பொருளடக்கம்திருவாளர் தேசீயம்பிள்ளை

மூல அமைப்பு அலகு 2 / 7

Guesthouse / military-commandant hospitality

இந்நூலின் மூலம் காட்சி எண்களையோ அங்கங்களையோ அச்சிடவில்லை. இப்பகுதி மூல அமைப்பை பிரதிபலிக்கும் தொகுப்பு அலகு (SRU) — வழிசெலுத்தலுக்கானது; மூலத்தின் காட்சி எண் அல்ல.

மூல ஸ்கேன் 15, 16, 17, 18, 19, 20

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

எமதர்ம ராஜனின் மாளிகையிலுள்ள விருந்து விடுதியில் தேசீயம்பிள்ளை பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்.

உல்லாச மண்டபம் என்றாரே; இதற்குப் பெயர் தானா உல்லாச மண்டபம்? என்று ஆச்சரியத்தோடு தேசீயம்பிள்ளை மிரள மிரள விழித்துச் சுற்றுமுற்றும் பார்க்கிறார். சின்னஞ்சிறு குழந்தையின் பிஞ்சுத் தலைகள் அப்படிக் குவிக்கப்பட்டிருக்கின்றன.

அய்யோ! இதுவா உல்லாச மாளிகை?—தேசீயம்பிள்ளை கத்திவிடுகிறார்.

ஆமாம்! இதுதான் உல்லாச மாளிகை! கொட்டிக் கிடக்கும் இவைகள் என்னவென்று கருதினாய்? இவைதான் எங்கள் நாட்டு உருளைக் கிழங்கு! எங்கள் உல்லாச மாளிகையைச் சுற்றி விளையும் பொருள் இதுதான்!—எனச் சிரித்தபடி ஓர் உருவம் எதிரே வந்தது. அந்த உருவம் தான் எமலோகத்தில் ராணுவ தளபதி பதவியிலே இருக்கும் “ஸ்ரீ மயானம்”!

மயானத்தின் இஷ்டப்படிதான் எமதர்மனின் நிகழ்ச்சி நிரல்கள் வகுக்கப்படும். அதன்படி வகுக்கப்பட்ட நிகழ்ச்சியையொட்டி எமனுக்கு முன்னதாக தேசீயம்பிள்ளையைப் பேட்டி காணவே ராணுவத் தளபதி அங்கு வந்தது.

என்னய்யா! குழந்தைகளின் தலைகள் அறுத்துக் கொட்டிவிட்டு இந்த இடத்திற்குப் பெயர் உல்லாச மண்டபம் என்கிறீர்கள்? என்று சோகமும் வேகமும் போட்டியிடக் கேட்டார் தேசீயம்பிள்ளை.

எங்கள் நாட்டில் உல்லாச மண்டபத்துக்குள்ளேயே இப்படிக் குழந்தைத் தலைகள் கொட்டப்பட்டிருக்கும்; ஆனால் உங்கள் நாட்டில் உல்லாச மண்டபத்துக்கு வெளியே குழந்தைகளின் தலைகளைப் பொறுக்கலாமாம்! இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லையே!—தளபதி கேலியாகப் பதில் சொன்னான்.

அபத்தம்! அபாண்டம்!! யார் சொன்னது அப்படி? பொய்! பொய்!!—தேசீயம்பிள்ளை கத்தினார்,

இதுவரையில் இங்கு குடியேறிய எல்லோரும் ஒத்துக் கொண்ட உண்மையை நீர் மறுக்கிறீர்! இதோ பொறுக்கிக் குவிக்கப்பட்டுள்ள அத்தனை தலைகளும் உங்கள் நாட்டிலேயிருந்து கொண்டு வரப்பட்டவைதான்! இவைகளில் பல கல்யாணமாகாத பெண்களின் கருவிலே உதித்தவை! பல விதவைகளின் வயிற்றிலே விளைந்தவை! ஆயிரக்கணக்கானவை ஆற்றிலும் குளத்திலும் மிதந்தவை! ஏராளமான தலைகள் வறுமை வயவில் பொறுக்கப்பட்டவை! சில குழந்தைகளின் நெற்றியில் அவமானச் சின்னம் குத்தப்பட்டிருக்கும். சிலவற்றின் கழுத்தில் தாயின் கட்டைவிரல் ரேகைகள் அழுத்தமாகப் பதிந்திருக்கும். அந்த ரேகைகளே ஆராய்ச்சி செய்ததில் ஈவு இரக்கமுள்ள பெண்களின் ரேகைதான் அவையென்றும் எங்கள் ஆஸ்தான ரேகை நிபுணர்கள் முடிவு கூறி இருக்கிறார்கள். சில குழந்தைகளின் கருவிழிகள் வட்ட வடிவமான அசோகச் சக்கரங்கள் போலவே அமைந்திருப்பதையும் கண்டோம். அதுபற்றிய ஆராய்ச்சியை எமது விஞ்ஞான மேதை ஒருவரிடம் ஒப்படைத்திருக்கிறோம். இன்னும் முடிவு வெளிவரவில்லை. இப்போது என்ன சொல்லுகிறீர்?

ராணுவத் தளபதியின் ஆத்திரங் கலந்த பேச்சைக் கேட்டுத் தேசீயம்பிள்ளை தலைகுனிந்தவாறு நின்றார்.

அப்போது ஐந்தாறு பெண்கள் கையில் கிண்ணங்கள் ஏந்தியவாறு அவர் எதிரே வந்து நின்றனர். பெண்களா அவர்கள்? பிள்ளை அவர்கள் உற்றுப் பார்த்தார். ஆமாம்; பெண்களேதான்! முடிவு கட்டிக் கொண்டார்.

ம்! குருதி பானம் அருந்தும்!—தளபதி உபசரித்தார். கிண்ணங்களைப் பார்த்தார் தேசீயம்பிள்ளை! அய்யோ! கண்கள் சுழன்றன—எல்லாக்கிண்ணங்களிலும் பொங்கி வழியும் ரத்தம்!

ரத்தபானமா?—தேசீயம்பிள்ளை அலறிவிட்டார்.

ஆமாம்—இது கல்லக்குடி பானம்! அது தூத்துக் குடிச்சாறு! இது சேலத்து ரசம்! அது வால்பாறையில் பிழிந்தெடுத்தது!—என அடுக்கிக் கொண்டே போனான் தளபதி. தேசீயம்பிள்ளையால் நிற்க முடியவில்லை.

தளபதி கலகலவெனச் சிரித்தான்.

என் திகைக்கிறீர்? எல்லாப் பானங்களுமே உமது நாட்டில் தயாரித்ததுதானே! வெளிநாட்டுச்சரக்கு என்று எண்ணுகிறீரா? இல்லை; உமது சொந்த நாட்டுச் சரக்குதான்! சிறுதுளிகளாவது அருந்தும்!—தளபதி மிகவும் பிடிவாதப்படுத்தினான்.

வேண்டாம் பூமாதேவியைக் குளிப்பாட்டுவதற்காகத் தயாரித்த புண்ணிய தீர்த்தம் இது! இதை இங்கே பானமாக அருந்துவது என்றால் எப்படி முடியும்?—தேசீயம்பிள்ளை கொஞ்சம் கோபத்தோடு பதில் கூறினார். தளபதி விடவில்லை.

எமலோகத்தில் நடைபெறும் உபசாரத்தை சரிவர ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?

தேசீயம்பிள்ளை விழித்தார்!

பூலோகத்தில் ஆரம்ப ஆசிரியர்களாகப் பிறக்க வேண்டும்!

வேண்டாம்—வேண்டாம்! உபசாரத்தை மறுக்காமல் ஏற்றுக்கொள்கிறேன். கொடுங்கள் கிண்ணங்களே! தேசீயம்பிள்ளை சிறு மயக்கத்தோடு அமர்ந்தார்.

ஆகாஷவாணி எங்கே?—என்று அதட்டிக் கேட்டான் தளபதி.

இதோ வந்தேன்!—என்று அரை நிர்வாணமாக ஒரு பேருருவப் பெண் ஓடிவந்தாள். நிலக்கரியை அரைத்துப் பூசினாற் போன்ற மேனி! நெருஞ்சி முட்கள் நிறைந்த தரை போன்ற முகம்! அவள்தான் எமலோகத்து இசைக்குயில்! அந்த ஆகாஷவாணி முகாரி ராகத்தில் பாட ஆரம்பித்தாள்; பாட்டைக் கேட்டதும் தேசீயம்பிள்ளைக்கு புதுத் தெம்பு உண்டாயிற்று. ஆகாஷவாணியின் முகத்தையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவளும் அவரையே வைத்த விழி வாங்காமல் பார்த்தாள். இருவரிடையே விவரிக்க முடியாத ஒரு உணர்ச்சி கொந்தளித்து எழுந்துவிட்டது.

அழகுப் பதுமையே! ஆரணங்கே! தேடக் கிடைக்காத திரவியமே! தேன்மொழியே! தித்திக்கும் கனியே! தெள்ளமுதே! அருகே வா!—என மயக்கத்தில் உளறினார். அவளும் அருகே வந்தாள். இருவரும் தழுவிக் கொண்டனர். ராணுவத் தளபதி கண்களை மூடிக்கொண்டு வேறுபக்கம் திரும்பிக் கொண்டான்.

இசை நின்றது. இன்பப் போதையில் தேசீயம் பிள்ளை மிதந்தார். நெடுநேரங் கழித்து ஆகாஷவாணி பிரியமுடியாமல் பிரிந்து சென்றாள்.

திடீரென தாரை தப்பட்டை சங்குகளின் முழக்கம் கேட்டது. அதனைத் தொடர்ந்து எமதர்மன் விருந்து மாளிகைக்குள் நுழைந்தான்.

என்ன தேசீயம்பிள்ளை! உபசரிப்புக்கள் எல்லாம் சரிவர நடந்ததல்லவா?—எமன் கேட்டான்.

ஆகா! நன்றாக நடந்தது. உபசரிப்பின் உச்ச கட்டமே ஆகாஷவாணியின் பிரவேசம்தான்! ஆகா! ஆகா! வர்ணிக்கவே முடியாது!—தேசீயம்பிள்ளை உற்சாகத்தோடு பதில் கூறினார்.

உம்மோடு நீண்டநேரம் பேட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தும் நிறைவேற இயலாது போய்விட்டது. குறுகிய காலத்திலேயே நமது பேட்டி முடியும்!—எனக் கூறிய எமன், தளபதியைப் பார்த்து, நீர் உடனே சென்று இன்று நமது சபை கூடுவதற்கு வசதியில்லை; ஏனெனில் “வரி”யைப்பற்றிய விளக்கம் தெரியாமல் கூடிப் பயனில்லை—ஆகவே, நாளைக் காலையில்தான் சபை கூடும் என்று அறிவித்துவிடும்—என ஆணையிட்டான்.

தளபதியும் உடனடியாக சிரசாசனம் செய்து வணக்கம் தெரிவித்துவிட்டு அகன்றான்.