பிரிவு 4 / 11

ஒருதலைக் காதல் — 4

One-Sided Love — 4

X
“ஆமூர்ப் பெருமக்காள்; ஆர்த்தெழுவீர் போருக்கு!அதிரட்டும் முக்காவல் நாட்டுக் கோட்டை முரசங்கள்!
நாப்பறை கொட்டி நம்மண் மீது காலூன்றும் பகையைப்போர்ப்பறை கொட்டிப் புழுதி மேடாக்கிடுவோம்!
கருவாகி உருவானார் ஒரு பெண் வயிற்றில்;கல்லறை வடிவானார் இந்த மண் வயிற்றில்!
நிறைவான வாழ்வு எனல் நூறாண்டு வாழ்வதல்ல!குறைவான வயதில் மாய்ந்திடினும்; அஃதோர்
குறிக்கோளுக்காக எனில் - அதனைவிடநிறைவான வாழ்வெதுவும் மானமுள்ளோர்க்கில்லை!
மணிமகுடம், மாணிக்கச் சிம்மாசனம், மஞ்சம், கொஞ்சல்,பணிபுரியப் பன்னூறு ஆளும், தேளும் கைகட்டிநின்று- கெஞ்சல்!
இவையனைத்தும் பெறல் எளிது இவ்வையகத்தில்!இளித்தும், நெளித்தும், ஏற்றியும் போற்றியும்,
இங்கிதம் அறியாதவனை இணையிலா ஏந்தலென்றும்இன்சொல் பயிலானை நன்னெறி ஆசான் என்றும்,
பண்பாடு மறுப்போனை, பார்புகழ் மேதை யென்றும்பழிவாங்கும் குணத்தோனை, பரந்தமனச் சான்றோன் என்றும்
நாயினும் கீழாய்ப் பிறரை மதிப்பவனைத்தாயினும் சாலச் சிறந்தோன் என்றும்,
கல்லா மூடனைக் கற்றறி பெரியோய் என்றும்,பொல்லாக் கயவனைப் புவிக்கோர் நல்லாய் என்றும்,
இல்லாச் சிறப்பெலாம் எழுதியும் பேசியும்எல்லாம் பெறுவது எளிதே இவ்வையகத்தில்! - ஆனால்;
மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டுமரணம் தழுவினும் களத்தினில் சிரித்து,
மார்பினில் விழுப்புண் தாங்கியே வீழ்ந்து,மாப்புகழ் எய்திடல் மாணப்பெரிதே!
குலமகள் ஒருத்தியைப் புணர்ந்து குலாவிக்கொள்ளை இன்பம் பெறுவதைக் காட்டிலும் - நம்
நிலமகள்; பகைவர்க்கு அடிமையாகாமல்தடுத்திடும் போரில் நம்முயிர் தந்து - அவள்
நெடுமடிதனிலே நீள்துயில் கொள்ளலேநீடித்த இன்பம், நிலைத்திட வழியாம்!
இமிழ் கடலின் அலைபோல எழுந்தும் வீழ்ந்தும்,தமிழ் இனத்தின் வரலாறு தடுமாறிப் போகாமல்;
கமழ்சோலை மணம்போல காசினியில் பரவுதற்குஅமிழ்தான உயிர்க் கொள்கை மானமொன்றே!அக்கொள்கையினை யாரிடமோ அடமானம் வைத்துவிட்டுஅணிமணிகள், அரண்மனைகள் தக்கவைக்கும் மனிதர்களைத்
‘தக்கை மனிதர்’ என்போம்!தமிழரென ஒப்பமாட்டோம்!
எனவே
கார்காலத்து மழைத்தூறல் எனக் கணைகள் வந்து தைத்திடினும்,கழனி மடைகளிலே துள்ளுகின்ற கெண்டைமீன்களெனவேல்கள் வந்து பாய்ந்திடினும்,
முகபடாம் பூண்டு சினந்தோடி வரும் யானைகளின்முரட்டுத் தந்தங்கள் குத்திக் கிழித்திடினும்
மங்கையொருத்தியின் இதழையும் வெல்லும்,மரணத்தின் தழுவல் என்று; போர்ச்
சங்கை எடுத்து முழங்கிடுக! - களத்தில் நும்பங்கைச் செலுத்திட முன்வருக!”
இவ்வாறு,வாழை மரங்களையும்வைரம் பாய்ந்த தேக்குகளாக்கி
கோழைகட்கும் முதுகெலும்பு வழங்குகின்ற உரையைசோழன் நற்கிள்ளி சொல்லி முடித்தவுடன்
புழுக்கள் கூடப் புலியாக உருவெடுத்துப் பகைஅழுக்கைப் போக்குதற்குப் படைஎடுத்த காட்சி என்னே!
ஆமூர் வீதியிலே,அணிவகுத்துச் செல்கின்ற படை நடுவேமணிமுடியாய் நற்கிள்ளி, தலைமையேற்க
அவன் தேர் அருகே சாத்தந்தை ஒரு தேரில் வீற்றிருக்கநமனையஞ்சாப் படை திரண்டு வருதல் கண்டுநற்கண்ணை, பொற்கொடியின் தோள்மீது முகம் புதைத்து,உளம்புகுந்தோன் திருவுருவைக் கண்ட களிப்பும்,களம்புகுந்திடுகின்றான் அவன் என்ற தவிப்பும்,அகத்தில் தோன்றி ஆட்டிப் படைத்திடமுகத்தில் மலர்ச்சி காட்டிட முயன்று;“நலமுடனே திரும்புக நம் நாட்டுப்படைகள்”, என்றுகுலக்கொடியாள் கண் கலங்க வாழ்த்தி நின்றாள்!
“அதோபார்! சாத்தந்தை” யென்று குதித்துஅவள் தோழி பொற்கொடி அருகிலோர் தேரினைக்காட்டியதுதான் தாமதம்; கண்ணிமைப்போதில்காற்றையும் தோற்கடித்துப் பாய்ந்து பறந்துகவிஞரின் தேர்முன்னே போய் நற்கண்ணை நின்றாள்!கன்னியுள்ளம் புரிந்துகொண்ட புலவர்பிரான் இறங்கி வந்து;“கவிப்பாவாய்! உனக்குக் கவலையேதும் தேவையில்லைபகை எதிர்த்து வெற்றி வாகை சூடிக்கொண்டுநகை முழக்கி வந்திடுவான் நற்கிள்ளி!” என்றுரைத்தார்!
“உண்மையில் வெற்றி உறுதி என்கின்றீரா? என்உயிரையே உம்முடன் அனுப்புகிறேன்” என்றாள்!
“ஒரு சொல்லில் உன் இதயத்தில் நீஉருவாக்கி வைத்துள்ள சிற்பத்தைக் காட்டிவிட்டாய்”என்றார் புலவர்!
நாணத்தால் குனிந்த தலை நிமிராமல் நற்கண்ணை;“நம்நாட்டு வெற்றிக்கு உங்கள் வாழ்த்துத் தேவை”, என்றாள்!
“நாட்டோரின் வெற்றிக்கு மட்டுமல்ல; நற்கிள்ளியிடம்நீ கொடுத்தபாட்டோலை வெற்றிக்கும் பாடுபடுவேன்”, என்றார்!
கைமலரை, அவர் கால்மலரில் வைத்துத் தொழுது,“கரந்தைப் போர் வெல்க!” என்றாள்!
அதிலென்ன ஐயமென்று சாத்தந்தைஅப்போதே கவிதை யாத்தார்!
★ “ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறேகார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;யார்கொல் அளியர் தாமே ஆர்; நார்ச்செறியத் தொடுத்த கண்ணிக்கவிகை மள்ளன் கைப்பட்டோரே?”
(புறநானூறு : பாடல் : 81பாடியவர் : சாத்தந்தையார்பாடப்பட்டோன் : சோழன் போரவைக்கோ பெருநற்கிள்ளி)
புலவர் பெருமானின் உறுதிமிகு பாடல் கேட்டுப்புன்னகையைத் தவழவிட்டாள் அந்தப் பூங்கொடியாள்!
அப்போது,“படை முகத்தில் பாட்டென்ன பாவலரே?” என்று - இளநகையை முகத்தில் தேக்கி இளவல் கிள்ளி வந்தவுடன் - “இந்தமுல்லைக்கொடி; போரினால் உனக்குத் தொல்லைவருமோ எனக் கலங்குகிறாள்” என்றார்!“தொல்லை ஒரு வேளை வந்தாலும் வரலாம் -அதனால் ஓடிவிடலாம் என்ற அறிவுரையா?” என்றான்!
நற்கிள்ளியின் கேலியும் கோபமும் கண்டுநற்கண்ணை, படபடத்துப் போனாள் எனினும்;நயமாய்ச் சொன்னாள் -
“ஏறு தழுவி வென்றவர்க்கு மாலை சூடும்தமிழ்நிலத்தில் - போரில்ஓடி நழுவுகின்ற ஆடவரை ஒரு பெண்ணும் ஏற்கமாட்டாள்!”அதற்கு வெடுக்கென்று பதில் சொல்ல விரைந்தான் கிள்ளி!
அதற்குள், “விளையாட்டு போதும்!” என்றுபுலவர்பிரான் தடுத்துவிட்டு,
“நற்கிள்ளி வீரம்பற்றி நானறிய மாட்டேனா? - இதோ;நற்கண்ணைக்கு நான் சொன்ன பாடலின்பொருளைக்கேள்!” என்றார்!
“ஆத்திமாலை சூடியுள்ள சோழ இளவல்அணிவகுத்து நடத்துகின்ற போர்ப்படையோ;ஆர்த்தெழுந்து கிளப்புகின்ற ஒலியாலே,
அலைகடல் ஏழினையும் வெல்லுமாம்! அவன்களிறுகள் களத்திலிடு முழக்கமோ எனில்கார்கால இடியோசைதான்! இந்நிலையில்அவன் கையினில் பகைவர் சிக்கிவிடின்?அந்தோ; அந்தப் பரிதாபத்துக்குரியோர் யாரோ?”
புலவரின் புகழ்ச்சியுரை பிடிக்காமல் அவன் தலைகுனிந்தான்!பூரிப்புப் பெருமிதத்தால் நற்கண்ணை தலைநிமிர்ந்தாள்!
அதற்குள் ஒரு குரல் :-“என்னடி மகளே இது! எங்கு வந்தாய் - இங்கே?இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை?”
பொன்னகை ரதம் போலப் பெருந்தேவித் தாய் தோன்றி, அவள்புன்னகை மறையத் திட்டி வீட்டுக்குள் இழுத்துப் போனாள்!
பொருள் விளக்கம் :கார்ப்பெயல் உருமின் - மழைக்கால இடி முழக்கம்.நார்ச் செறியத் தொடுத்த ஆர்கண்ணி - நார் கொண்டுதொடுக்கப்பட்ட ஆத்திமாலை. அளியர் = பரிதாபத்திற்குரியவர். கவிகை மள்ளன் = கொடையாளியான வீரன்.
♦ ♦ ♦

மூலமும் சான்றும்