பொருளடக்கம்சிலப்பதிகாரம்

காட்சி 20 / 38

காட்சி-20

திருந்திய கோவலன் / திரும்பி வருதல்

கண்ணகி வீடு

மூல ஸ்கேன் 59, 60

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[கண்ணகி, கோவலன் படத்தின் முன்னே நின்று— பலகணி வழியிலும் பல திசைகளிலும் பார்வையைச் செலுத்தி......இறுதியில் கதவண்டை வந்து நின்று...கதவைத் திறக்கிறாள். கதவு திறந்ததும் சேவல் ஒன்று உள்ளே வருகிறது. கண்ணகி சேவலைப் பார்த்தவாறு நிற்கிறாள்....அதனைத் தொடர்ந்து கோவலனும்...எதிர் வந்து நிற்கிறான்... கோவலனைக் கண்ட கண்ணகி அப்படியே அசைவற்று நின்று விடுகிறாள். கோவலனும் மெய்ம்மறந்து தலை குனிந்து நிற்கிறான். மரம் போல் நின்றுவிட்ட கண்ணகி...மண்டியிட்டு...கோவலன் காலில் தலை கவிழ்கிறாள். கண்ணீர்த் துளிகள் அவன் காலைக் குளிப்பாட்டுகின்றன. கோவலன் அவளைத் தூக்கி நிறுத்தி...]

கோவலன் : கண்ணகி...என்னை மன்னித்து விடு!....

கண்ணகி : அத்தான்!....

[பொல பொலவென்று கண்ணீர் உதிர்கிறது]

கோவ : கற்பின் திருவுருவாம் உனவிடத்துக் கணிகையின் மடியிலே சுகங் கண்ட...இந்தக் கல் நெஞ்சக் கயவன்; கற்றறிந்த மூர்க்கனே...

கண் : ...திட்டாதீர்கள்!...என் கணவரை...என் கணவரோகூடத் திட்டக் கூடாது!....

[அவன் வாயைப் பொத்தி]

கோவ : மாதர்குல மாணிக்கமே! ... தமிழ் மறை காத்து...மீனோக்கும் இன்பப் பெருமாட்டி நீ யிருக்க...மாதவியாம் விலை மாதின் வசப்பட்டேன்...அவள் வாச மலர்க் கூந்த வீச வையகமே அடிமையென எண்ணி விட்டேன்...அந்த மோசம் நிறை மூதேவி...என் குடும்பப் பாசம் அறுத்தாள். தேசமெல்லாம்...தெருவெல்லாம் இழிந்துரைக்க...தேகமிருந்தும் உயிரில்லாப் பாண்டமாக...என்னே ஆக்கிவிட்டாள்!

கண் : அத்தான்! என் தங்கை அவள்! அவள் ஒன்றும் சொல்லாதீர்கள், அத்தான்! குழந்தை மணிமேகலை சுகந்தானே?.... அத்தான்!....

கோவ : குழந்தை மணிமேகலை... குவிந்திருந்த பொன்மணிகள்; தங்கக் குன்று நீ...அணிந்திருந்த நகைகள் எல்லாம்...கொட்டிக் கொட்டி...நான்பெற்ற இன்பத்தில் விளைந்ததன்றே அந்தக் குழந்தை!...பாவச்சின்னம்!...

விலைகொடுத்துச் சுவை பார்த்த காதல் விருந்தின் அடையாளம்! கணிகை வீட்டில் உன் கணவனுக்கு ஏற்பட்ட களங்கந்தான் கண்ணகி; அந்தக் குழந்தை!

கண் : அய்யோ....அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்....மணிமேகலை மாதவிக்குப் பிறந்தாலும்....என் குழந்தை!...என் குழந்தையத்தான் மணிமேகலை!

கோவ : என் தெய்வமே! நீ என் மதிப்புக்குரியவள்! மரியாதைக் குரியவள்! என்னை மன்னித்துவிடு...உன் இதயத்தை உணர முடியாத இந்த இழிமகனை மன்னித்துவிடு கண்ணகி...

கண் : அத்தான்!....

கோவ : கடல் வாணிபத்தில் தமிழருக்கு ஈடில்ல என்ற புகழ் என்னுலே பெருகிறது...இன்றே...உடல் வாணிபத்தில் ஈடுபட்ட ஒருத்தியிடம்...அறிவிழந்தேன்; அளவிட முடியாத பொருளிழந்தேன்; புலம்புகிறேன்...ஏழையாக!...

[கண்ணகியிடம்]

என் செல்வமே!....பூம்புகார்ப் பெருவணிகன் என்ற பெயர் போயிற்று...புயல்தனிலே படகாடும்...கரைபேற வழியில்லை...அலை மோதும் கடல் மாதா வயிற்றுக்குள் போய் விடுவோம். வா...வா...

கண் : என் கண்ணு அந்த முடிவு? ஆனை உயரம் அடுக்கி வைத்த தங்கம் உண்டு என் தாய் வீட்டில்...நாம் எடுத்துக் கொண்டால் தடை சொல்ல யாருண்டு?....

கோவ : ஆருயிரே!.... மாமன் கை பார்த்துப் பிழைக்கின்றவன் என ஊர் பேசும்; மானம் போகும்!....வேண்டாம், வேண்டாம்!

கண் : நெல் மணியை அளப்பது போன்று அளக்கின்றார் முத்துக்களே தங்கள் தந்தை, அவர்கூட ஆதரவு காட்டுவதற்கு மறுப்பாரோ அத்தான்?...

கோவ : தனியாக வாழ்வதற்குத் தகுதியுண்டு என எண்ணிப் பொருள் கொடுத்தார் தந்தை! அதைத் தொலைத்துப் புதுத் தொல்லை கொடுப்பதற்கு மனமே இல்லை! மானம் வேறு இருந்தால் சொல்! இல்லையேல் மரணந்தான் மேல்!

கண் : நானிருக்கும் வரையினிலே சோகத்தால் வாடாதீர்!....என் காற் சிலம்பு இரண்டு உண்டு; கழற்றித் தருகிறேன். விற்றுவிட்டால், புதிதாக வாணிபத்தைத் தொடங்கலாம் அத்தான்!

கோவ : சிலம்பு! சிலம்பை விற்பதா? அய்யோ...கண்ணகி...இந்த வார்த்தையை என் காதுகள் கேட்கும் காலமும் வந்ததே...உன் கால் அழகு செய்யும் அந்தச் சிலம்புகள்...இந்தக் காமுகன் இதுவரை கழற்றுமல்...கடைசியாக விட்டு வைத்திருக்கும் அந்த ஆபரணத்தை...விற்றுவரச் சொல்லுகிறாயா? கண்ணகி!

கண் : கவலைப்படாதீர்கள்....நான் சொல்வதைக் கேளுங்கள்....தங்களுக்குப் பயனில்லாமல்...அழகுக்காக எனக்கு ஆபரணமா? விற்று வாருங்கள்! மீண்டும் நமக்கு நல்ல காலம் கட்டாயம் வரும்...சொல்வதைக் கேளுங்கள்....அத்தான்!

கோவ : கேட்கிறேன்!....ஆனால் பூம்புகார்லேயே சிலம்பை விற்பது அவமானமல்லவா?

கண் : பிறகு?...

கோவ : நம்மை யாரும் அடையாளம் காண முடியாத பாண்டிய நாட்டுக்குச் செல்லலாம். அங்கே மதுரைத் தல நகரில் சிலம்பு நல்ல விலைக்குப் போகும்!

கண் : தங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்...மதுரைக்கு நானும் தங்களோடு வருகிறேன்.

கோவ : வா, இனிச் சாகும் வரையில் அணுப்பொழுதும் உனைப் பிரிய மாட்டேன் கண்ணகி!

கண் : அத்தான்!

கோவ : இன்றைக்கே யாருக்கும் தெரியாமல் புறப்பட வேண்டும்....பயணம் தயார் செய்வோம்!