காட்சி 25 / 38
காட்சி-25
நீதி வழுவா நெடுஞ்செழியன்
பாண்டியன் அவை
மூல ஸ்கேன் 67, 68
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[பாண்டிய நாட்டு மீனக் கொடி பறக்கும் கோட்டை ... அதைத் தொடர்ந்து கொலு மண்டபத்திலேயுள்ள மீன் சின்னம் ... நெடுஞ்செழியப் பாண்டியனின் குரல்!....]
குரல் : பாண்டியன் நெடுஞ்செழியனின் கொலு மண்டபத்தில் அநீதிக்கு இடமில்லை! வழக்குரைக்க வந்திருக்கும் நீங்கள் இருவருமே தமிழில் புலமை மிக்கவர்கள். உங்கள் வழக்கின் போக்குக் கண்டு நான் மிகக் குழப்பமடைகிறேன்.
[தொடர்ந்து ... நெடுஞ்செழியனும் கோப்பெருந்தேவியும் காட்சியாதல்]
[சுவடியைக் கையில் பிடித்தவாறு]
புலவர் அருளாளரே! இந்தக் காவியம் உம்முடையதுதான் என்பதற்கு உமது கையெழுத்தை ஆதாரமாகக் காட்டுகிறீர்! அதை ஒத்துக்கொள்ள வேண்டியதுதான்! இதற்குப் புலவர் மல்லவாணரின் மறுப்பு ஏதோ?...
மல்லவாணர் : கையெழுத்து அருளாளருடையது என்பதற்காகக் காவியம் அவருடையதாகி விடுமோ?...அரசே! நான் சொல்லி என் மாணவரான அருளாளர் எழுதினர் என்பதே உண்மை!... ஆகவே காவியம் என்னுடையதே!
பாண்டியன் : அருளாளரே?
அருளாளர் : தமிழ்ச் சங்கம் வளர்க்கின்ற பாண்டிய மன்ன!...தமிழின் மீதாணையிட்டுக் கூறுகிறேன். என் சிந்தனையின் விளைவே இச் சிறு காவியம்! நான் என்றைக்கும் மல்லவாணருக்கு மாணவனாயிருந்ததே யில்லை!
[யோசித்து]
பாண்டி : ம்!...சிக்கலான வழக்கு! சரி நான் ஒன்று முடிவாகக் கூறுகிறேன் ... காவியம் உங்களில் யாருக்குமே சொந்தமில்லை. உங்கள் கண் எதிரே இதை நெருப்பிலே போட்டுக் கொளுத்தி விடுகிறேன்...சரிதானே?
அருளா : வேண்டாம்; வேண்டவே வேண்டாம்! தமிழைக் கொளுத்தும் தகாத செயல் தமிழ் காக்கும் பாண்டியன் அவையில் நடைபெற வேண்டாம்! நாட்டுக்காகவே நான் காவியம் எழுதினேன். எனக்காக அல்ல; அது யார் பெயரால் வந்தாலும் வரட்டும்! மல்லவாணர் பெயராலேயே காவியம் இருக்கட்டும்...அதை அழித்து விடாதீர்கள்!
பாண்டி : பெற்றவருக் கல்லவா பிள்ளையின் அருமை தெரியும் — அதைப்போல்தானே! இதிலிருந்தே காவியத்தின் தாய் அருளாளர் என்பது தெளிவாகி விட்டது. மல்லவாணர் உழைக்காமல் ஊரார் பொருளைத் திருடிப் புகழ் வாங்க ஆசைப்படும் ஒரு போலிப் புலவர் என்பது விளங்கிவிட்டது! அதனால் தான் காவியம் அழிவதைப்பற்றிக் கவலைப்படவில்லை அவர்!... அருளாளரே! நீரே வென்றீர்! இது உமது காவியமேதான்!.... இதோ!....
[அருளாளர் வாங்குதல்]
அமைச்சரே! இவருக்குப் பரிசாக ஐயாயிரம் கழஞ்சு பொன் தருவீராக!
அருளா : வாழ்க தமிழ்! வாழ்க பாண்டியன் நெடுஞ்செழியன்!
[மன்னரும், அரசியும் அவையை வணங்கி விட்டு எழுந்து செல்லல்...கொலு மண்டபத்தையடுத்த தாழ்வாரத்தில் நடந்து செல்லும்போது, அரசியின் காற்சிலம்பு ஒன்று கழன்று விழுகிறது... அரசி, நின்று குனிகிறாள்]
பாண்டி : என்ன?...
அரசி : சிலம்பு பழுதாகி விட்டது!
பாண்டி : [சிலம்பை எடுத்து] யாரங்கே!...
[தோழியும், ஒரு அதிகாரியும் வணங்குதல்]
பாண்டி : இந்தச் சிலம்பை அரண்மனைப் பொற்கொல்லரிடம் கொடுத்துப்பழுது பார்த்துக் கொண்டு வரச்சொல்!
இன்னொரு சிலம்பையும் கொடேன்!
அரசி : காலிலே சிலம்பில்லாமல் இருப்பதா...வேண்டாம்; இதை மாத்திரம் சீர்செய்தால் போதும்!
[இருவரும் போய்விடுதல்]
[அதிகாரி, கையில் சிலம்புடன் நிற்க...]
தோழி : என்ன சிலம்பையே விழுங்கிவிடுவது போல் பார்க்கிறீர்கள்?
அதிகாரி : விழுங்கி விடலாமா என்றுதான் பார்க்கிறேன்! பைத்தியம்!...இது அரசாங்கச் சிலம்பு-தொட்டால் தொங்கிவிடும் தல!
[என்றபடி அவனைப் பிரிந்து நடக்கிறான். நடக்கும்போதே சிலம்பைப் பார்த்தவாறு தனக்குள்]
அதிகாரி : எத்தனை ஆயிரம் பொன் பெறுமோ இந்தச் சிலம்பு!
[பெருமூச்சுடன்]
ச்சா...ச்சா...ச்சா......இதுமாத்திரம், எனக்குச் சொந்தமாயிருந்தால் ...... ம் ...என் வீண் கனவு?....
[தானே சமாதானப் படுத்திக்கொண்டு நடக்கிறான்]