காட்சி 36 / 38
காட்சி-36
தீயினில் திருநகர்
தெருக்கள்
மூல ஸ்கேன் 86
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[பொற் கொல்லர் வீடு எரிகிறது! தெருவில் மரமென நிற்கும் பொற்கொல்லர்]
பொற் : என்னுள் அன்றே பாண்டியனின் நீதி கவிழ்ந்தது! அதனால் நெருப்புக்கு நானே இரையாகிறேன்!
[என எரியும் வீட்டுக்குள் நுழைந்து தணலாகிறார்!]
★
[ஒரே தீக்காடு! அரண்மனை அழிகிறது பெரு நெருப்பால்! அரண்மனையின் இடிபாடுகளில் சிலம்பு திருடிய அதிகாரி சிக்கி அழிகிறான்!]
[கண்ணகி—ஆவேசக் குரலும், புயல் நடையும்!]
கண் : பரவட்டும்...தீ பரவட்டும்! என் மனம் எரிவது போல் மதுரை எரியட்டும்! என் நெஞ்சிலே மூண்ட நெருப்பே! அழித்து விடு மதுரையை! என் கணவனைப் பலி கொண்ட மதுரை அழியட்டும்! அழியட்டும்!! கோவலரைக் கொன்றபோது வாய்மூடிக் கிடந்த கூடல் நகரத்தாரே! இப்போது கூவுங்கள்! அழிவைக் கண்டு அலறுங்கள்! கதறுங்கள்! அலறுங்கள்! காற்றே வீசு! கனலே கிளம்பு....! அழிவே புறப்படு! பழிக்குப் பழி வாங்கு! பழிக்குப் பழி! பழிக்குப் பழி!
[நெருப்பிடையே கண்ணகி பெருஞ்சிரிப்பு]
[மதுரை தீயிலே மறைகிறது]
[நீதி தவறிய பாண்டிய மண்டலம் அழிவதை மக்களே விரும்பினர்கள்]