காட்சி 38 / 38
காட்சி-38
கண்ணகி சிலைக்குக் கல்
இமயத்தில் - குயிலாலுவம்
மூல ஸ்கேன் 88
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[சேரன் செங்குட்டுவனுக்கும் கனக விஜயருக்கும் நடைபெற்ற போரில், செங்குட்டுவன் வெற்றி பெறுகிறான்.]
சேரன் : வில்லவா! வெற்றி முழங்கும் இந்த இடத்திற்குப் பெயர் என்ன?
வில்லவன் : குயிலாலுவம்.
சேர : குயிலாலுவம், குறித்துக்கொள்! இந்தப் பாறைகள் அனைத்தும் பைந்தமிழ் வீரம் தீட்டிய ஏடுகள். வெற்றி மட்டும் போதாது வில்லவா, அந்த வீணர்களை விடக்கூடாது!
வில் : காஷாய உடையிலே ரிஷிகளைப் போல் எங்கே ஓடி விட்டார்களாம் கனக விஜயர்கள்.
சேர : இது புதுமையல்ல, அவர்களுக்கு உரியதான ஒரே பழக்கம் அதுதான்.
[கனக விஜயர்கள் முனிவர் உடையில் கைது செய்யப்பட்டுக் கொண்டுவரப்படுகிறார்கள்.]
சேர : யார் இவர்கள்?
வில் : கனக விஜயர்!
சேர : கனக விஜயர்! கனக விஜயர்! ஆகா வீராதி வீரர்களே, நன்றாக இருக்கிறது போர்த்திறமை! முதுகு காட்டுவது - முக்காடு போடுவது—மறைந்திருந்து தாக்குவது—மகானாய் மாறுவது! அமைதியான முனிவர் வேடத்தில் இருக்கிறீர்களே; இதற்குப் பதில் சொல்லுங்கள்! புராணத்திலே தேவாசுர யுத்தம் எவ்வளவு நாள் நடந்தது?
கன : பதினெட்டு ஆண்டுகள்.
சேர : ராம ராவணப் போர்?
கன : பதினெட்டு மாதங்கள்.
சேர : பாரதப் போர்?
கன : பதினெட்டு நாட்கள்.
சேர : வீரர்களே! நினைவிருக்கட்டும், சேரன் செங்குட்டுவன் வட நாட்டிலே நடத்தியபோர் பதினெட்டே நாழிகையில் முடிந்துவிட்டது!
கன : மன்னவா, மண்டியிடுகிறோம். மன்னித்து விடுங்கள்.
சேர : மன்னிப்பதா? நான் மன்னிப்பதா? தமிழ்நாட்டு மண்ணில் வந்து மண்டியிடுங்கள். அது உங்களை மன்னிக்கட்டும்.
வில் : மன்னவா, தமிழகம் திரும்ப வேண்டாமா? புறப்பட்டு முப்பத்திரண்டு திங்கள் ஆகின்றனவே.
சேர : புறப்படுவோம் - வில்லவா ; அதற்குள் கண்ணகிக்குச் சிலை நாட்ட இங்குக் கல் எடுக்க வேண்டுமல்லவா?
வில் : ஆமாம்.
சேர : அந்தக் கல்லைச் சுமப்பதற்குச் சரியான எருதுகள் கிடைத்து விட்டன. கனக—விஜயா, தமிழரின் வீரத்தின் மீது வீசினாய் ஒரு சொல்; இப்போது தூக்கு கல்!
வீரர்கள் : சேரன் செங்குட்டுவன் வாழ்க!