மூல அமைப்பு அலகு 3 / 7
Eman–Desiyampillai interview
இந்நூலின் மூலம் காட்சி எண்களையோ அங்கங்களையோ அச்சிடவில்லை. இப்பகுதி மூல அமைப்பை பிரதிபலிக்கும் தொகுப்பு அலகு (SRU) — வழிசெலுத்தலுக்கானது; மூலத்தின் காட்சி எண் அல்ல.
மூல ஸ்கேன் 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
எமன், தேசீயம்பிள்ளை பேட்டி துவங்குகிறது.
எமன் : உமது தந்தையின் பெயர் என்ன?
தேசீயம் பிள்ளை : இது தெரியாதா? ஹியூம் என்ற பிரசித்திபெற்ற ஆங்கிலேயப் பிரபுதான் என் தந்தை!
எமன் : ஆங்கிலேயரின் மகனா நீ? பிறகு எப்படி உனக்குத் தேசீயம் பிள்ளை என்று பெயர் வந்தது?
தேசீ : மகாத்மா காந்தி என்னை எடுத்து வளர்த்தார். அவர் வைத்த பெயர் தேசீயம் பிள்ளை!
எமன் : உங்கள் நாட்டில் கீரிப்பிள்ளை என்பது யார்?
தேசீ : அது ஒரு பிராணி! பாம்புக்கு விரோதி!
எமன் : நீரும் பிள்ளைதானே; நீர் யாருக்கு விரோதி!
தேசீ : ஹி ஹி ஹி!
எமன் : தென்னம்பிள்ளை கூட உங்கள் ராச்சியத்தில் உண்டல்லவா?
தேசீ : ஆமாம்; அதுதான் பூலோகக் கற்பகவிருட்சம்!
எமன் : ஒரு பிள்ளை பிராணி; இன்னொரு பிள்ளை, மரம்! சரி; போகட்டும்—அணில்பிள்ளை என்பது என்ன?
தேசீ : அதுவா? அதுதான் ராமருக்காகப் பாலம் கட்டிய ஜந்து.
எமன் : ஓ! உங்க நாட்டிலே அணில்கூட பாலம் கட்டும்! அரசாங்கம் கட்டாதோ?
தேசீ : ஹி ஹி ஹி!
எமன் : இருக்கட்டும்! கிளிப்பிள்ளை என்றால் என்ன?
தேசீ : அதுவா; அது சொன்னதையே சொல்லும் ஒரு பறவை!
எமன் : என்ன சொல்லும்—ஆகட்டும்; பார்க்கலாம்! ஆகட்டும்; பார்க்கலாம்!—என்று தானே?
தேசீ : ஹி ஹி ஹி!
எமன் : தேசீயம் பிள்ளை என்கிறீரே; நீர் இந்த நான்கு பிள்ளைகளைவிட எந்த விதத்தில் உயர்ந்தவர்?
தேசீ : நான் உயர்திணை; அவைகள் அஃறிணைப் பிராணிகள்! வெறும் உயிர்கள்! பகுத்தறிவு இல்லாத ஜந்துக்கள்!
எமன் : பகுத்தறிவு என்றால் என்ன?
தேசீ : சிக்கலான கேள்வி! பூலோகத்திலே அந்த கழகத்துக்காரர்கள் என்னைப் பார்த்துக் கேட்கும் கேள்வியைத் தாங்களும் கேட்கிறீர்கள்—செத்தும் விடவில்லையே எனக்குச் சங்கடம்?
எமன் : செத்துவிட்டமா? யார் சொன்னது அப்படி? பொய் சொல்லாதீர்! வெறும் பார்வையாளராகத்தான் இந்த நாட்டுக்கு வந்திருக்கிறீர். இந்த நாட்டு பிரஜையாக உம்மை யாரும் அங்கீகரிக்கவில்லை! உம்முடைய நடவடிக்கைகளையும் பூர்வோத்திரத்தையும் பார்த்துதான் உம்மை இந்நாட்டு பிரஜையாக்குகிற விவகத்தைச் சபையிலே கொண்டுவர வேண்டும்! அதிருக்கட்டும்; முதலில் வரியைப் பற்றிய விளக்கத்தைச் சொல்லும்!
தேசீ : ‘வரி’ என்றால் எங்கள் ராச்சியத்தில் காங்கிரஸ் என்று அர்த்தம்!
எமன் : காங்கிரஸ் என்றால்?
தேசீ : தியாகம் என்று அர்த்தம்!
எமன் : தியாகம் என்றால்?
தேசீ : பதவி, பர்மிட், லைசென்ஸ் இப்படிப் பல அர்த்தங்கள்!
எமன் : ‘வரி’ என்பது கருப்பு நிறமா? சிவப்பு நிறமா? அதன் உண்மை நிறமென்ன?
தேசீ : வரிக்கு ஒரு நிறமா? இரு நிறமா? அது பஞ்ச வர்ணங் கொண்டதல்லவா?
எமன் : பஞ்சம் என்றால் தரித்திரம் என்பார்களே?
தேசீ : ஆமாம்—அதே நிறந்தான் வரியின் நிறமும்!
எமன் : சரி—வரியினால் என்ன நன்மை?
தேசீ : மக்கள் பெருக்கம் குறையும்; நாட்டில் ஜன நெருக்கம் தேய்ந்து கலகலப்பாக இருக்கும்!
எமன் : அப்படிப்பட்ட வரியை எமலோகத்திலும் அமுலுக்குக் கொண்டுவந்தால்......?
தேசீ : இங்கும் நெருக்கடி குறைய வழி ஏற்படும்?
எமன் : உங்கள் ராச்சியத்தில் வரிபோடுவதில் வல்லவர்கள் யார்?
தேசீ : நானேதான்! நான்தான் இங்கு வந்துவிட்டேனே?
எமன் : குறிப்பாக எந்தெந்தப் பொருள்கள்மீது வரி போடலாம்?
தேசீ : அழுகும் பொருள்களின் மீது வரி போடுவது காலஞ்சிறந்தது!
எமன் : எங்கள் நாட்டில் அழுகும் பொருள்கள் என்ன? (யோசித்து) ஓ! பிணங்கள்! பிணங்கள்! வரிபோடலாம்!
தேசீ : உங்கள் நாட்டு அழுகும் பொருள்களான பிணங்களுக்கு வரிபோடுகிறேன் என்கிறீர்களே; அதில் எதிர்ப்பு ஒன்றும் ஏற்படாதே?
எமன் : எதிர்ப்பா? வரிபோட்டால் எதிர்ப்புக்கூட ஏற்படுமா? எமதர்மன் ராச்சியத்தில் எதிர்ப்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?
தேசீ : என்ன தண்டனை?
எமன் : உடனடியாக அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்; அதோடு முடியாது, தண்டனை; பூலோகத்தில் மீண்டும் பிறந்தாக வேண்டும். அதுமட்டுமல்ல; அவர்கள் தேர்தலில் அபேட்சகர்களாக நின்று பணம் கொடுத்து ஓட்டு வாங்கித் தங்கள் தோல்வியைக் காப்பாற்றிக் கொண்டாக வேண்டும்!
தேசீ : சரி; எங்கள் நாட்டில் போட்டியில்லாமல் சிலபேர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களே; அவர்கள் எல்லாம் தங்கள் தண்டனை பெறுதவர்களா?
எமன் : அவர்கள் கட்டவேண்டிய காணிக்கையை இங்கேயே கட்டிவிட்டார்கள்!
தேசீ : தாங்கள் குறிப்பிடும் அபேட்சகர்கள் காங்கிரஸ் அபேட்சகர்களா? அல்லது வேறு கட்சியா? அல்லது சுயேச்சையா?
எமன் : சுயேச்சைகளைப்பற்றி ஏனய்யா இங்கு பேசுகிறீர்? அந்த சுயேச்சைகளுக்குத்தான் குடி, சொரணை, நன்றி, விசுவாசம் எதுவுமே கிடையாதே!
தேசீ : அய்யய்யோ.........எல்லா சுயேச்சைகளுமா அப்படி? இல்லை! இல்லை! ஏதோ... ஒன்றிரண்டு... கும்பகோணம் போலிருந்தால்...
எமன் : போகட்டும். பிண வரிக்குப் பிறகு எந்த வரி போடலாம்? அந்த யோசனையையும் சொல்லும்!
தேசீ : எங்கள் தேசத்தில் போடாமல் இருக்கிற வரிகளை மட்டுமே விரல்விட்டுச் சொல்லமுடியும். போட்டிருக்கிற வரிகளின் பட்டியலில் ஞாபகப்படுத்திக் கூறுவது மிகவும் சிரமம்!
எமன் : அப்படி வரி போடப்படாத பொருள்கள் என்னென்ன?
தேசீ : அத்திப் பூ! குதிரைக் கொம்பு! சேவல் முட்டை! இதுபாதி பொருள்களுக்கு எங்கள் நாட்டில் வரி விலக்குச் செய்யப்பட்டிருக்கிறது.
எமன் : சபாஷ்! அவைகளுக்கும் சேர்த்து நான் இங்கே வரிபோட்டுவிடுகிறேன், தேசீயம் பிள்ளை! மிகவும் நன்றி! இன்றைய நமது பேட்டி எமலோகத்தின் முன்னேற்றத் திட்டங்களுக்குப் பயன்பட்டதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். ஒன்று கேட்க மறந்துவிட்டேனே; உங்கள் ராச்சியத்தில் “ஐந்தாண்டுத் திட்டம்” என்ற ஒரு பெரிய மந்திரவாதி இருக்கிறாராமே; அவர் மிகவும் கெட்டிக்காரர்தானா? அவரை இங்கு அழைத்து வரலாமென்று பொதுவாகவே ஒரு அபிப்ராயம் உலவுகிறது—அழைத்துவரத் தகுதி உடையவர்தானா?
தேசீ : அவர் இன்னும் இங்கு வரவில்லையா? எனக்கு முன்பே இங்கு வந்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன்...!
எமன் : இல்லை! இல்லை! உம்மைக் கேட்டுக்கொண்டுதான் அழைத்து வரலாமென்று எண்ணம்.
தேசீ : பெரிய மந்திரவாதிதான்! பெயரைக் கேட்டத்தான் பயமாயிருக்குமே தவிர, ஆளைப் பார்த்தே மானால் தேவாங்குமாதிரி இளைத்துப் போயிருப்பார்! அவருக்கு யானைப் பசி வியாதி வேறு!
ஆயிரக்கணக்கில்—நூற்றுக்கணக்கில் எதையும் சாப்பிடுவது இல்லை. எல்லாம் கோடிக்கணக்கில்தான் வயிற்றில் போட்டு அடைப்பார். அவர் எங்கள் ராச்சியத்தில் ஆஸ்தான மந்திரவாதியாக இருப்பதால் ஊழல் என்னும் தொத்து வியாதி எங்கும் பரவுகிறதே தவிர, பயன் ஒன்றும் கிடையாது. தயவு செய்து அவரை இங்கு அழைத்துக்கொள்ளுமாறு நான் பலத்த சிபாரிசு செய்கிறேன்!
எமன் : ஊழல் வியாதிக்காரரா? அடடே இதுவரை தெரியாமல் போனதே! வரியினால் ஜன நெருக்கடியைக் குறைப்பதைக் காட்டிலும் ஊழல் வியாதியினால் கணிசமான அளவுக்கு ஜன நெருக்கடியைக் குறைக்கலாமே...! பலே! பலே! நாளைக்கே நான் அவருக்கு ஆள் அனுப்புகிறேன்!
தேசீ : அனுப்புங்கள்! ஒருவர் வந்தாலும் மற்றபடி ஊரைப் பார்த்துக்கொள்ள அவர் குடும்பத்தில் வரிசையாக குழந்தைகள் இருக்கிறார்கள். இரண்டாவது, மூன்றாவது என்று ஐந்தாண்டுத் திட்டக் குட்டி மாயவிகள் ஏராளமாக இருக்கிறார்கள்!
எமன் : இன்றைய நமது பேட்டி இனிது முடியட்டும்—உமக்கு ஏதாவது தேவைகளிருந்தால் தெரிவிக்கலாம்.
தேசீ : தேவை யொன்றும் பிரமாதமில்லை. என்னை இந்த உல்லாச மண்டபத்திலிருந்து விடுவிக்க வேண்டும். அடுத்தபடியாக நான் மகாத்மா காந்தியைச் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் தர வேண்டும்!
எமன் : அவசியம் காந்தியைப் பார்த்தாகவேண்டுமா? அவர் சொர்க்கமெனும் பாதாளச் சிறையில் அல்லவா கிடக்கிறார்? அந்த மூன்றாம் வகுப்புக் கைதியை நாகலோகத்து முதல் வகுப்புக் கைதியாகிய நீர் சந்திப்பது இயலாத காரியமாயிற்றே!
தேசீ : எப்படியோ கிருபை செய்ய வேண்டும்—காந்தி மகானை நான் பார்த்தால் தான் ஆவல் தீரும்!
எமன் : சரி; ஏற்பாடு செய்கிறேன்!—புறப்படும் என்னோடு
தேசீ : மாலைதானே...வாங்கிக் கொள்ளலாம்...