலமகளே! உமை வாழ்த்தாமல்உன் தாயின் மனமென்ன;நிலமகழ்ந்து எடுத்திட்டஇரும்பாகப் போமோ?
கருவுற்ற காலத்தில் அவள் நாவினைக்கசப்பாக்கித் தொல்லை தந்தபோதுதிருவுற்ற அந்தத் தாய்புளிப்பாலே கசப்பு போக்கி - உன்புன்னகை காணத் தவமிருந்தாள்!ஆலின் இலைபோன்ற அவள் அழகு வயிற்றை - ஒரு சாலின்வடிவாக்கி நீ அலங்கோலம் தந்தபோதும்,
உன் கோலம் காண்பதற்கே - அவள்உயிர் வாழ்ந்து கொண்டிருந்தாள்!மணிவயிற்றுக்குள்ளிருந்து நீமாறி மாறி உதைத்தபோதும்,வலிபொறுத்துக் கொண்டபடிஅணியென்ன பூட்டலாம் அந்தக் காலுக்கென்றுஆயிரம் சிந்தனை செய்திருந்தாள்!
ஊதையில் துரும்பெனத் தாயுடல் அலைக்கழித்துஉலகில் நீ பிறந்துருண்டு அழுதபோது - இன்பபோதையில் துன்பமெலாம் மறந்திருந்தாள்! இன்றவள், உன்
பாதையில் பாடம் சொல்லல் ஒரு பாபமா?பூவைத்துப் பொட்டிட்டு முத்தமாரி பெய்தபோது - நீ,பூவையாய் ஆவது எப்போதென்று ஆண்டெண்ணிக்கிடந்த அன்னை;
கோவையாய்ச் சிவந்த உன் இதழைக் கிளியொன்றுகொத்துமென்று தெரியாத பேதையா என்ன?ஆற்றில் இறங்கிக் குளிக்கத் தடைகூறவில்லை அன்னை!ஆழம் தெரிந்து இறங்கென்று கூறுகின்றாள் அவ்வளவே!அதற்குள் நீ அவன் வருமட்டும் வழிபார்த்துக் காத்திருந்துஅல்லும் பகலும் உறக்கமின்றி வாடிவதங்கி,உடலைக் கெடுத்துக் கொள்கின்றேன் என்றால்;உனை உயிராக நினைக்கின்ற பெற்றோர்கள் ஒப்புவரோ?உன் தோழி கெஞ்சுகின்றேன்; உடனே கேள்!உறங்கி எழு! உற்சாகமாய் இரு!உறையூர் எங்கும் ஓடிவிடாது - உன்அறையூரில் அடங்கத்தான் போகிறது!” என்றுரைத்துச்சிரித்தாள் தோழி!
“உறங்காமல் இருக்கவில்லை நான்!உறங்கித்தான் விழித்துக் கொண்டேன் - சற்றுசிணுங்காமல் கேள் என் கதையை!கண்மூடித் துயில் கொள்ளும் நேரம்,கனவில் என்னை நெருடுவதும் அவன் நினைவே!”
★ “ஊர்நடுவே உயர்ந்து நிற்கும் மாமரத்தில்முட்களைப் போல் பற்கள் கொண்ட வெளவால்ஊஞ்சலாடி ஒரு கிளையில் தலைகீழாய்த் தூங்கி
அழிசியெனும் ஆர்க்காட்டுச் சோழவேந்தனதுஅடர்த்திமிகு காட்டகத்து நெல்லிக்கனியின்இளம்புளிப்புச் சுவையை நுகர்வதாக,இனிய கனவொன்று கண்டது போல்;கன்னியென்னையும் கனவொன்றுமெய்மறக்கச் செய்ததடி!காலமெல்லாம் அக்கனவில் திளைத்திருந்தால்காதலரிருவர் கட்டுண்டு மகிழ்ந்திருப்போம்!கண்கள் செய்த தவறாலே விழித்துக் கொண்டேன்;கலைந்ததடி இன்பமெலாம் கதிர்பட்ட பனிபோலே!”
இவ்வாறு,பொற்கொடிக்குத் தான் கண்ட கனவைநற்கண்ணை எடுத்துரைத்துத் துவண்டபோது,போர்முரசின் வெற்றிஒலி - விண்ணைப்பொடிசெய்யும் விதத்தினிலே எழுந்ததுகாண்
“வெற்றி யாருக்கு? யாருக்கு?” என்று நற்கண்ணைவீதிக்குப் பறந்து வந்தாள்!
★ “உள்ஊர் மாஅத்த முள்‌எயிற்று வாவல்ஓங்கல் அம்சினைத் தூங்குதுயில் பொழுதின்வெல்போர்ச் சோழர் அழிசிஅம் பெருங்காட்டுநெல்லிஅம் புளிச்சுவைக் கனவி யாஅங்குஅதுகழிந்தன்றே தோழி ....”
(நற்றிணை : பாடல் 87பாடியவர் : நற்கண்ணையார்)
பொருள் விளக்கம் :முள்எயிற்றுவாவல் = முள்போன்ற பற்களையுடைய வெளவால். மாஅத்த ஓங்கல் அம்சினை = மாமரத்தின் உயர்ந்த அழகிய கிளை. தூங்குதுயில் = தொங்கிக் கொண்டு உறங்குதல்.
♦ ♦ ♦

மூலமும் சான்றும்