மூல அமைப்பு அலகு 6 / 7
Waking domestic election argument
இந்நூலின் மூலம் காட்சி எண்களையோ அங்கங்களையோ அச்சிடவில்லை. இப்பகுதி மூல அமைப்பை பிரதிபலிக்கும் தொகுப்பு அலகு (SRU) — வழிசெலுத்தலுக்கானது; மூலத்தின் காட்சி எண் அல்ல.
மூல ஸ்கேன் 40, 41, 42, 43, 44, 45, 46
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
அவரது மனைவி காலைக் காப்பியுடன் எதிரே வந்து நின்றாள்.
என்ன ஒரு மாதிரியிருக்கிறார்கள். முகமெல்லாம் மாறியிருக்கிறது! ஏதோ பீதி அடைந்தது போல் தெரிகிறதே? என்று கேட்ட தன் மனைவியின் கையைப் பிடித்துக் கட்டிலில் உட்கார வைத்தவாறு, காப்பியை வாங்கிச் சுடச்சுட அருந்தினார்.
சூடான காப்பி அளித்த சுறுசுறுப்புக்குப்பின் ஆண்டவனே! நான் கண்டதெல்லாம் கனவாகவே முடிய வேண்டும்! எதுவும் நடந்துவிடக் கூடாது என்னப்பனே! என்று அங்கு மாட்டப்பட்டிருந்த பிள்ளையார் படத்தைப் பார்த்துக் கரங்கூப்பித் தொழுதார். வேலைக்காரச் சிறுமி அன்றைய தினசரிப் பத்திரிகைகளுடன் ஓடிவந்தாள். தேசீயம் பிள்ளை அவசர அவசரமாக அப்பத்திரிகைகளைப் பிரித்துப் பார்த்தார்.
அய்யோ!—அறியாமலே அலறிவிட்டார்.
என்ன? என்ன? யாராவது செத்துவிட்டார்களா?—அவரது மனைவி ஆவலோடு கேட்டாள்.
இல்ல! கோவை, மதுரை, விருதை, எல்லா இடங்களிலும் காங்கிரஸ் படுதோல்வி! படுதோல்வி! வெட்கக்கேடு! வெட்கக்கேடு!! என்று நாத்தழுதழுக்கப் புலம்பினார் தேசீயம் பிள்ளை.
நல்லாத்தோற்றுப் போகணும்! செம்மையா அடி வாங்கணும் உங்களது காங்கிரஸ்! என்று மகிழ்ச்சிபொங்கக் கூறினாள் மனைவி.
ஏண்டி உனக்குப் பொறாமை? ஏன் தோற்க வேண்டும் காங்கிரஸ்? சொல்லடி, சொல்லு!
உங்க காங்கிரஸ் ஆட்சியிலே படி அரிசி என்னவிலை? காய்கறிக்குக்கூட கிராக்கி வந்த காலம் எப்போதாவது உண்டா! அரையணா செலவிலே ஏழை பாழைகளுக்கு உற்சாகம் தருகிற வெற்றிலைப் பாக்குக்குக்கூடப் பஞ்சம் வந்துவிட்டதே, பாவிகள் ஆட்சியில்! நோயாளிகளுக்குப் பழம் கிடைக்கவில்லை! கிடைத்தாலும் ஒன்றுக்கு மூன்று விலை! எல்லாவற்றுக்கும் வரியைப் போட்டுத் தீட்டி விட்டார்கள்!
யாருக்கடி வரி போட்டிருக்கிறோம். வியாபாரிகளுக்கு வரிப்போட்டால் உனக்கேண்டி கஷ்டம்—கவலை எல்லாம்?
வியாபாரிகளுக்கு வரிபோட்டால் மொத்தவியாபாரி சில்லறை வியாபாரி தலையிலும். சில்லறை வியாபாரி வாங்குகிறவர்கள் தலையிலுந்தானே அந்த வரியைக் கட்டி விடுகிறார்கள். இதுகூடத் தெரியாமல் ஆளவந்து விட்டீர்களே; ஆள—
வரிப்போடாமல் ஆள முடியுமா! எந்த நாட்டிலாவது எந்த சர்க்காராவது வரிப்போடாமல் ஆளுகிறதா!
வரிப்போட வேண்டாமென்று சொல்லவில்லை. கவர்னருக்கு வருஷந்தோறும் கொட்டிக் கொடுக்கிற ஒன்பது லட்சத்தையும், ஊட்டியில் செய்கிற ஊதாரிச் செலவையும் குறைத்துக் கொண்டால் எவ்வளவோ குறைக்கலாமே!
அடியே, அடியே! இதெல்லாம் எப்போதடி பேசக் கற்றுக் கொண்டாய்...? ம் யார் கற்றுக் கொடுத்தது!
யாரும் கற்றுக் கொடுக்கல்லே! எனக்கே புரியுது! போதும்; போதாதற்கு... பட்டணத்திலே எலக்ஷன் நடக்கிறதும் போதும்; அரசியலே இப்ப நம்பவீட்டு வாசலுக்கே வந்துவிட்டதே! மந்திரிகளே நம்ப பார்க்க முடியுமானு இருந்தேன். மந்திரிகளே நம்ப வீட்டுதேடி வந்தாங்களே! நம்ப வீட்டுக் கல்யாணங் காட்சிக்கு கூப்பிட்டால் இந்த மந்திரிகள் வருவாங்களா! தேர்தல்னு எல்லாரும் வரிசை வரிசையா வர்றாங்களென்று பக்கத்துத் தெருவிலே குடிசையிலே யிருக்கிற பெண்கள் எல்லாம் பேசிக்கொள்கிறார்கள்!
பேசுவாங்க—பேசுவாங்க! அவங்க பேசினாலும் பேசாவிட்டாலும் நீ பேசுவே! கொஞ்ச நாளாக நீ ஒரு மாதிரிதான் இருக்கிறே!
இருந்தாலும் போங்க—உங்க புத்தி வரவர மோசமாகப் போய் விட்டது. “தமிழ் வாழ்க!” அதை போய்க் கிழித்து எறிகிறீர்களாமே!
ஆமாம்! ஆபாசத் தடை சட்டத்தை மீறி கண்டபடி சுவர்களில் ஒட்டலாமா!
தமிழ் வாழ்க—என்பது ஆபாசமா!
அது ஆபாசமில்லை! அப்படி சுவரில் எழுதுவது ஆபாசம்! ஒட்டுவது ஆபாசம்!
ஆபாசம் என்பதற்கே உங்களுக்கு அர்த்தம் புரியவில்லை! “தமிழ்” என்று சொல்லியே நீங்கள் ஆபாசமாகக் கருதுவதால்தான் இந்த நாட்டுக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்கவே நீங்கள் தயங்குகிறீர்கள் என்கிறேன் நான்
ஆமாம்—அப்படித்தான் நினைத்துக் கொள்ளேன் -இந்த பாரு: இப்ப என்னிடம் பேசிக் கோபத்தைக் கிளப்பாதே! லட்ச லட்சமாகப் பணம் பாழாகி, முடிவு என்னமோ மூலையில் உட்கார வேண்டிய அளவுக்கு ஆகியிருக்கிறது...
உங்க வீட்டுப் பணமா செலவழிந்தது? ஊருக்கு ஊர் ஆலை முதலாளி, பஸ் முதலாளி. நிலப்பிரபு ஜமீன்தார்-இப்படி எத்தனையோ அப்பாவிகள் கிடைக்கிறார்கள். அவர்கள் பணத்தை வாங்கித் தேர்தல் வாண வேடிக்கை நடத்துறீங்க!
இவ்வளவு பணம் செலவழிச்சு இந்தத் தடவை தோற்றவனும், அல்லது தோற்றவனைப் பார்த்தவனும், அடுத்த தேர்தலில் நிற்பதற்கே துணிய மாட்டானே என்பதை நினைத்தால் எதிர்காலம் ஒரே இருட்டாயிருக்கிறதடி!
இருக்கட்டும்! இருக்கட்டும்!! இருட்டைப் போக்க ‘உதயசூரியன்’ வருவான்!
என்னது! உதய சூரியனு! ஓகோகோ! நேற்று அந்தத் தி.மு.க. கூட்டம் இந்தத் தெருவிலே நடந்ததா! அதைக் கேட்டுவிட்டுத்தான் தலைகீழாய் நிற்கிறாயா! புரியுது! புரியுது.
நான்மட்டுமா! தெருவே தலைகீழா மாறிப்போச்சு. எல்லா ஓட்டுமே உதயசூரியனுக்குத்தானே!
நீயே ஓட்டு சேகரிக்கிறாயா! .... அடியே... இப்படியெல்லாம் பேசினால் என்னை மறந்துட வேண்டியதுதான்! உன் கணவனுக்கு அவமானம் ஏற்பட வேண்டுமென்று நினைத்தால் நீ உதய சூரியனுக்கு ஓட்டுப்போடு!
கணவனுக்கு அவமானம் வரக்கூடாது என்பது சரிதான்! அதே நேரம் என் மகனுக்கு அவமானம் வரலாமா?
என்னது? என்னது?
ஆமாம்-நம்ப பிள்ளையாண்டான், ‘உதயசூரியனு’க் குத்தானே வேலை செய்கிறான்.
அய்யய்யோ! குடும்பமே என்னை எதிர்க்கிறதா! நேற்று நடத்திய ஒரு கூட்டத்திலே அந்தப் பயல்கள் இதுபோல பல குடும்பங்களைக் கலைத்திருப்பார்களே—சரி, சரி! இப்போதே போய் இன்று காங்கிரஸ் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்!
காங்கிரசுக்குப் பேச யார் வருகிறார்கள்!
பேசுவதா! பேச்சு எதற்காக! அந்தத் தி. மு. க பசங்களை மனமாறத் திட்டித் தீர்த்தால் போதும்! இரண்டு பேச்சாளர்! நாலு குண்டர்கள்! இன்றைக்குப் பார்த்து விடுகிறேன் ஒரு கை!
—என்றவாறு, தேசீயம் பிள்ளை பரபரப்பாக எழுந்து வெளியே புறப்பட்டார். அவரது மனைவி, கணவனின் ஆத்திரத்தைப் பார்த்துக் கேலியாகச் சிரித்துக் கொண்டாள்.