பொருளடக்கம்திருவாளர் தேசீயம்பிள்ளை

மூல அமைப்பு அலகு 4 / 7

Journey, Nandan and Gandhi / சொர்க்கச் சிறை

இந்நூலின் மூலம் காட்சி எண்களையோ அங்கங்களையோ அச்சிடவில்லை. இப்பகுதி மூல அமைப்பை பிரதிபலிக்கும் தொகுப்பு அலகு (SRU) — வழிசெலுத்தலுக்கானது; மூலத்தின் காட்சி எண் அல்ல. இப்பகுதி ஆவணப்படுத்தப்பட்ட மூலச் சேதத்தைக் கொண்டுள்ளது; `[paper loss]` / `[unresolved …]` குறிகள் மூலத்தின்படியே காட்டப்படுகின்றன; எதுவும் மீட்டமைக்கப்படவில்லை.

மூல ஸ்கேன் 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

இருவரும் எழுந்து காந்தியைக் காணப் பயணம் படுகிறார்கள். போகும் வழியில் பூக்கடைகள் ஏராளமாக இருக்கின்றன. அழகான மாலைகள் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. எந்தக் கடையிலும் வியாபாரம் செய்கிற ஆளைக் காணவில்லை. தேசீயம் பிள்ளை எமனிடம் கேட்டார்; என்ன ஆச்சரியம்? ஆளில்லாத கடைகள்! என்று!

ஆட்கள் ஆவியுருவத்திலே மிதக்கிறார்கள். உமது கண்ணுக்குத் தெரியமாட்டார்கள், பூவின் மீது வரிபோட்டு உங்கள் ராச்சியத்தில் உள்ள மந்திரிகள் இவர்களது சதை, எலும்புகளை எல்லாம் கரைத்து உருக்கிவிட்டார்களாம். அதனால்தான் ஆவிகள், பூக்கடைகளோடு இங்கு வந்துவிட்டன. இந்தச் சேதி இப்போதுதான் நமக்குத் தந்தி மூலம் கிடைத்தது.

இந்த விஷயத்தை எமன் மிகச் சாதாரணமாக தேசீயம் பிள்ளையிடம் கூறினான். தேசீயம் பிள்ளை நூறு நயா பைசாக்களை அள்ளி நீட்டினார். அதை யாரோ வாங்கிக்கொண்டார்கள். காசுகள் மறைந்துவிட்டன. ஒரு ரோஜா மாலை தேசீயம் பிள்ளையின் கையில் தரப்பட்டது.

அவர் அதை மரியாதையாக வாங்கிக்கொண்டு, எமனைத் தொடர்ந்து நடக்கலானார். மல்லிகை, முல்லை முதலிய மலர்களின் மென்மையான மணம் “கம கம” வென்று வீசிக்கொண்டிருந்தது. ஊதுவத்திகளின் வாசம் உள்ளத்திற்குப் பூரிப்பை அளித்தது. தகதகவென ஜொலிக்கும் தங்கம் பூசிய படிக்கட்டுகள், இடையிடையே வைரக் கற்கள் பொருத்தப்பட்டு ஒளி மழை பொழிந்து கொண்டிருந்தன. நவரத்தினங்கள் இழைத்த பெரிய கதவொன்றின் அருகே எமன் போய் நின்று, “நந்தா! நந்தா!!” என்று அழைத்தான்.

கண்ணங்கருத்த மேனியும் கட்டுடலும் கவர்ச்சியுமான தோற்றமும்கொண்ட ஒரு வாலிபன் வந்து எமனருகில் நின்றான்.

எமன் அவனது கைகளைக் குலுக்கித் தழுவிக் கொண்டான்.

என்ன நந்தா! சுகந்தானே? என்று எமன் குசலம் விசாரித்துவிட்டு, தேசீயம் பிள்ளையை அறிமுகப்படுத்திவைத்தான்.

நந்தன் தேசீயம் பிள்ளையை வரவேற்றுக் கைகுலுக்கக் கையை நீட்டினான். தேசீயம் பிள்ளை கையை இழுத்துக்கொண்டு முகத்திலே வெறுப்பை நிறைத்துக்கொண்டு நின்றார்.

நெருப்பிலே குளித்து வந்தவனய்யா நான்! சாதாரண தண்ணீரிலே குளித்தால் சாதியென்னும் அழுக்கு போகாதென்று தீயிலே கருகி வந்த வாலிபனய்யா! சும்மா தொடும் என்னை! என்று கூச்சலிட்டவாறு நந்தன், தேசீயம் பிள்ளையைத் தழுவிக் கொண்டான். தேசீயம் பிள்ளைக்கு அதிர்ச்சியினால் மயக்கம் வந்துவிட்டது.

பிறகு நந்தன் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தான். “ஆபத்திற்குப் பாபமில்லை” என்று கூறியவாறு தேசீயம் பிள்ளை அதைக் குடித்து மயக்கம் தெளிந்தார்.

நந்தனிடம் அனுமதிச்சீட்டு வாங்கிக்கொண்டு தேசீயம் பிள்ளையும் எமனும் காந்தியைப் பார்க்க சொர்க்கச் சிறைக்குள் நுழைந்தார்கள்.

வரிசை வரிசையாக விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. இனிமையான இசை எங்கும் பரவியிருந்தது. நடன மாதர்கள் ஆங்காங்கு ஆடிக் கொண்டிருந்தனர். கண்ணைப் பறிக்கும் விதத்தில் எழில் ததும்பும் சிங்கார மண்டபமொன்று! அதன் நடுவே விலைமதிக்க முடியாத நவரத்தின சிம்மாசனம்! அந்த ஆசனத்தில் ஒரு மகாராஜா அமர்ந்திருந்தார். மகாராஜாவின் உடைதானா? அல்லது வானத்து நட்சத்திரங்களோடு எடுத்துப் போர்த்திக் கொண்டிருக்கிறாரா என ஐயப்படும் வகையில் மணிகள் மின்னிக் கொண்டிருந்தன. தேசீயம் பிள்ளை உற்றுப் பார்த்தார் அவர் நிர்வாணப் பரதேசி—அகிம்சாமூர்த்தி—ஏழைப் பங்காளர்—பாட்டாளியின் தோழர்—எளிய வாழ்வின் எடுத்துக்காட்டு—என்றெல்லாம் போற்றப்பட்ட போப்பந்தர் மகான்தான் பொன்னும் மணியும் மின்னும் வைரமும் பூட்டியவாறு பூரிப்போடு அமர்ந்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டார்.

அய்யனே! இது என்ன கோலம்?

இந்த அலங்கோலம்தான் நான் பூலோகத்தில் புரிந்த தீமைகளுக்குத் தரப்பட்ட தண்டனையப்பா என்றார் காந்தி!

தேசீயம் பிள்ளை, கையிலுள்ள மாலையை காந்தியின் கழுத்திலே அணிவிக்க முன்வந்தார்.

நிறுத்து! நிறுத்து! போடாதே மாலையை! என்று கை நீட்டித் தடுத்தார்.

ஏன் அய்யனே தடுக்கிறீர்?—என்று பதறிப் போய் கேட்டார் தேசீயம் பிள்ளை.

காங்கிரசைக் கழுத்து விட்டு வந்து எனக்கு மாலை போடுங்கள் என்று அப்போதே சொன்னேன். அதைச் செய்யாமல் மாலை மட்டும் போட்டு என்னை மயக்கப் பார்க்கிறாயா?—காந்தி ஆத்திரப்பட்டார்.

மாலையா இது? மகாபாதகர்களே! மாலையா இது? நன்றாகப் பாருங்கள்! எலும்புத் துண்டுகளைப் பொறுக்கி அரும்பு மாலையென எனக்குப் போட வந்துவிட்டார்களா? நிரபராதிகளின் ரத்தத்திலே தோய்ந்த வெள்ளை மலர்களை எடுத்து ரோஜா மலரெனத் தொடுத்து என் கழுத்திலே தொங்கவிடப் புறப்பட்டீர்களா? இதோ! எனக்கு ராஜா உடை போட்டு ராஜபோகங்களோடு வாழ வைத்து என் மன நிம்மதியைக் குலைத்து என்னை இந்தச் சிறைச்சாலையில் சித்திரவதை செய்து கொண்டிருக்கிறானே எமன்; இந்த—எமனே விடக் கொடியவர்கள் நீங்கள்! என் முன்னே நில்லாதீர்கள்! போய்விடுங்கள்!

அப்படி என்ன அபச்சாரம் செய்தோம் தங்களுக்கு?—தேசீயம் பிள்ளை திடீரென கேட்டார்.

இன்னுமா அபச்சாரம் செய்யவேண்டும்? எமன் என்னை அரசனா ஆக்கினான்—நீங்கள் என்னை ஆண்டவனா ஆக்கிவிட்டீர்கள்!

அது உங்களுக்குப் பெருமைதானே?

எனக்குப் பெருமைதான்! ஆனால் அது உங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு வழி!

என்ன மகாத்மா சொல்லுகிறீர்கள்?

கோயில்களிலே இருக்கிற கடவுள் சிலைகள் மீது அபார பக்தியுள்ளவனைப்போல் நடிப்பான் பூசாரி! பூசாரிக்கு அந்தச் சிலைகளின் மீது கடவுட்பற்று இல்லாவிட்டாலும் சிலைப்பற்றுகூடக் கிடையாது! சிலை மீது பூசாரிக்கு அதிக மரியாதை யென்று மக்கள் எண்ணிக்கொள்வார்கள். அதனால் பூசாரிக்கும் மதிப்பு தருவார்கள்! சுட்ட செங்கல்லில் ஈரத் துணியால் மூடிச் சுடச் சுட ‘பொங்கல் நைவேத்தியம்’ செய்வதுபோல் பாசாங்கு செய்வான் அந்தப் படுபாவி! “ஆகா, என்னே பூசாரியின் பக்தி!” என்று வாய்பிளந்து நிற்பார்கள் பக்தர்கள். இந்த வழியில் பூசாரி, பக்தர்களை ஏமாற்றிக் கொண்டிருப்பான். பக்தர்கள் ஏமாறுகிற வரையில் பூசாரிக்கு கொண்டாட்டந்தானே! கடவுளுக்கு செங்கல் படையல்தான் மிச்சம்! ஊரிலே உத்தமன் என்று பூசாரிக்குப் பட்டம்! இப்படித்தானப்பா பூலோகத்திலே சில கட்சிகள் இருக்கின்றன. கட்சித் தலைவர்கள் கடவுளை போல செங்கல்லில் மட்டுமே காணுகிறார்கள்...... பூசாரிகள் பூரிப்போடு வாழ்கிறார்கள்......அந்த ரகத்தில் முதல்தரமான கட்சி காங்கிரஸ்! முதல்தரமான பூசாரி நீ! முதல்தரமான கட்சி ஏமாளி; கடவுள், நான்!

காந்தி கண் கலங்கினார்! தேசீயம் பிள்ளை பதில் சொல்ல முடியாமல் திணறினார். எமன் எருமை மாட்டைத் தடவிக் கொடுத்தான்.

காந்தி தழுதழுத்த குரலில் பேசலானார்.

என்னை இங்கே அனுப்பி வைப்பதற்கு நீங்கள் எல்லாம் பட்டபாடு கொஞ்சமா? உங்களோடு இருந்தால் நீங்கள் செய்கிற அக்கிரமங்களைத் தட்டிக்கேட்கிறேன்—தடுத்து நிறுத்தப் பார்க்கிறேன் என்ற வெறுப்பில் என்னைப் பாதுகாப்பதற்குக்கூட அக்கறை எடுத்துக்கொள்ள நாதியில்லை. வெள்ளைக்காரன் வைத்துவிட்டுப் போன பலமான ராணுவம் இருந்தது. அதுவும் போதாதென்று படைபலத்தைக் கோடி கோடியாய்ச் செலவிட்டுப் பெருக்கினீர்கள். எத்தனை இருந்தென்ன; பொட்டென்று முடித்துவிட்டான் காரியத்தை! இங்கே “சொர்க்கத்திலே” சொல்லவொணா வேதனையில் உழன்று கொண்டிருக்கிறேன்.

என்னைத் துரத்தினீர்களே; பாவிகளே! என்னுடைய ஆசைக்கும் அன்புக்குமுரிய உடைமைகளைக் கூடக் கொள்ளைக்காரனிடம் ஒப்படைத்து விட்டார்களாமே!

நான் வாழ்ந்த குடிசையை எழில் மிகுந்த இருட்டு மண்டபமாக மாற்றிக்கட்டி அந்த மண்டபத்திற்குள்ளே வெளவால்களைத் தோரணமாகத் தொங்கவிட்டிருக்கிறார்களாம்! பணக்காரப் பச்சோந்திகளைத் தாழ்வாரமெங்கும் விளையாட விட்டிருக்கிறார்களாம்! ‘வான்கோழி’களை மண்டபத்து முற்றத்திலே ஆடவிட்டு, கொள்கையற்ற கோட்டான்களின் இசை முழங்கச் செய்திருக்கிறார்களாம்! கொம்பு மாடெனக் [unresolved glyph cluster] மட்டும் வளர்த்து ஒன்றிரண்டு முட்டிக்கொண்டு மண்டபத்தைப் போர்க்களமாக ஆக்கியிருக்கிறார்களாம்!

அட பாவிகளே; நான் நவகாளிப் பயணத்தின்போது ஊன்றிக்கொண்டு நடந்த அருமை மிகு கைத்தடி, “மோஸஸ்” கதையிலே வருவதைப் போல் பாம்பாக மாறி பாட்டாளி மக்களைக் கடித்துக்கொல்லுகிறதாம்! அப்படியொரு மந்திரத்தைப் போட்டு விட்டார்களாம்!

என் இடுப்பிலேயிருந்து எடுப்பாகத் தொங்கிக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறு கடிகாரம், உங்களால் பத்திரப்படுத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்த்தேன். அந்தக் கடிகாரத்தைக் கள்ளமார்க்கெட் காரர்களுக்கு உரிமையாக்கி நேரம் பார்த்துக் கொள்ளும்படிக் சொல்லிவிட்டார்களாம்!

என் காலணி பட்டுச் சின்னஞ்சிறு ஜீவன்கள் கூட செத்துவிடக் கூடாதேயென்று நான் எங்குவேன் இப்போது அந்தக் காலணியை நீங்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஆள் மாட்டிக் கொண்டு ஆயிரக்கணக்கான மக்களை அடக்கி மிதித்து, துவைத்து செருக்குகிறீர்களாம்!

இத்தனை சொத்துக்களையும் கெடுத்தீர்கள். என் வீட்டையும் பாழாக்கினீர்கள். தொலையட்டும், எல்லாமே போகட்டும். என் மூக்குப் போன்றதும், என் இருதயம் போன்றதுமான என் அன்புக் குழந்தையாம் “ஹரிஜன நலம்” என்ற செல்வத்தையாவது ஒழுங்காகப் பாதுகாத்திருக்கிறீர்களா? என் இன்பக் குழந்தை, “சவலைப் பிள்ளை” போலல்லவா காட்சி தருகிறது. சளி பொழுகும் மூக்கு, [unresolved descriptive cluster] வாய், தள்ளிய வயிறு, கும்பிப் போன கால், கைகள், [unresolved descriptive cluster] விடுவது போன்ற இழுப்பு மூச்சு, இவ்வண்ணம் தள்ளாடித் தள்ளாடித் தடுமாறும் நிலையில் அல்லவா நான் பெற்ற மாணிக்கத்தை நடுத்தெருவில், சாக்கடையோரத்தில், புழுதி மேட்டில் நிர்க்கதியாக விட்டுவிட்டார்கள்! அந்தச் செல்வம் ஒன்றையாவது காப்பாற்றியிருக்கக் கூடாதா? அதைக் காப்பாற்றுவதற்காக வெளிவேஷம் போட்டு மகானத்துக்கு ஓர் “ஆயாக் கிழவி”யை நியமித்திருக்கிறீர்களாம். அந்தக் கிழவிகள் எல்லாம் கண்ணனைக் கொல்ல வந்த “பூதகி” போலக் காட்சி தருகிறார்களாம். என் குழந்தை ஆதரிக்க ஆளின்றித் தவிக்கிறதாம்!

இந்த லட்சணத்தில் உன் அழுக்கேறிய கைகளால் எனக்கு மாலையை போட வந்துவிட்டாயா?

போ! போ! என் முன் நில்லாதே!

—காந்தியின் கோபம் எல்லைமீறிவிட்டது.

அப்போது ஒரு ஆள் வேகமாக ஓடிவந்து எமனின் காதில் ஏதோ ரகசியமாகச் சொன்னான்.

எமன் “ஆ!” என்று அலறிவிட்டான்.

“என்ன? என்ன?” என்று கேட்டார் காந்தி!

இதோ இந்த தேசீயம் பிள்ளை, ஸ்ரீரங்கத்தில் ஸ்வாமி ரங்கநாதரைத் தீயில் போட்டுவிட்டு இங்கு ஓடிவந்துவிட்டானும்!—எமன் கூச்சல் போட்டான்.

“ஆ! ரங்கநாதரைத் தீயில் போட்டானு? விபரமாகச் சொல்லுங்கள்! விபரமாகச் சொல்லுங்கள்!”—காந்தி பதை பதைக்கக் கேட்டார்.

ஆமாம்! இவன் செய்த அக்கிரமங்கள் பொறுக்கமாட்டாமல் ரங்கநாதர் தனக்குத்தானே பற்றி எரிந்துவிட்டாராம்! அந்தத் தீ விபத்துக்குக் காரணம் இந்தத் தேசீயம் பிள்ளைதான் என்று கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாம். அங்கேயிருந்தால் ஆபத்து என்று இங்கே ஓடிவந்திருக்கிறான்!—என்றவாறு எமன் தேசீயம் பிள்ளையை நோக்கித் தன் கதாயுதத்தை ஓங்கினான்.

தேசீயம் பிள்ளை, காந்தியின் கால்களைப் பிடித்துக் கொண்டு அய்யோ! அய்யா! அய்யா! என்னைக் காப்பாற்றுங்கள்! என்று கண்ணீர் வடித்தார்.

எழுந்திரு! எழுந்திரு! என் கால்களைத் தொடாதே! உன் கையிலுள்ள ரத்தக்கறை என் கால்களில் ஒட்டிக் கொள்ளப் போகிறது! என்றவாறு கைகளை உதறிவிட்டு காந்தி எழுந்தார்.

ஆண்டவனின் கோபத்துக்கு ஆளாகி, அவருக்கே உடம்பு எரிச்சலே உண்டாக்கிவிட்டு தீ விபத்துக்குக் காரணமாகிவிட்ட பரம பாதகனாகிய உனக்கு நாகத்திலும் இடமில்லை! எங்கும் இடமில்லை! உன்னை எப்படி மன்னிக்கமுடியும்! எமதர்ம ராஜனே! தயவு செய்து இவனை அழைத்துப் போங்கள்! கொள்வாய்ப் பிசாசு போன்ற இவன் முகத்தைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை. என் இஷ்ட தெய்வமான ரங்கநாதரையே தீயில் வேகவைத்த அநியாய ஆட்சிக்காரனைப் பார்ப்பது மகாபாபம்! உடனே இழுத்துச் செல்லுங்கள்!

—காந்தி எமனிடம் இந்த வேண்டுகோளை வெளியிட்டவாறு நந்தனை அழைத்துக்கொண்டு வேகமாக உள்ளே போய்விட்டார். தேசீயம் பிள்ளை எமனையே பார்த்துக்கொண்டு நின்றார்.

எமன் “ம் நட! நட!” என்றான். எருமைமாடு, தேசீயம் பிள்ளையின் முதுகில் ஒரு முட்டு முட்டித் தள்ளியது.