பொருளடக்கம்சிலப்பதிகாரம்

காட்சி 31 / 38

காட்சி-31

வளைந்தது செங்கோல்

நெடுஞ்செழியன் பள்ளியறை

மூல ஸ்கேன் 77

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[அவைக்க்களம் செல்லுதற்குரிய உடை பூண்ந்து புறப்படத் தயாராகிவிட்ட பாண்டியன், அரசியை நோக்கி...]

பாண்டியன் : நேரமாகிறதே! நீ புறப்படவில்லை நீதி மன்றத்துக்கு?...

அரசி : நான் வரவில்லை, சிலம்பில்லாத காலோடு!

பாண் : இன்று நீதி மன்றத்தில் சிலம்புத் திருடனையுந்தான் கண்டு பிடிக்கப் போகிறேனே!

அரசி : ஆகா...எவ்வளவு அக்கறை? உங்களுக்குப் புறப்பட்டு எழுவதும், போர்த் தளவாடம் சேகரிக்கவும், பொழுதெல்லாம் பாண்டி மண்டிலத்துச் சேதி கேட்கவும் நேரமிருக்குமே தவிரப், பொலிவிழந்து கிடக்கிறதே துணைவியின் பாதம்...என்ற கவலை வேறு இருக்கிறது?...

நெடுஞ்செழியன் : உன்னையும் என்னையும்விட நாடு பெரியது என்பதை மறந்து விடாதே!...அற்பச் சிலம்புக்காக...ஒரு அரசி இவ்வளவு கவலைப்படுவதா?

அரசி : அற்பச் சிலம்பாகத்தானிருக்கும் தங்களுக்கு! நானே அற்பமாகிவிட்டேனல்லவா; அதனால்!

நெடுஞ் : சரி...சரி...நீ வருகிறாயா இல்லையா; நீதி மன்றத்துக்கு?

அரசி : சிலம்பில்லாமல் இங்கிருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்கமாட்டேன்...

நெடுஞ் : ம்...சரி...வருகிறேன்!

[என வேகமாகப் போகிறான்!

[வெளியே அதிகாரி(சிலம்புத் திருடன்)தயாராக இருக்கிறான். வணங்கிப் பின்னால் செல்கிறான்]

[அதிகாரி பின் தொடர வேகமாக வரும் அரசன் முன்னே...பொற் கொல்லர் வணங்குகிறார்]

நெடுஞ் : என்ன?

பொற் : சிலம்பு திருடிய கள்வன் அகப்பட்டு விட்டான் மன்னவா!

நெடுஞ் : எங்கே அவன்?

[அதிகாரி திடுக்கிட்டு விழித்தல்]

பொற் : சிலம்பைப் பழுது பார்த்து விற்பதற்கு முயன்று கொண்டிருந்தான்...அவனைப் பிடித்துப் பத்திரப்படுத்தி விட்டுச் செய்தி சொல்ல ஓடி வந்தேன்...

நெடுஞ் : அப்படியா?

[அதிகாரியிடம்]

பாண்டிய நாட்டில் கள்வனு? ம்...உடனே அவனைக் கொன்று வருக!...

[அதிகாரியும் பொற் கொல்லரும் புறப்படுதல்]