காட்சி 23 / 38
காட்சி-23
மாதவி துறவு
மாசாத்துவான் வீடு
மூல ஸ்கேன் 65
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
ஓலை மாசாத்துவான் கையிலிருக்கிறது... (கோவலன் குரல்)
“பேரன்புடையவரே! தங்கள் அடி தொழுது வணங்குகின்றேன். பெற்றோர்க்குப் பணி புரியாமல், உற்ற மனைவிக்கும் தீங்கு செய்து, பிழைப்பு நடத்த வெளியூர் செல்வதற்கும் நானே காரணமானேன். என் தவற்றுள் வருந்தும் உங்கள் நெஞ்சத்தை ஆற்றிக் கொள்ள வேண்டுகிறேன்.
இங்ஙனம் உங்கள் அன்பு,
[மாசாத்துவான் பெருமூச்சு... அப்போது மாதவி ... மணிமேகலையுடன் வருகிறாள். நாலைந்து பெண்கள் தட்டுகளில் பொற்காசுகளை நிரப்பிக்கொண்டு வருகிறார்கள்.]
மாசாத்துவான் : யார்?
மாதவி : மன்னிக்கவும்...தங்கள் பெருமை வாய்ந்த குடும்பத்தின் சீரழிவுக்குக் காரணமான பாவி...மாதவி நானேதான்! இதோ! எனக்கும் தெரியாமல் எங்கள் வீட்டில் குவிக்கப்பட்டிருந்த தங்கள் வீட்டுச் செல்வம். ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மாசாத் : என்ன மாதவி...நீ மாற்றுக் குறையாத பசும் பொன் என்று இப்போதே உணர்ந்தேன்!
மாதவி : இனி யார் உணர்ந்தென்ன உணராவிட்டால் என்ன? நான் உதிர்ந்த மலராகி விட்டேன்!
மாசாத் : மாதவி! இந்தப் பொற்குவியல் என் மகன் உனக்காக அளித்தது. இதை நான் தீண்ட மாட்டேன்...திரும்பப் பெறுவது தீங்கானது.
மாதவி : எனக்கு ஏன் பொருள்? என் அன்புச் செல்வமே பறிபோய் விட்ட பிறகு...அழிகின்ற இந்தச் செல்வம் எதற்காக? எங்கே...என்னை மன்னித்தேன் என்று ஒரு முறை சொல்லுங்கள்!
மாசாத் : மாதவி...நீ என் அன்பு மருமகள்!
மாதவி : அய்யோ...மணிமேகலை! எவ்வளவு நல்ல குடும்பத்தை உன் தாய் நாசமாக்கி விட்டாள் பாரம்மா! பாரம்மா!!
[அழுகிறாள்]
மாசாத் : அழாதேயம்மா...எங்கே, குழந்தையைக் கொடு!
[குழந்தையை வாங்குகிறார். குழந்தை சிரிக்கிறது...அவர் கண்களிலும் கண்ணீர் தேங்குகிறது.]