பொருளடக்கம்சிலப்பதிகாரம்

காட்சி 29 / 38

காட்சி-29

ஒற்றைச் சிலம்பின் ஒலி

மாதரி வீடு

மூல ஸ்கேன் 72, 73, 74, 75

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[கண்ணகி அடுக்களையில் சமையல் வேலையில் ஈடுபட்டிருக்கிறாள். கோவலன் வாட்டமாக அமர்ந்திருக்கிறான். கண்ணகி கோவலனிடம் வந்து]

கண்ணகி : அத்தான்!

கோவலன் : ம்!

கண் : ஏன் வாட்டமாயிருக்கிறீர்கள்?

கோவ : மீண்டும் வாணிபத்தைத் தொடங்குவதற்கு என்ன வழி யென்று தேடிக் கொண்டிருக்கிறேன்!

கண் : மதுரையில் நம்முடைய உறவினர்கள் நிறைய இருக்கிறார்கள்; கொற்கை முத்துக்கள் விற்றுக் கோட்டைபோல் வீடு கட்டிக் கொண்டிருக்கும் அவர்கள் யாரும் நமக்கு உதவி செய்ய மாட்டார்களா?

கோவ : என் தந்தையிடமோ...உன் தந்தையிடமோ கூடப் பெற வேண்டாமென்ற உதவியை, உறவினர்களிடம் போய்ப் பெறுவதா?

கண் : வேறு வழி?

கோவ : பாண்டி மண்டலத்தில் வாணிபம் செய்ய வழியில்லாமல் இல்லை? தொண்டி, கொற்கைத்துறைமுகங்களிலேயிருந்து சங்குகளும், முத்துக்களும், எலி மயிரினால் செய்யப்பட்ட பட்டு நூல் ஆடைகளும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. சங்கை அறுத்து வளையல் செய்யும் தொழில்; தங்கநிற ஆடை நெய்யுந் தொழில்; உப்பு விளைவிக்கும் தொழில்! இப்படிப் பலதொழில் உண்டு பாண்டியத்தில்! எந்தத் தொழிலில் ஈடுபடவும் பொருள் வேண்டும்!

கண் : அத்தான்! நான் ஒரு வழி சொல்லுகிறேன், கோபிக்கமாட்டீர்களே?

கோவ : என்ன கண்ணகி?

கண் : என் திருமணப் பரிசாக ஐம்பதாயிரம் கழஞ்சு பொன்னுக்கு வாங்கித் தந்தீர்களே; அழகான காற்சிலம்புகள்! அவைகளில் ஒன்று...

கோவ : சிலம்புகளையா? கண்ணகி! சிலம்புகளை விற்பதா? அய்யோ; இந்த வார்த்தையை என் காதுகள் கேட்கும் காலமும் வந்ததே! மத்தளம், சங்கு, முரசுகள் முழுங்க, மன்னர் பவனிபோல் வெண் பொற்குடையின் வரிசைகள் விளங்க, மணவிழா கண்டு சுவை மிகு நாளில் அணிந்த சிலம்பை அழிப்போம் என்று, ஆருயிரே; நீ சொல்லியதற்கு...நானே காரணம்! நானே காரணம்!!

கண் : தங்களுக்குப் பயனில்லாமல் அழுகக்கேன் ஆபரணம்?

கோவ : உன் கமல மலர்ப் பாதங்களில் கணீர் கணீர் என ஓசை யெழுப்பி, இந்தக் கயவன் இதுவரையில் கழற்றுமல்

வீட்டு வைத்திருக்கும் ஆபரணம் அது ஒன்று தான் என்று இடித்து இடித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறதே; அந்த சுந்தரச் சிலம்பையா விற்றுவரச் சொல்லுகிறாய்?

அய்யோ...எப்படிப்பட்ட கஷ்ட காலம் வந்து விட்டது!

கண் : நீங்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை. நீங்கள் கஷ்டப்படவே மாட்டீர்கள்!

கோவ : எல்லாவற்றையும் சேர்த்துத்தான் உனக்குப் பெரிய தீங்கு செய்து விட்டேனே, கண்ணகி!

கண் : போனதை யெல்லாம் நினைத்து மனத்தைப் புலம்ப விடாதீர்கள்!

கோவ : கண்ணகி!

கண் : வாருங்கள் சாப்பிடலாம்! வெகு நாட்களாயிற்று, என் கையால் சமைத்து உங்களுக்கு உணவு பரிமாறி! வாருங்கள்!

[அவன் கைதொட்டு அழைக்கிறாள்.]

[எழுகிறான்.]

[உணவு படைக்கிறாள். கோவலன் சாப்பிடுகிறான்.]

கண் : சமையல் எப்படி யிருக்கிறது?

கோவ : வழக்கத்தைவிடக் கொஞ்சம் அதிகமாகவே சுவைக்கிறது! கண்ணகி! இதுதான் உன்னுடைய கடைசிச் சமையல்!

கண் : ஏன்?

கோவ : மீண்டும் வாணிபம் தொடங்கி விட்டால், உன்னைப் பிறகு சமைக்க விடமாட்டேன். சமையலுக்கு ஒரு தனி ஆள்! நாமிருவரும் தனி உலகம்! சரிதானே?

[கண்ணகி வெட்கித் தலை குனிந்தவாறு...]

கண் : சரி சரி! அதற்குள் கோட்டை கட்டாதீர்கள்! சாப்பிடுங்கள்!

[கண்ணகி வெற்றிலையில் சுண்ணாம்பு தடவுதல்; மடித்தல்; கணவனுக்குத் தாம்பூலம் தருதல்]

கண் : சிலம்பு விற்ற பொருளில் வாணிபத்துக்குத் தேவையானது போக மீதியில் உங்களுக்கு வேண்டிய பட்டாடைகளும், அணிமணிகளும் வாங்கி வாருங்கள்! நீண்ட நாட்களாகிறது; உங்களுக்கு நான் அலங்காரம் செய்து அழகு பார்த்து!

[கேலியாக]

கோவ : ம்!

[நாணத்துடன்]

கண் : ம்!

[அப்போது ஐயை உள்ளே ஓடிவந்து]

ஐயை : அண்ணா! அண்ணா!

கோவ : என்னம்மா?

ஐயை : அண்ணியையும் அழைத்துக் கொண்டு போய்விடாதே, தலிநகருக்கு!

கோவ : ஏன்?

ஐயை : நாங்களெல்லாம் குரவைக் கூத்து நடத்தப் போகிறோம்...அதை அண்ணி பார்க்க வேண்டுமென்று எனக்கும் என் தோழிகளுக்கும் ஆசை!

கோவ : கண்ணகி என்னோடு வருவதா யில்லயம்மா! நான் மாத்திரமே தலைநகருக்குப் போகிறேன். உங்கள் குரவைக் கூத்தைக் குதூகலமாக நடத்துங்கள்!

ஐயை : சரியண்ணே! அண்ணி! தயாராக இருங்கள்; கொஞ்ச நேரத்தில் வருகிறோம், அழைக்க!

[கண்ணகி தலையசைக்க, ஐயை போய் விடுகிறாள்.]

கோவ : கண்ணகி! நான் தலைநகருக்குப் புறப்படுகிறேன்!

கண் : இதோ!

[என்று சிலம்புகளைக் கழற்றப் பார்க்கிறாள். தடுத்து]

கோவ : வேண்டாம் கண்ணகி! அய்யோ...நீ சிலம்பில் கைவைத்தது என் தலையைத் துண்டிப்பது போல் இருக்கிறது!

கண் : நான் சொல்வதைக் கேட்க மாட்டீர்களா அத்தான்? நாம் ஆரம்பிக்கும் வாணிபம் வளரத் தொடங்கிவிட்டால் இதுபோல் எத்தனையோ சிலம்பு வாங்கிக்கொள்ளலாம்!

[என்று கழற்றப் போகிறாள்]

கோவ : இரு இரு கண்ணகி! சிலம்புகள் உன் காலில் இருக்கும் போதே ஒரு முறை நடந்து காட்டு! அந்தக் காட்சியைக் கடைசித் தடவையாக நான் பார்த்துக் களிக்கிறேன்.

கண் : அத்தான்?

கோவ : ஆமாம் கண்ணகி! சிலம்பை விற்று விட்டால் பிறகு அந்தக் காட்சியைக் காண முடியுமா? எங்கே, நட! நட கண்ணே!

[கண்ணகி கண்களில் நீர்!]

[நடக்கிறாள்]

[கோவலன் கண்கள் குளமாகின்றன]

கண் : அத்தான்! என்னென்னவோ சொல்கிறீர்கள், எனக்குப் பயமாயிருக்கிறது!

[அழுதவாறு தழுவிக் கொள்ளுதல்]

கோவ : பயப்படாதே கண்ணகி! நமக்கு நல்ல காலம் வருமென்று நீதானே எனக்குச் சொல்லிக் கொண்டே இருக்கிறாய்?

[தழுதழுத்த குரலில்]

கண் : கட்டாயம் நல்லகாலம் வருமத்தான்...வரும்!

கோவ : சரி, நேரமாகிறது!

[கண்ணகி ஒரு சிலம்பைக் கழற்றிவிட்டு, இன்னொன்றைக் கழற்றப் போகும்போது]

கோவ : கண்ணகி இரண்டையும் விற்க வேண்டாம்! ஒன்றை மாத்திரம் கொடு!

கண் : ஒன்று மட்டுமா?

கோவ : ஆமாம்; ஒரு சிலம்பு உன் காலிலேயே இருக்கட்டும்! அந்த ஒற்றைச் சிலம்பு ஒலி யெழுப்பும் போதெல்லாம்...உத்தமியாம் உனக்குக் கேடு நினைத்த இந்த உன்மத்தனின் உள்ளத்திலே ஆயிரமாயிரம் சம்மட்டியடிகள் விழுந்து கொண்டே இருக்கட்டும்!

அற்பனே! அறிவற்ற பதரே! ஆவிநிகர் மீனியாளே ஆளவிட்ட கரும்பாக்கி, அணு அணுவாய்ச் சித்திரவதை செய்திட்ட கொடும் பாவி! கொலைகாரா! என்றெல்லாம் அந்த ஒற்றைச் சிலம்பு என்னைக் கவி பாடட்டும்; அதைப் புவி கேட்கட்டும். இந்தப் புன்மதியாளனுக்கு அப்போதாவது புத்தி வரட்டும்; கண்ணகி, புத்தி வரட்டும்!

கண் : அத்தான்! உங்கள் நீல விழி சிந்துகின்ற நீர்த்துளியால் கோலமுகம் நனவதற்கோ பாவி நான் வழி சொன்னேன்? கவலைப் படாதீர்கள் அத்தான்! நம்பிக்கை நிறைந்த எதிர்காலம் நம்மை நோக்கி ஒளி விடுகிறது.

கோவ : நான் போய் வரவா கண்ணே!

கண் : [தன் கண்களையும் அவன் கண்களையும் துடைத்துவிட்டு] எங்கே! கவலைப்படாமல்,

மகிழ்ச்சியோடு, எங்கே! எங்கே! என்னை மயக்க வைக்கும் அந்த மந்தகாசப் புன்னகை! ஒரு முறை யத்தான்!

கோவ : [புன்முறுவலுடன்] கண்ணகி!

கண் : அத்தான்! சீக்கிரம் திரும்பி வாருங்கள்!

கோவ : மாதவி வீட்டுக்குப் போனது போல் வராமலே போய்விடுவேன் என்று பயப்படுகிறாயா?

கண் : அதுதான் திரும்பிவந்து விட்டார்களே...

கோவ : சரி கண்ணகி! நேரமாகிறது.

கண் : அத்தான் அதிகப் பழக்கமில்லாத ஊர். பத்திரமாகப் போய் வாருங்கள்!

கோவ : குழந்தைக்குச் சொல்வதுபோல் சொல்கிறாயே?

கண் : அதையும் சொல்லத்தானே போகிறேன்!

கோவ : குழந்தைக்கா! ஊம்; வரட்டுமா கண்ணகி!

[கேலியாக]

கண் : அத்தான்!

கோவ : கண்ணகி!

[குரவைக் கூத்து ஆரம்பமாகி விட்ட ஒலி கேட்கிறது]

கோவ : குரவைக் கூத்து ஆரம்பமாகிவிட்டது உனக்கு அழைப்பு வந்துவிடும். வருகிறேன்.

[கோவலன் நகர - மாதரி பூ, மாங்காய், பழம் உள்ள தட்டு ஒன்றைக் கண்ணகியிடம் தருகிறாள்.]

கண் : அத்தான்! இந்த மல்லிகைப் பூ வாடுவதற்குள் வந்து விடுங்கள்!

கோவ : அவ்வளவு சீக்கிரமா? இயலாது! இந்த மாங்காய் அழுகுவதற்குள் வந்து விடுகிறேன்!

கண் : அவ்வளவு நாட்கள் ஆகுமா?

கோவ : ம்...கண்ணகி! சிலம்பை விற்று வாணிபத்திற்கு ஏற்பாடு செய்து...எல்லா முயற்சிக்கும் கொஞ்ச நாட்கள் ஆகாதா?

[மாதரி வருகிறாள், அவளிடம்]

அம்மா! கண்ணகி உங்கள் அடைக்கலம்.

[கண்ணகியின் கரம் பிடித்து அவளிடம் கொடுத்தல்]

சுருக்கமாகச் சொன்னால் என் உயிர் உங்கள் வீட்டில் அடைக்கலம். வருகிறேன் கண்ணகி! வருகிறேனம்மா!

[ஐயை முதலியோர் கண்ணகியிடம் ஓடி வந்து, குரவைக் கூத்துக்கு அவளை இழுத்துச் செல்கிறார்கள்]