காட்சி 22 / 38
காட்சி-22
மதுரைப் பயணம்
மதுரை செல்லும் வழி
மூல ஸ்கேன் 63, 64
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[கவுந்தியடிகளின் பாடல் ஒலி கேட்கிறது. அந்த ஒலியினூடே....கண்ணகியும் கோவலனும் நடந்து கொண்டிருக்கிறார்கள். எதிரே கவுந்தியடிகள் வருவதைக் கண்டு கோவலன் அடிகளின் கரங்கூப்பி வணங்குகிறான்.]
கோவ : வணக்கம். தாயே!
[கண்ணகியிடம்]
கண்ணகி! இவர்கள்தான் கவுந்தியடிகள். சமண மதத் துறவி!
கண் : வணக்கம்....
கவுந்தி : வாழ்க! வாழ்க! குழந்தைகள் நீங்கள்....?
கோவ : வெளி நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் உயர்ந்த குதிரைகளும்...ஏற்றுமதிக்கெனக் குவியும் மிளகு மூட்டைகளும்...வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்...குடமலையிற் பிறந்த ஆரமும் அகிலும்...தென்கடல் முத்தும், குணகடல் பவளமும்...கங்கையின் பொருளும்...காவிரியின் பயனும் நிறைந்து தோற்ற மளிக்கும் சோழனின் கடற்கரைப் பட்டினமாம் பூம்புகார்த் தில நகரே எமது ஊர். என் பெயர் கோவலன். இவள் என் வாழ்க்கைத் துணைநலம்...கண்ணகி!
கவுந்தி : கோவலன்...? பெருவணிகர் மாசாத்துவனின் மகன்?...குழந்தாய் உனக்கு வந்த இடர் யாது?
கோவ : சுடர் விளக்கம் கண்ணகிக்குத் துரோகம் செய்தேன்!...அது போதாதென்று படர்கின்ற முட்புதரில் என் பத்தினியின்
பாதம் பட்டுப்...பாகற்பழம் போலச் சிவக்கின்ற பாதகத்தைச் செய்கிறேனே.
கவுந்தி : வருந்தாதே!....தவறு செய்தவர்கள் தங்கள் தவற்றை உணரும்போது, அதுவே பெருந் தண்டனையாகிறது!....பரவாயில்லை...மதுரைக்குத்தானே போகிறீர்கள்! நானும் வழித் துணையாக வருகிறேன்—பேசிக் கொண்டே போகலாம்.
கண் : அத்தான்....இன்னும் மதுரை எவ்வளவு தூரம்?
கோவ : ஆறு ஐந்து காதம் இருக்கும்...அவ்வளவுதான்.
கவுந்தி : கண்ணே! உன் கணவர் ஏமாற்றுகிறார்...ஆறு ஐந்து காதம் என்றால்...ஆறைந்து முப்பது காதம்...என்னம்மா?....நடக்க முடியவில்லையா?
[கோவலனிடம்]
கோவலா!
நான் வேண்டுமானால் போய்விடுகிறேன். நீ...கண்ணகியைத் தூக்கிக் கொண்டு
கோவ : என்ன?
கவுந்தி : நீ அவளுக்குச் செய்த குற்றத்திற்குத் தண்டனை வேண்டாமா? அதற்காகச் சொன்னேன்...அதுமட்டுமல்ல;
[நடந்தவாறு]
கண்ணகிக்கு இவ் வழியெல்லாம் நடந்து பழக்கமிருக்காது! வழியில் வளர்கின்ற தோண்டிய குழிகளில், வாடிய சண்பக மலர்கள் குவிந்து மூடியிருக்கும்...கவனமாகச் செல்லாவிட்டால்...அந்தப் பொய்க் குழிகளில் விழுந்துவிட நேரும்...
வாழ்க்கைப் பாதையுங்கூட அப்படித்தானே?
கோவ : நிச்சயமாக! ஏன் அனுபவ உண்மை.
கவுந்தி : வயல் வெளிகளில் செல்வோமானால் நீர் நாயினுல் கொலப்பட்ட வாளை மீன்கள் உயிர் தப்பத் துள்ளி, மேலே விழும். அதைக் கண்டு, கண்ணகி பயப்படுவாள்.
கரும்புத் தோட்டங்களில் நடக்கும்போது.. கரும்பின் மீது தவறி உராய்ந்துவிட்டால் அங்குள்ள பெரிய தேன்கூடுகள் உடைந்து அருவி நீரோடு கலந்து போகும்
கோவ : என் பொருளெல்லாம் அப்படித்தான் பாழாயிற்று!....
கவுந்தி : சோலைவழிச் சென்றால்...கிளைகளில் தாழ்ந்து தொங்கும் பலாப் பழங்கள் எதிரிகள் போல் தலையில் முட்டும்.
கோவ : அய்யோ....நான் சென்ற தவறுன வழியில் யாரும்...என் மனச்சாட்சி கூட....அதுபோல என்னைத் தடுக்க வில்லையே!
கவுந்தி : கோவலா! மனச்சாட்சி உறங்கும் போதுதானே மனக் குரங்கு ஊர்சுற்றக் கிளம்புகிறது! நடந்தவைகளை மறந்துவிடு!...இனி நடப்பவை நல்லவைகளா யிருக்கட்டும்!
[பயணம் நடத்துகிறார்கள்]
[காட்டினிடையே கோவலனிடம், மாதவி தீட்டிய ஓலையைக் கோசிகமணி தருகிறான்]
[மாதவி குரல்]
பேரன்புடையவரே!... தங்கள் அடி தொழுது வணங்குகின்றேன். பெற்றோர்க்குப் பணி புரியாமல் உற்ற மனைவிக்கும் தீங்கு செய்து பிழைப்பு நடத்த வெளியூர் செல்வதற்கும் நானே காரணமானேன்—என் தவற்றுள் வருந்தும் உங்கள் நெஞ்சை ஆற்றிக்கொள்ள வேண்டுகிறேன்.
இங்ஙனம், உங்கள் அன்பு.
[கோவலன் படிக்கிறான்...திரும்ப ஓலையையே பார்த்துக்கொண்டிருக்கிறான். கண்களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் சிந்தி ஓலையில் விழுகின்றன.]
கோவ : மாதவியிடம் சொல்லுங்கள்...கோவலன் பிழைக்காக வருந்துகிறான் என்று! அவள் எனக்கு எழுதிய இந்த ஓலை என் தாய் தந்தையார்க்கும் பொருந்தும்...அதனால் இதை நான் கொடுத்ததாக என் தந்தையிடம் கொடுத்து விடுங்கள்...
[மீண்டும் ஓலையைப் படிக்கிறான்]