பொருளடக்கம்சிலப்பதிகாரம்

காட்சி 37 / 38

காட்சி-37

வடபுலப் படையெடுப்பு

சேரன் செங்குட்டுவன் அவை

மூல ஸ்கேன் 87

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

சேரன் : வாளேந்தி, தமிழகத்தில் புகழேந்தி வாழும் வேங்கைப் புலிகளே! வந்து விட்டது உங்களுக்கு எல்லாம் அழைப்பு! மீண்டும் ஒருமுறை நம் வீரத்தை நில நாட்ட நல்லதோர் வாய்ப்பு! இமயத்திலே பொறித்திருக்கும் நம் சின்னங்களைப் பழித்தார்களாம், சிறுமதி கொண்டோர் சிலர் - புலியைக் கேலி செய்தான் போர்முனை காணப்புல்லன் - வில்லை இகழ்ந்தான் வீரத்தை விலை கேட்கும் வீணன். கயலைப் பழித்தான் களம்புகு கதைகளைக் கேட்டறியாக் கசடன். உத்திரமும் - விசித்திரமும் - சிவேதமும் - பைரவமும்; விழிக்காதீர்கள்! மனிதர்களின் பெயர்கள்தான் இவைகள் - இந்த மண்டுக மன்னர்களுக்குத் தலைவர்களாம் கனகனும் விசயனும்! கங்கைக்கரை வாழ் காவலர்கள் காவிரிக் கரைக்கு அறைகூவல் விடுத்தார்களாம்! தோழர்களே! புத்தி புகட்டுவோம் அவர்களுக்குப், புறப்படுங்கள்!

புரோகிதர் : சோழனுக்கும் பாண்டியனுக்கும் இல்லாத ஆத்திரம் தங்களுக்கு மட்டும் ஏன் மன்னவா?

சேர : தமிழன் என்பதால்! தன் மான உணர்ச்சி குன்றுததால்! சோழனு பாண்டியனு என்னுடைய பகைவனுக இருக்கலாம்; அதற்காக பிறநாட்டார் வாலாட்ட விடமாட்டேன், என் உயிருள்ள வரையில்! என் தமிழையல்லவா இகழ்ந்தார்கள்; தருக்கர்கள்! ஆகா...குறள் தந்த கோமானே, வள்ளுவனே! உன்னை இகழ்ந்தார்கள்! அத்தாணி மண்டபத்தில் சத்தான கருத்துரைக்கும் சாத்தனரே, உம்மை இகழ்ந்தார்கள்! பாவாணரே! ஐந்தாம் பத்துப் பாடிய அன்புப் பரணரே! அரங்கின் அண்ணலே உம்மை இகழ்ந்தார்கள்! முத்துக்கடலே, முல்லைக் கொல்லியே, உன்னை இகழ்ந்தார்கள்! எட்டுத் திக்கும் முரச கொட்டி வரும் சிங்கத் திருவிடமே, உன்னை இகழ்ந்தார்கள்!....அன்னை நற்சோணையே, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகன் செங்குட்டுவனின் வெற்றியை இகழ்ந்தார்கள்! ஈடற்ற புலவனே இளங்கோ! ஆசைத்தம்பி, உன்னை இகழ்ந்தார்கள்! நீதிக்கு உயிர் தந்த பாண்டியா! ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனே! உன்னை இகழ்ந்தார்கள். செந்தமிழ் வளங்குறையாச் சிற்றரசுகளே! சிங்க ஏறுகளே! அறிஞரே! கவிஞரே! கலைஞரே! கல்வாணரே! உம்மையெல்லாம் இகழ்ந்தவர்கள் உயிரோடு இருக்கிறார்கள், மன்னர்களாய்! பொருநை நதியும் பொழிலும் சூழ்ந்த எழில்மிகு வஞ்சித் தலநகரே, உன்னை இகழ்ந்தார்கள்! இகழ்ந்தார்கள்!! இழிகுணம் படைத்தோர் இகழ்ந்தார்கள்! அமைச்சர் அழும்பில் வேள் இருக்க - வீரன் வில்லவன் கோதை தளபதியாயிருக்க-உங்கள் திரண்ட தோள்களில் எல்லாம் வலிமை வளர்பிறையாயிருக்க - அந்தப்புரத்திலே உலவிக் கிடக்க வேண்டியவை ஆவேசக் கூச்சலிட்டனவாம்—வீரர்களே! பார்ப்போம் ஒரு கை அந்த நாகாக்கத் தெரியாத நாடோடிகளே! தும்பிவாடி - தோரணங்கற்பட்டு - வேட்டமங்கலம் கோட்டைகளிலுள்ள வீரரெல்லாம் கிளம்பட்டும்! காளையரே! காதலியருக்குக் கடைசி முத்தம் இதுவாக இருக்கலாம் என்று கூறிவிட்டுப் புறப்படுங்கள்! நாமென்ன சாகப் பயப்படும் சமுதாயமா? சமருக் கஞ்சும் இனத்தவரா, அந்தச் சாமரமேந்திகளிடம் சரணடைய! இல்லை! இல்லை! களத்திலே உங்கள் தலைகள் பறிபோகலாம்! ஆனால் கனல் கக்கும் கண்களோடு அவை கொய்யப்படட்டும். தசைகள் கிழித் தெறியப்படலாம்! ஆனால் சுயமரியாதை ரத்தத்தின் சூடு தணியாமல் அவை கிழிக்கப்படட்டும்! முரசு தட்டுங்கள், இமயத்தை முட்டுங்கள், தமிழன் தோற்றதில்லை, தோற்றதில்லை! தோழர்களே! புறப்படுங்கள்!’