காட்சி 21 / 38
காட்சி-21
கலைமகள்
மாதவி வீடு
மூல ஸ்கேன் 61, 62
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[மாதவி, தன் அறையில் குழந்தை மணிமேகலையுடன், சோர்ந்து போய் உட்கார்ந்திருக்கிறாள்...வசந்தமாலை வருகிறாள்]
மாதவி : வசந்தமாலே! என்ன ஆயிற்று? பார்த்தாயா அவரை?
வசந்தமாலை : அப்போதே சொன்னேனே விளையாட்டு வினையாகுமென்று; கேட்டாயா? கோவலனும் கண்ணகியும் மதுரைப் பக்கம் போய்விட்டார்களாம்...தேவந்தி சொன்னாள்!
மாதவி : ஆ!....போய் விட்டாரா? மணிமேகலை...உன்னையும் என்னையும் பிரிந்து உன் அன்புத் தந்தை, ஊரை விட்டே போய் விட்டார்; என் செல்வமே! வாரி அணைத்து...“வெண்ணைப் புது நிலவே...என்னைச் சொல் உதிர்க்கின்ற தமிழ்க் கனியே” என்றெல்லாம் முத்தமாரிப் பொழிவாரே! அவர் உன்னையும் என்னையும் வெறுத்து...இந்தப் பாவியிருக்கும் பூம்புகாரிலேயே இருக்கக் கூடாதென்று போய்விட்டாராம்... “அப்பா!” என்று எப்போது அழைப்பாய்...“அம்மா” என்று என்னைக்கு வாய் திறப்பாய் என்று ஆவலோடு கேட்டுக் கேட்டுத் துடித்த உன் தந்தை, உன் செந்தமிழ்மழலையைச் சுவைக்க விருப்பமில்லையென்று உன் தாயைச் சுடுநெருப்பில் எரிந்து விட்டுப் போய் விட்டாரம்மா...போய்விட்டார்!
சித்ராபதி : மாதவி, என்ன இது? என்னமோ கட்டிய கணவன் கைவிட்டுப் போனது மாதிரிக் கதறுகிறாய், அழுகிறாய்?....
மாதவி : போதும் தாயே...போதும்!....உங்கள் வயிற்றிலே வந்து பிறந்ததற்கு நான் அனுபவிக்கும் கொடுமை போதும்...இனியும் என்னைக் கொடுமைப்படுத்த வேண்டாம்...
கூனி : சித்ராபதி...சித்ராபதி...என்ன இது?
மாதவி : நீயும் வந்து விட்டாயா; குடிகெடுக்கும் கூனிக் கிழவி!...இராமாயணத்திலே ஒரு கூனிக் கிழவி...நாட்டையே கெடுத்தாளாம்; நீ...இந்த வீட்டையே கெடுக்க வந்து சேர்ந்தாய்.
கூனி : மாதவி...அடக்கிப் பேசு!...
மாதவி : ஏன்?...எதற்காக?...பாவிகளே! நீங்கள் எல்லாம் சேர்ந்து கொண்டுதானே எனக்கும் தெரியாமல் அவருக்கும் தெரியாமல் அவர் வீட்டுப் பொருளையெல்லாம் கொள்ளையடித்திருக்கிறீர்கள்? பொருளுக்காகவா நான் அவரைக் காதலித்தேன்?
சித் : நீ காதலிக்கவில்லை...ஆனால் நாங்கள் பொருளுக்காகத்தான் உன்னைக் காதலிக்க விட்டோம்.
மாதவி : போதும் போதும்; என்னை உயிரோடு விழுங்க, தாய் உருவில் வந்த பேய்; அதற்கு முன்பே புகார் நகரத்தைக் கெடுக்கப் புறப்பட்ட கூனிப் பூதம்! உங்கள் முகத்திலேயே விழிக்கக் கூடாது; போய் விடுங்கள்...இதை விட்டுப் போய் விடுங்கள்!
[குழந்தையிடம்]
அம்மா மணிமேகலை நம் கதியைப் பார்த்தாயா? நமக்கு யாருமே ஆதரவில்ல யம்மா...ஆதரவில்ல!
[என விம்மி அழுகிறாள்]