காட்சி 35 / 38
காட்சி-35
வழக்குரை படலம்
பாண்டியன் கொலு மண்டபம் (வெளியே)
மூல ஸ்கேன் 82, 83, 84, 85
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[கண்ணகி வருகிறாள், கையிற் சிலம்புடன்! காவலர் அவள் அதிகாரத்துடனும் வியப்புடனும் நோக்குகின்றனர்.]
கண்ணகி : காவலரே! காவலரே! காவியுக நீருங் கையில் தனிச் சிலம்பும் ஆவி குடிபோன வடிவுங் கொண்டு ஒருத்தி வந்திருக்கிறுள், உம்மைச் சந்திக்க; என்று உமது மன்னனிடம் சென்று உடனே கூறுவீர்! உடனே கூறுவீர்!!
[காவலர் உள்ளே செல்லுதல்]
காவல : மன்னவா! கண்ணீரும் கம்பலையுமாக ஒரு பெண்மணி தங்களை அவசரமாகக் காணவேண்டு மென்று துடிக்கிறாள்!
பாண்டி : அப்படியா!?
அழைத்து வா உடனே!
[கண்ணகி வருகிறாள் எரிமலை போல! அவைக்க்களம் திகைப்பில் ஆழ்கிறது!]
பாண் : யாரம்மா?... வேதனை உருவமாகக் காட்சி தரும் நீ யார்?
கண் : புகழுக்கு உடல்தந்து புகழ் பெற்ற மன்னவரின் வரலாற்றைத்-தேர்க் காலில் மகனையிட்டு நியாயம் காத்த மனுநீதிச் சோழனது பெருங்கதையை நீதியின் இலக்கணமாய்ப் பெற்றுப் பெருமை கொண்ட திருமாவளவன் கரிகாற் சோழனது பூம்புகாரே எனது ஊர்!
பெருவணிகன் மாசாத்துவானின் மருமகள்!
என் பெயர் கண்ணகி!
பாண் : உன் முறையீடு என்னவோ!
கண் : முத்து விளைகின்ற மூன்று கடல் சூழ்ந்திருக்கும் தென்னகத்தில், மும்முரசு கொட்டி, முச்சங்கம் வளர்த்து, முக்கொடியின் நிழவிலே, முத்தமிழைக் காப்பாற்றும் மூவேந்தர் பரம்பரையின் பெருமைதனை மூளியாக்க முடிபுனைந்த மன்னவனே! என்றன் முறையீட்டைக் கேட்பதற்குமுன் நான் யாரென்று முழுவதும் தெரிந்து கொள்க!
பாண் : யார் நீ!
கண் : கண்ணகி!
கையில் தனிச் சிலம்போடு வந்திருக்கும் கண்ணகி! மெய்ப்பிற் பொடியும் விரித்த கருங்குழலும் நெறித்த புருவமும்கொண்டு நீதி வழுவா நெடுஞ்செழியப் பாண்டியனைத் துணிந்து இகழ்ந்துரைக்கும் கண்ணகி! அவ்வளவுதான் உனக்குத் தெரியும்!
பாண்டிய மன்னு! ரோமாபுரியின் கொலு மண்டபத்திலே உனது தூதுவர் இருக்கிறகள்! இதோ, பாண்டியத்துப் பேரவையிலே ரோமானியர் வீரர்களாகவும் தூதுவர்களாகவும் வீற்றிருக்கிறார்கள்! கடல் கடந்து கொடி கட்டி ஆளுகின்றீர்கள்!
அந்தக் கொடிக் கம்பம் முறிந்து விழ...
அயல் நாட்டார் இகழ்ந்துரைக்க...
உன் கொடுங்கோல் அளித்த அவசரத் தீர்ப்புக்கு ஆளாகிக் கொலையுண்ட கோவலன் மனைவி கண்ணகி நான் என்பதையும் அறிந்திடுக அரசே, அறிந்திடுக!.
பாண் : கோவலன் மனைவி!!! சிலம்பு திருடிய கள்வனின் மனைவி!
கண் : போதும்! யாகாவாராயினும் நாகாக்க மன்னு! நாகாக்க! யார் கள்வன்? என் கணவனு கள்வன்? இல்லை! அவரைக் கள்வனென்று குற்றம் சாட்டிய கயவர்களே கள்வர்கள்!
பாண்டி : ஆத்திரத்தில் அறிவுக் கண்ணை மூடி விடாதே கண்ணகி! கையும் களவுமாகப் பிடிபட்டான் உன் கணவன்! கள்வனைத் தமிழகத்து நீதி கொல்லாமல் விட்டது என்பது உனக்குத் தெரியுமல்லவா?
கண் : நீதியின் இலக்கணம் உரைக்கும் நெடுஞ்செழியப் பாண்டியனே! உன்னுடைய நாட்டில் எதற்குப் பெயர் நீதி?
நல்லான் வகுத்ததோ நீதி? அல்ல! அல்ல! வல்லான் வகுத்ததே இங்கு நீதி! அதனால் தான் என் வாழ்க்கருவூலத்தைச் சாவுப் படுகுழியில் கொட்டிவிட்டீர்! கொற்றவனே! குடைநிழலில் குஞ்சரம் ஊர்பவனே!
கொலு மண்டபத்தில் விசாரிக்கப்பட வேண்டிய வழக்கு, கோயில் மண்டபத்தோடு முடிவானேன்?
குற்றம் சாற்றப் பெற்றவரின் மறுப்புகளுக்கு மதிப்புத் தராமல், கொலை வாளின் வேலை அவ்வளவு அவசரமாக நடைபெறுவானேன்?
இதற்குப் பெயரா நீதி?
இதற்குப் பெயரா நேர்மை?
இதற்குப் பெயரா நியாயம்?
இதற்குப் பெயரா அரசு?
உனக்குப் பெயரா அறங்காக்கும் மன்னன்?
பாண்டி : கண்ணகி! உன் கணவன் கையிலேயிருந்தது அரசி கோப்பெருந் தேவியின் சிலம்பு!
கண் : இல்லை! கோப்பெருந் தேவியின் சிலம்பில்லை—கோவலன் தேவியாம் என்னுடைய சிலம்பு!
பாண்டி : நம்பமுடியாது என்னால்!
கண் : நீ யார் நம்புவதற்கு? உன்னை யார் நம்பச் சொல்கிறார்கள்? உன் மீது வழக்குரைக்க வந்தவள் நான்! குற்றவாளி நீ! அதனால் தீர்ப்பளிக்கும் உரிமை உன் கையில் இல்லை! இதோ இருக்கிறார்கள்—பெருங்கேண்மைப் பெரியோர்கள்! அவர்களே
இப்போது நீதிபதிகள்! அவர்கள் உரைக்கட்டும்—நல்ல தீர்ப்பு! ஆண்டோர்களே! அறிவு மிகுந்த சான்றோர்களே! அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படைகொண்டவன் பாண்டியன் என்பதற்காக நீதியின் பாதையை வளைக்காமல்... ஆரியப்படை கடந்தான்... அவனி யெல்லாம் புகழ்பெற்றான்... என்ற கீர்த்தித் திரையால் அவன் செய்த குற்றத்தை மறைத்து விடாமல்... தாய்மேல் ஆணையாகத்-தமிழ்மேல் ஆணையாகத்-தாயகத்து மக்கள்மேல் ஆணையாகத் தீர்ப்புக் கூறுவீர்! தீர்ப்புக் கூறுவீர்!
கோப்பெருந் தேவியின் சிலம்பைக் கோவலன் திருடினான் என்பது குற்றச்சாட்டு!
அதற்கு மரண தண்டனை! அது ஆராயாமல் அளித்த தீர்ப்பு... அதற்கு மன்னன் பொறுப்பு... என்பது என்னுடைய வழக்கு!
அமைச் : வழக்கிற்கு ஆதாரம்?
கண் : இதோ, இந்தச் சிலம்பு! இதற்கு இணயான மற்றொரு சிலம்பைத்தான் என் மணவாளர் விற்க வந்தார்... மாபாவிகள் அவரைக் கொன்று குவித்து விட்டார்கள்!
பாண்டி : அப்படியானால் தேவி அணிந்திருக்கும் சிலம்பு...?
கண் : அவைகளில் ஒன்று என்னுடையது... அதற்கு அடையாளம் வேண்டுமா? ஆயிரம் கேள்வி எனக் கேட்டு உன்னைக் குற்றமற்றவனாய் ஆக்கிக்கொள்ளத் துடிக்கிறாயே; நீதி மன்றத்தின் தூய்மையை அழித்த பாண்டியனே!...இப்படி ஒரு கேள்வி நேருக்கு நேர் என் அத்தானைக் கேட்டிருந்தால், நீதி வழுவா நெடுஞ்செழியன் என்ற பெயர் உனக்கு நிலைபெற்றிருக்கும்!
என் அத்தான் உயிரும் தங்கியிருக்கும்!
அமைச் : பெண்ணே! தேவி அணிந்திருப்பதில் ஒரு சிலம்பு உன்னுடையது என்பதை மெய்ப்பித்துக் காட்டுவாயா?
கண் : மெய்ப்பித்து என்ன பயன்? இறந்த என் கணவரை எழுப்பித் தருவீர்களா?
வெட்டுண்ட தலையினை ஒட்டித் தருவீரோ? முடியாது உங்களால்...முடியாது உங்களால்! ஆனால் ஒன்று...உயிர் போனதால் தொங்கி விட்ட என் அத்தானின் தலைபோல உங்கள் தலைகளையும் தொங்க வைக்கிறேன்...உங்கள் மானம் போனதால்... உங்கள் நேர்மை போனதால்... உங்கள் நீதி அழிந்ததால் .... இதோ, உங்கள் தலைகளையும் தரைநோக்கித் தொங்க வைக்கிறேன்...
மதுரைப் பாண்டியா! உனது மனைவியின் பழைய சிலம்பிலே உள்ள பரல்கள் முத்துக்களா; மாணிக்கங்களா?
பாண்டி : முத்துக்கள்! கொற்கை முத்துக்கள்!
கண் : என் சிலம்பிலே உள்ளவை மாணிக்கப் பரல்கள்!
பாண்டி : எங்கே பார்க்கலாம்... தேவி! கொடு இப்படி!
[அரசி சிலம்புகளைத் தருகிறாள்]
பாண்டி : [கீழே ஆத்திரமாக வீசி உடைத்தவாறு] இதோ பார்...
[முதற் சிலம்பு-முத்துப் பரல்கள் தெறிக்கின்றன]
பாண்டி : இதோ, கோவலன் திருடிய சிலம்பு!
[அதையும் உடைக்கிறான்.]
[அதில் மாணிக்கப் பரல்கள் சிதறுகின்றன...]
பாண்டி : ஆ!
அவையோர் : ஆ!
கண் : இன்னும் சந்தேகமா? இதோ என்னுடைய மற்றொரு சிலம்பு!
[உடைக்கிறாள், ஆவேசமாக...மாணிக்கப் பரல்கள் சிந்துகின்றன,]
கண் : என்ன சொல்லுகிறாய் பாண்டியா, இப்போது? அமைச்சர்களே! அறங் கூறும் சான்றோர்களே! இதற்கென்ன பதில்? தலை தொங்கி விட்டதா? நெடுஞ்செழிய பாண்டியனின் அறம்...மறம்...திறன்...அத்தனையும் மண்ணோடு மண்ணாகக் கலந்து விட்டதா? அய்யோ, ஏனிந்த வாட்டம்? தமிழகம் சிரிக்கின்றது பாண்டியா ; நீ தலை குனிந்து நிற்பதைப் பார்த்து!
தமிழ் நாட்டு மறைநூல் திருக்குறள் கேலி புரிகிறது பாண்டியா; உன் நீதி வளைந்த செய்திகேட்டு!
ஆனை, சேனை ஆயிரமாயிரம் எதிர்த்து வந்தாலும் அண்ணாந்து தலைகுனியாமல் படை நடத்தும் உன் வீரமெங்கே? கம்பீரமெங்கே?
வெற்றித் திருப்பார்வை எங்கே? எல்லாம் பாழ்! எல்லாமே பாழ்! பாழ்! மானமெல்லாம் போன பின்பு உனக்கு மாட மாளிகை...மணி மண்டபம் ஒரு கேடா? மாணிக்கமிழைத்த அரியாசனம் ஒரு கேடா? மாசு படரவும் மாநிலம் இகழவும் நீதி வழங்கிய உனக்குச் செங்கோல் எதற்காக? வெண்குடை எதற்காக? வேற்படை... வாட்படை... வேழப்படை எதற்காக? வீணனே! வீரர் குலத்துக்கு இழிவு கற்பிக்க வந்தவனே!
இமிழ் கடல் வேலித் தமிழகம் மெங்கும் நீங்காமல் நிறைந்திருந்த நீதிதனை நொடிப்பொழுதில் அழித்துவிட்ட பாதகனே!
அழு! அழு! நன்றுக அழு! என்னைக் கால மெல்லாம் அழவைத்த காவலனே; நன்றுக அழு!
என்றன் காதலினைக் - கண்ணுளினைக் - கண் நிறைந்த மணவாளினைக் துடிக்கத் துடிக்கக் கொன்று விட்ட பாவி; அழு! அழு! அழு!
பாண்டி : கண்ணகி!
உன் கணவன் கள்வனல்ல! ஆராயாமல் அவசரத்தில் “கொன்று வருக அவனை!” என்பதற்குப் பதில்... “கொன்று வருக அவன்” என்று ஆணையிட்ட
நானே கள்வன்! நானே கள்வன்! தமிழே! தாயகமே! என் தாயே! என்னை மன்னித்து விடு! மன்னித்து விடு!
[அடியற்ற மரமென விழுந்து சாகிறான்... கோப்பெருந் தேவியும் அவனைத் தழுவி]
கோப் : அரசே! அரசே!! அரசே!!!
[என அவன் மீது உயிர் விடுகிறாள்]
கண் : அழியட்டும்! வீழ்ந்து ஒழியட்டும்!! நீதி தவறிய பாண்டியா! உன் களங்கத்தைக் கழுவக் கூடிய சாதனம் சாவு ஒன்றுதான்! சாவு ஒன்றுதான்!! அழியட்டும்! ஒழியட்டும்!! என் கணவன் சாவைத் தடுக்க முடியாத மதுராபுரியே, அடியோடு அழியட்டும்! மாளிகைகள் மண்மேடுகளாகட்டும்! பூமி பிளக்கட்டும்! புழுதி பறக்கட்டும்! நெருப்பு பரவட்டும்! நியாயத்தின் பிழம்பு தெரியட்டும்!
[பயங்கரச் சிரிப்பு...நகரெங்கும் கேட்கிறது! நகரில் தீ பரவுகிறது! தெருவில் மக்கள் ஓட்டம்]