பொருளடக்கம்சிலப்பதிகாரம்

காட்சி 27 / 38

காட்சி-27

ஆய்ச்சியர் அறிமுகம்

மதுரை எல்லை

மூல ஸ்கேன் 70

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[கவுந்தியடிகள், கண்ணகி, கோவலன் வருதல்...மாடு ஆடுகள் ஓட்டி வரும் சிறுவர் சிறுமியரின் பாட்டொலி கேட்கிறது .... அந்த இளங் கூட்டத்திற்குள் ஐயை என்னும் அழகிய பெண் தலைமை வகித்து வருகிறாள். அவள் கவுந்தியடிகளைப் பார்த்து...]

ஐயை : அடிகளே...வணக்கம்! வணக்கம்!

கவுந்தி : வாழ்க ... வாழ்க ... ஐயை! உன் தாயார் மாதரி எங்கே யம்மா?

ஐயை : அம்மா ... சமணத் துறவிகளுக்குப் பாற்சோறு படைத்துவரப் போயிருக்கிறாள்...வாருங்கள் வீட்டுக்குப் போகலாம்!

கவுந்தி : கோவல!...வாருங்கள். மாதரி என்னும் ஆயர்குல மங்கை மிகவும் நல்லவள்...அவளை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.

[அனைவரும் பசக் கூட்டத்தோடு அதை விட்டு நகர்தல்]

[கவுந்தி,கண்ணகி,கோவலன்,ஐயை,...]

ஐயை : அதோ அம்மாவும் வந்து விட்டார்கள்.

...அம்மா...அம்மா...

மாதரி : ஆ! கவுந்தியடிகளா!...வரவேண்டும் ...வரவேண்டும்...

கவுந்தி : மாதரி! இவர்கள் ... கோவலன், கண்ணகி...இவர்களுடைய பெற்றோரின் பெயரைக் கேட்டாலே மதுரையிலுள்ளோர் ஓடி வந்து தங்கள் தங்கள் வீட்டுக்கு விருந்தினராக அழைப்பார்கள்....அவ்வளவு சிறப்பு மிக்க குடும்பத்தினர்! மதுரையில் இவர்களது வேலை முடியும் வரை உன் வீட்டிலேயே தங்க வைத்து...

மாதரி : தடையா சொல்லப் போகிறேன்? தாயே...தாராளமாக இருக்கட்டும். அம்மா...கண்ணகி! இதோ என் மகள் ஐயை உன்னை விட்டு நீங்காத துணையாக இருப்பாள்!

கவுந்தி : என் கடமை முடிந்து விட்டது. கோவல!...கண்ணகி...என் கண்ணே! போய் வருகிறேன் நான்...

கண் : தாயே...நீங்கள் எங்கள் கூட இருந்து எவ்வளவோ ஆறுதலாக இருந்தது!

கவுந்தி : எனக்குப் பதில்தான் மாதரி இருக்கிறாளே...மாதரி! கண்ணகியை உன்னிடம் ஒப்படைத்திருக்கிறேன். அவள் உன் அடைக்கலம்! அவ்வளவுதான் சொல்லுவேன்...