பொருளடக்கம்சிலப்பதிகாரம்

காட்சி 28 / 38

காட்சி-28

பொற்கொல்லர் முறையீடு

பாண்டியன் தனிமாடம்

மூல ஸ்கேன் 71

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[நெடுஞ்செழியனும் கோப்பெருந் தேவியும் இருக்கிறார்கள்....] கோப்பெருந்தேவி கேட்டுக்கொண்டே வருகிறாள்.]

கோப் : எங்கே இன்னும் சிலம்பு வரவில்லையா?....இன்னுமா பழுது பார்க்கிறர் பொற்கொல்லர்?

[நெடுஞ்செழியன் ஓலையில் எழுதிக்கொண்டிருக்கிறான்.]

கோப் : ஊகூம்...நான் கேட்டதற்குப் பதில் கூறாமல் அப்படி யென்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்களாம்?

[ஊடல்]

நெடுஞ் : கல்வியின் பெருமை பற்றிப் புறத்துறைப் பாடல் ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன்.

கோப் : ஆமாம்!....புறப்பாடல்...போர் முழக்கம்! இதைத் தவிர வேறு பேச்சேயில்லை! இது...பள்ளியறை. பள்ளிக்கூடமுமல்ல ...பாசறையுமல்ல...தெரியுமா?

நெடுஞ் : தமிழ்...ஒரு தென்றல்! அது எல்லா இடத்திலும் நுழையும். பாடலைக் கேள்...

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்”...

[அதற்குள் தோழி வந்து...]

தோழி: அரசே; அரண்மனைப் பொற்கொல்லர் தங்களை அவசரமாய்க் காணவேண்டுமாம்!

நெடுஞ் : வரச் சொல்!

[என்று வெளியே செல்லல்...வாயிற் படியில் நின்றவாறு....]

நெடுஞ் : என்ன?

தலைமைப் பொற் : வணக்கம்...மன்னவா!

[நடுங்குகிறார்]

நெடுஞ் : ஏன் நடுங்குகிறீர்? என்ன காரணம்?

தலைமைப் பொற் : மன்னிக்க வேண்டும்...அரசே;...மன்னிக்க வேண்டும்!

நெடுஞ் : செய்தியைச் சொல்லும்... பொற்கொல்லரே!

தலைமைப் பொற் : அரசியாரின் சிலம்பைப் பத்திரமாகத்தான்...பாதுகாப்பான இருப்புப் பெட்டியில் வைத்துப் பூட்டித், திறவுகோலையும் நானே வைத்திருந்தேன். இன்று காலை பெட்டியைத் திறந்தால், சிலம்பைக் காணவில்லை அரசே; காணவில்லை!

நெடுஞ் : காணவில்லையா? ம்...காணவில்லை என்ற செய்தியைச் சொல்லவா இங்கு வந்தீர்? பெட்டியில் பூட்டிய சிலம்பு எங்கே போகும்? பொற்கொல்லரே! உமக்கு யார் மீது ஐயப்பாடு?

தலைமைப் பொற் : நான் யாரைச் சொல்லுவேன்? என்னிடம் வேலை பார்க்கும் நூறு கொல்லர்களில் நான் யாரைக் குறிப்பிட்டுச் சொல்வது மன்னவா!

நெடுஞ் : சரி, நூறு கொல்லர்களையும் நாளை நமது நீதி மன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தும்! நானே விசாரணை செய்து கள்வனைக் கண்டு பிடிக்கிறேன்.

தலைமைப் பொற் : உத்தரவு, மன்னவா! என்னை மன்னிக்கவும்; வருகிறேன்.

நெடுஞ் : ம்!

[பொற்கொல்லர் போகிறார்]