பொருளடக்கம்சிலப்பதிகாரம்

காட்சி 34 / 38

காட்சி-34

வஞ்சினங் கூறுதல்

வீதியிலுள்ள மண்டபம்

மூல ஸ்கேன் 81

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[கோவலன் வெட்டுண்ட செய்தி அறிந்த கண்ணகி துடித்துக் கொண்டு ஓடிவருகிறாள். வெட்டுண்ட கணவனின் உடல் மீது விழுந்து கதறி அழுகிறாள்]

கண் : அய்யய்யோ அத்தான்! அத்தான்! அத்தான்! உங்களைப் பிணமாக்கி விட்டார்களா அத்தான்? நல்ல காலம் வருமென்று மதுரைக்கு அனுப்பி வைத்தேனே! இது தானோ அந்த நல்ல காலம், அத்தான்! ஏன் அத்தான் அநியாயமாகக் கொலையுண்டீர்கள்? செய்யாத குற்றத்தை ஏன் அத்தான் ஒப்புக்கொண்டீர்கள்? கண்ணகி கதறி மடியட்டும், கண்ணீரில் மிதக்கட்டும், எண்ணெயிட்ட கடுகு போல் இதயம் வெடித்துச் சிதறட்டும் என எண்ணி இப்படியொரு காட்சிக்குப் பொருளானீரோ அத்தான்? நிலவின் ஒளி காட்டும் திருமுகமும், நீல விழி காட்டும் பெரு நோக்கும், நித்திலப் பல்வரிசை காட்டும் பேரழகும் நீங்கள் களங்கமற்றவர்கள் என்பதைத் தெரிவிக்கவில்லையா? தேனமுதே, தென்னகத்துப் புகழ் முத்தே, என்னுயிரே, பொன் விளக்கே என் உயிர்விட்டீர்? இதற்குத்தானு; சிலம்போடு நடந்து காட்டு கண்ணகி, கடைசி முறையாகக் கண்டு களிக்கிறேன் என்று சொன்னீர்கள்? அய்யோ! அப்போதெல்லாம் தெரியாதே இப்படியொரு கொடுமை காத்திருக்கிற செய்தி! அப்போதெல்லாம் தெரியாதே அத்தான்! அகிற்புகையால் மணமேற்றி, பொதிகை மலைச் சந்தனத்தைப் பொன்னவிர் மேனியெங்கும் பூசிவிட்டு, கிளிப்பச்சை இலை எடுத்துப், புதுக் கிழிஞ்சல் சுண்ணாம்பும் பாக்கும் சேர்த்துத் தாம்பூலம் மடித்துத் தந்து, சிரிப்பு தழைக்கின்ற செவ்விதழின் இன்பமெல்லாம் சுவைத்த பின்னர், வழியனுப்பிவைத்தேனே! ‘வருவீர், வருவீர்’ என்று வழிமேல் விழி வைத்து நின்றேனே. என்னை ஏமாற்றிவிட்டீர்களே

அத்தான், என்னை ஏமாற்றி விட்டீர்களே! அத்தான்! நான் என்ன குற்றம் செய்தேன்? எனக்கேன் பிறப்பு இந்தத் தண்டனை? சொல்லுங்கள் அத்தான், சொல்லுங்கள்! பேச மாட்டீர்களா அத்தான்? மாசறுபொன்னே, வலம்புரி முத்தே, காசறு விரையே, கரும்பே, தேனே என்றெல்லாம் என்னைக் கொஞ்சுவீர்களே, அந்தக் கொவ்வைக் கனிவாய்த் திறந்து பேசுங்கள் அத்தான்! அத்தான், ஒருமுறை பேசுங்கள் அத்தான்! அத்தான்! அத்தான்! உங்கள் கண்ணகி வந்திருக்கிறேன் அத்தான்! பேசுங்கள் அத்தான்! பேசமாட்டீர்களா! பேசமாட்டீர்களா? வேண்டாம்.

[சினங் கொண்ட புலிபோலக் கண்ணகி எழுகிறாள்.]

கண் : வேண்டாம்! உங்களுக்காக இந்த உலகத்தையே பேச வைக்கிறேன். நீங்கள் கள்வரல்ல. என் உள்ளம் கவர்ந்த கள்வரே, நீங்கள் கள்வரல்ல. இதை உலகம் ஒப்புக் கொள்ள வேண்டும். வளைந்த செங்கோல்க் கையில் வைத்திருக்கும் பாண்டியன் தலை குனிய வேண்டும். உங்களே ரத்தச் சகதி யிலே புரளவிட்ட அநியாயக்காரர்களைப் பழி வாங்க வேண்டும். மதுரை மூதார், மாசற்ற உங்களே குற்றவாளியாக்கித் தன் புகழைக் குறைத்துக் கொண்ட மதுரை மூதார் அழிய வேண்டும். அடியோடு அழிய வேண்டும். பழிக்குப்பழி! பழிக்குப்பழி! அத்தான்! உங்கள் ரத்தத்தின் சாட்சி.

[வெட்டுண்ட கோவலன் மீது வடிந்துள்ள ரத்தத்தை எடுத்துத் திலக மிட்டுக்கொள்கிறாள்]

வருகிறேன். நொடியில் வருகிறேன்.

[கண்ணகி கனல் கக்கும் விழிகளுடன் தனது காலில் இருந்த மற்றொரு சிலம்பைக் கழற்றிக் கையில் எடுத்துக் கொண்டு, சினங் கொண்ட வேங்கையெனப் பாண்டியன் அரண்மனை நோக்கி ஓடுகிறாள்]