காட்சி 32 / 38
காட்சி-32
மதுரை மண்ணில் கோவலன் குருதி
வீதியிலுள்ள மண்டபம்
மூல ஸ்கேன் 78, 79
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[பொற்கொல்லர், அதிகாரி, வீரர்கள்; கோவலன் இருந்த மண்டபத்திற்கு வருகின்றனர்]
கோவலன் : பொற்கொல்லரே, போன காரியம் வெற்றி தானே?
பொற்கொல்லர் : நான் போன காரியம் வெற்றிதான்! ஆனால் நீ வந்த காரியம்தான் தோல்வியில் முடிந்து விட்டது.
கோவ : அப்படியானால் மன்னருக்குச் சிலம்பு தேவையில்லையா?
பொற் : மன்னருக்கேன் சிலம்பு? மகாராணிக்கல்லவா வேண்டும்.
கோவ : (புரியாமல்) பொற் கொல்லரே!—
பொற் : சிலம்பை அவரிடம் கொடு.
[சிலம்பைக் கோவலன் அதிகாரியிடம் கொடுக்கிறான்]
அதிகாரி : உனக்கேது இந்தச் சிலம்பு?
கோவ : என் மனைவியின் சிலம்பு!
அதி : இதை விற்க வேண்டிய காரணம்?
கோவ : வாங்குபவருக்குத் தேவை இல்லாத கேள்வி!
அதி : திறமையான திருடன்!
கோவ : [திடுக்கிட்டு]...தி ரு ட ன்... பொற் கொல்லரே! ஏன் இந்தப் பழி என்மீது? இது என்ன அநியாயம்?
பொற் : அரசியின் சிலம்பைத் திருடியது மட்டும் நியாயமோ?
கோவ : யார் திருடியது உங்கள் அரசியின் சிலம்பை? அதைக் கண்டுபிடிக்கத் திறனற்றவர்கள்...வழியிலே போகிறவன் மீது பழியைப் போடுவதா?
அதி : அடக்கடா வாயை! பஞ்சமா பாதங்களின் நிழல்கூட நுழைய முடியாத பாண்டி-மண்டலத்தில் ஓர் பாதகம் உன்னுருவிலே நுழைந்திருக்கிறது என்பதைக் கேட்டு மன்னர் பதைக்கிறார்...துடிக்கிறார்!
கோவ : அந்த மன்னரை நான் காணுகிறேன். கள்வனல்ல காவலரே நான்....கருத்தழிந்த காரணத்தால் கைப்பிடித்த மணிவதனக் கண்ணீரில் மிதக்கவிட்டுக் கனக மலை, வைர மலை, கணக்கிடவே முடியாத வெள்ளி மலை, அத்தனையும் அழித்துவிட்டுப், பிழைப்புக்கு வழி தேடிப் பிற நாடு வந்திட்ட மா பாவி! என் சீதளச் செந்தமிழாள்...சிந்தைக்குப் பெரு விருந்து...அவள் செந்தாமரைக் கால்களிலே அணிந்திருந்த சிலம்புதனை விற்பதற்கும் துணிந்து விட்ட கொடுமையாளன் என விளக்குகின்றேன். ஐயா! தமிழ் படிந்த நெஞ்சமிது...தமிழ்த் தாயின் வயிற்றினிலே கருவாகி உருவாகித் திருநாட்டின் மண்மீது தவழ்ந்தவன் நான்...இருட்டு மதி படைக்கவில்லை; திருட்டுத் தொழில் நடத்துவதற்கு என்பதனைக் கூறுகின்றேன். எந்நாடும் புகழ்கின்ற பெரு வேந்தன் நெடுஞ்செழியன் அவைக் களத்தில் நீதிதனைப் பெறுகின்ற உறுதி எனக்குண்டு, உடன் அழைத்துச் செல்வீர் வேந்தரிடம்!
அதி : வேந்தரென்ன உன் வீட்டுக் காவலனு?
கோவ : நாட்டுக்குக் காவலன்! நீதிக்கு—நேர்மைக்கு—அறத்துக்கு—அன்புக்கு—தமிழுக்குக் காவலன் நெடுஞ்செழியன்! அநீதி, அணுவிலோர் பாதி அவன் ஆட்சியில் நடைபெறவும் அனுமதிக்கமாட்டான் என்றகிலும் புகழக் கேட்கிறேன். அந்தப் பாண்டியத்துப் பெரு வேந்தன் பார்க்கட்டும் என் முகத்தை! கள்வருக்குரிய இலக்கணத்தைக் காண்பானு? களங்கத்தின் சாயல்தனை எடுத்துக் காட்டுவானு? முகக்குறியால் நீதி சொல்லும் முடிவேந்தன் நெடுஞ்செழியன் முன்னிலையில்
நிற்கின்றேன். அவன் முடிவுகளை ஏற்கின்றேன். இட்டுச் செல்வீர் மன்னரிடம்!
அதி : கைகாரக் கள்வனே; உன் போன்ற பாவிகளின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்.
கோவ : ஏன், உன் முகத்தைப் பார்ப்பவர் என் முகத்தைப் பார்க்கமாட்டாரா?
பொற் : எனப்பா, உனக்கு இவ்வளவு வாய்த்துடுக்கு? திருடியதுமல்லாமல் திமிர் வாதம் வேறு? எதிர்த்துப் பேசாமல் உண்மையைக் கூறி விடு!
கோவ : பொற் கொல்லரே, நான் கள்வனு?
பொற் : கள்வன்தான்; நீ கள்வன்தான்!
அதி : ஆம்; நீ கள்வனேதான்.
கோவ : கள்வன்; நான் கள்வன்! கண்ணகி, உன் கணவன் கள்வன்! என் பத்தரை மாற்றுத் தங்கமே, பாண்டிய நாடு தீர்ப்பளிக்கிறது அப்படி. நான் கள்வனு கண்ணே! அப்பேயோ! கண்ணீர் ததும்ப விடை கொடுத்து அனுப்பினாயே கண்ணகி! இப்படி ஒரு களங்கம் எனக்கு வருமென்று தெரிந்துதானோ கண்மணி...! தித்திக்கும் செந்தேனே! தெருப் புழுதியில் வீணையென உன்னை வீசி விட்ட கயவனுக்குச் சரியான பரிசு! கள்வன்! கள்வன்! கள்வன்! அய்யோ! ஏற்கனவே ஏக்கத்தால் வாடிவிட்ட உன் இதயம் இந்த இழிசொல் எனக்குக் கிடைத்த செய்தியை எப்படித்தான் தாங்கிக் கொள்ளுமோ? கண்ணகி! ஏன மணந்தாய்; இன்பம் பெறலாம் என இருந்தாய்! எரிமலையாய் ஆக்கிவிட்டேன் உன்னுடைய வாழ்வை! அது போதாதென்று கள்வனின் மனைவியடி. கண்ணகி என்று ஊரார் தூற்றுதற்கும் உனை ஆளாக்கி விட்டேன். உதய தாரகையே! ஒப்பில்லா மாணிக்கமே! மாட மாளிகை கூட கோபுரத்திலே அமர்ந்து மகர யாழ் நீ மீட்ட-மந்த மாருதம் தாலாட்ட-உன் மடிதனிலே உறங்க வேண்டிய நான், மதுரை மாநகரில் கள்வன் எனும் கணை தாக்கக் கதறுகின்றேன்; புலம்புகின்றேன்; நான் கள்வனும்! நீ சொல் நான் கள்வனா? நான் கள்வனா?
அதி : ஏ; இதோடு உன் வாழ்வு முடிந்து விட்டது.
[கோவலன் கழுத்தில் தளபதியின் வாள் பாய்கிறது]