கவிதை 44 / 77

என் இனிய நண்பா! ஏன் பிரிந்தாய்?

My Dear Friend! Why Did You Leave?

X
என் இனிய நண்பா!ஏன் பிரிந்தாய்?
கவியரசு கண்ணதாசன் மறைந்தபோது கலைஞர் எழுதியது
என் இனிய நண்பா!இளவேனிற் கவிதைகளால்இதய சுகம் தந்தவனே! உன்இதயத் துடிப்பை, ஏன் நிறுத்திக் கொண்டாய்?தென்றலாக வீசியவன் நீ - என் நெஞ்சில்தீயாகச் சுட்டவனும் நீ! அப்போதும்அன்றிலாக நம் நட்பு திகழ்ந்ததே யன்றிஅணைந்த தீபமாக ஆனதேயில்லை நண்பா!கண்ணதாசா! என்எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா!கவிதை மலர்த்தோட்டம் நீ! - உன்னைக்காலமெனும் பூகம்பம் தகர்த்துத்தரைமட்டம் ஆக்கிவிட்டதே!கைநீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம்கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீகல்லறைப் பெண்ணின் மடியினிலும்அப்படித்தான் தாவி விட்டாயோ;அமைதிப்பால் அருந்தித் தூங்கிவிட!இயக்க இசைபாடிக் களித்த குயில் உன்னை
மயக்க மருந்திட்டுப் பிரித்தார் முன்னைதாக்குதல் கணை எத்தனைதான் நீ தொடுத்தாலும்தாங்கிக் கொண்ட என் நெஞ்சே உன் அன்னை!திட்டுவதும் தமிழில் நீ திட்டியதால் சுவைப்பிட்டு என ஏற்றுக் கொண்ட என்னை;தித்திக்கும் கவித் தமிழா! பிரிவின்மத்தியிலே ஏன் விட்டுச் சென்று விட்டாய்?அடடா! அந்த இளமைக் கழனியில்அன்பெனும் நாற்று நட்டோம்!ஆயிரங் காலத்துப் பயிர் நம் தோழமையெனஆயிரங் கோடிக் கனவுகள் கண்டோம்!அறுவடைக்கு யாரோ வந்தார்!உன்னை மட்டும் அறுத்துச் சென்றார்!நிலையில்லா மனம் உனக்கு! ஆனால்நிலை பெற்ற புகழ் உனக்கு!இந்த அதிசயத்தை விளைவிக்க - உன்பால்இனிய தமிழ் அன்னை துணை நின்றாள்!என் நண்பா!இனிய தோழா!எத்தனையோ தாலாட்டுப் பாடிய உன்னைஇயற்கைத் தாய் தாலாட்டித் தூங்க வைத்தாள்!எத்தனையோ பாராட்டுப் பெற்ற உனக்குஇயற்கைத் தாயின் சீராட்டுத்தான் இனிக்கிறதா?எனை மறந்தாய்! எமை மறைந்தாய்! உனைமறக்க முடியாமல் உள்ளமெலாம் நிறைந்தாய்!

மூலமும் சான்றும்