பொருளடக்கம்சிலப்பதிகாரம்

காட்சி 18 / 38

காட்சி-18

இந்திர விழா-இருமனைகளில்

மூல ஸ்கேன் 53, 54

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[பல உட்காட்சிகள் அடங்கியது]

(புகார் நகரில் இந்திரவிழா ஆரம்பமாகிறது. புலிக்கொடி வான்நோக்கி ஏற்றப்படுகிறது. யானை மீது முரசம்... நகரெங்கும் விழா எடுக்கின்றனர்... பழந்தமிழ் மன்னன் இந்திரனின் பெரிய சிலையொன்று புலியின்மீது சவாரி செய்வது போல வானத் தொடும் அளவு கோபுரம்போல் உயர்ந்து நிற்கிறது.

இமயமலையின் உச்சியிலே கரிகாலன் நிற்பதுபோல ஒரு பெரிய சிலை வானளாவி நிற்கிறது.

பட்டி மண்டபம், முத்துப் பந்தர், தோரண வாயில் எங்கெங்கும் கொண்டாட்டம்.

கடற்கரையில் கப்பல்களின் அணிவகுப்புக் காட்சி....

மகளிர், ஆடவர், ஆட்டபாட்டம். பல இடங்களில், பல வகைகளில், கொண்டாட்டங்கள்!)

மாதவிக்குக் கோவலன் அலங்கரித்து விடுகிறான்... ஆங்குள்ள அணிகளில் எது சிறந்தது எனத் தேர்ந்தெடுத்து அவளுக்கு அணிவிப்பதே பெரிய வேலையாகிவிடுகிறது அவனுக்கு!

கோவலனுக்கும் மாதவி அலங்கரித்து விடுகிறாள்... இருவரும் அழகே உருவினராய்ப் புறப்பட்டு.....

கூடத்தில் தொட்டிலில் கிடக்கும் மணிமேகலையைத் தூக்கி முத்தமிடுகிறார்கள்...

மணிமேகலை சிரித்து வளர்ந்திருக்கிறாள்...

சிரிக்கிறாள் பொக்கைவாய்த் திறந்து!]

கோவ : சிரிப்பைப்பார்—சிரிப்பை! மாதவி! மணிமேகலை, உன்னைப் பார்த்து எழுதிய சித்திரம் போலவே இல்ல...?

மாத : இல்லை!... எல்லோரும் சொல்லுகிறர்கள்; மணிமேகலை, கண்ணகி யக்காளை உரித்து வைத்ததுபோல் இருக்கிறாளென்று...

கோவ : [கேலியாக] ஊம்.......

மாத : ஆமாம்!... நான்கூட இவள் அக்காளின் குழந்தையாகவே கருதுகிறேன்.

கோவ : சரி ... நேரமாகிறது ... வா... போகலாம்.

[குழந்தையை முத்தமிட்டு ... தொட்டிலில் கிடத்திவிட்டு... ஆங்குள்ள தோழிகளை அருகே விட்டுப் புறப்படுகிறாள்.]

[பல பகுதிகளில் விழாக் காட்சிகள்— கூத்து...உற்சாகம்!... மாதவியும் கோவலனும் கலந்துகொள்கிறார்கள்.]

விழா நடக்கும் ஒலி, கண்ணகியின் காதைப் பிளக்கிறது!

ஆகாயத்தில் கிளம்பும் வாண வேடிக்கை மின்னல்போல் அவள் கண்ணைப் பறிக்கிறது!...

மகளிர் ஆட்டபாட்டங்கள் ... பேய்க்கூத்து போல் தோன்றுகின்றன. இசைவாணர் இசைவாணிகளின் பாட்டுக்கள்....ஆந்தை, கோட்டான் அலறுவதுபோலத் தெரிகின்றன...

கண்ணகி கண்ணையும், காதையும் பொத்திக்கொண்டு அலறி விழுகிறாள்.

அவள் நினைவில் ... இந்திர விழாவன்று தானும் தன் கணவன் கோவலனும் ஆடிப்பாடி மகிழ்ந்தது—நினைவுக்கு வருகிறது.

இந்திர விழா நிகழ்ச்சிகள் அவள் மேலும் துயரக் கடலில் ஆழ்த்துகின்றன: துடிக்கிறாள்,

...துவளுகிறாள்...கோவலன் படத்தருகே ஓடுகிறாள்....]

கண் : அத்தான்!... இன்று எப்படியும் விழாவுக்கு வந்திருப்பீர்கள். ஒரு முறையாவது உங்கள் திருமுகத்தைப் பார்த்தால்தான் இனி இந்த உயிர் தங்கும்!... இதோ வருகிறேன்...நீங்கள் எங்கிருந்தாலும்...தொலவில் நின்றாவது பார்த்துவிட்டு வருகிறேன்...

அத்தான்!.... அத்தான்!!... அத்தான்!!!...

[வீட்டுக்கு வெளியே ஓடுகிறாள்—தேவந்தி பார்த்துவிட்டுப் பின்னால் ஓடுகிறாள் “கண்ணகி” ... “கண்ணகி” என்று அலறியபடியே!... கண்ணகி “அத்தான்”....“அத்தான்”.... என ஓடுகிறாள்.... தேவந்தியும் தொடர்கிறாள்.]

[மாதவியும் கோவலனும் உல்லாசமாக நடை போடுகிறார்கள்; அலைகள் கால்களால் உதைத்தவாறு]

[கண்ணகி ஓடிவருகிறாள். தேவந்தி தொடர்கிறாள்]

தேவ : கண்ணகி!... நில்!...

[என்று பெருங் கூச்சலிட்டவே, கண்ணகி அப்படியே திரும்பாமல் அசைவற்று நிற்கிறாள்]

தேவ : கண்ணகி!... உனக்கு எப்படி ஏற்பட்டது இவ்வளவு துணிவு? ஊரெல்லாம் இந்திரவிழா!...இப்போது நான் பார்த்தாய்; குடும்பத்துக்கு இழிவு தேட?

கண் : இழிவு... என் அத்தானை நான் பார்க்கப்போவது இழிவா?

தேவ : இந்தச் சமயத்தில்...இந்தக் கோலத்தில்...வாழ்ந்த குடும்பத்துப் பெண் போகலாமா? யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்? உன் கணவன் கோவலனே பார்த்து விட்டால் எவ்வளவு கோபம் அடைவார்?

வேதனையை வெளிக்காட்டாமல் நடந்து கொள்கிறாயே; தாய் தந்தையரிடம்...அவர்கள் பார்த்தால் உன்னை நினைத்து உருகிவிடமாட்டார்களா?...

பெரிய குடும்பத்திலே பிறந்து...பெரிய குடும்பபத்திலே புகுந்தவள் நீ; மானங் காக்கும் தமிழச்சி நீ மனம் தளரலாமா?

வா...கண்ணகி!...வீட்டுக்குத் திரும்பு!...

நேரில் பார்த்தால்தானு அத்தான்?... நெஞ்சிலே இல்லையா அவர்!......

[கண்ணகி பெருமூச்சும் கண்ணீரும்]

வா...கண்ணகி...

[கைப்பிடித்து அழைக்கிறாள் தேவந்தி... உயிரற்ற பொருள்போலக் கண்ணகி திரும்புகிறாள்...]

[விழா தொடர்ந்து நடைபெறுகிறது... இருபத்தெட்டு நாள் இந்திரவிழா நடந்து முடிவு பெறுகிறது....புலிக்கொடி இறக்கப்படுகிறது...]

[மாதவியும், கோவலனும் மஞ்சத்தில்... விளக்கு எரிகிறது. விடியவில்லே இன்னும், கோழி கூவுகிறது...காலச் சங்கு முழங்குகிறது...மாதவி விழித்தெழுகிறாள்...]

மாத : அத்தான்!...

[என்கிறாள்...கோவலன் எழவில்லை...]

(யாழை எடுத்து மீட்டுகிறாள்; கோவலன் எழுகிறான்...)

மாத : அத்தான் ... இன்றோடு இருபத்தெட்டு நாள்...இந்திர விழா முடிவுறுகிறது...வாருங்கள்...கடற்கரைக்குப் போய் அருணோதயக் காட்சியைச் சுவைக்கலாம்!

கோவ : வருகிறேன் ... அங்கு நீ கானல்வரி பாடி என்னை மகிழ்விக்க வேண்டும்...

மாத : நீங்களும் பாடவேண்டும்...

கோவ : உன்னைப்பற்றி பெண்ணுள்... நான் பாடுவேன்...கடற்கரையைப் பற்றிப் பாடும் கானல் வரி பாடுவதென்றுல்...

மாத : அப்படியானுல் ... நானும் பாடமாட்டேன்.....

கோவ : சரி ... சரி... வா! இருவரும் பாடுவோம்....

மாத : வசந்தமாலை!

(வருகிறாள்)

யாழ் தயாராகட்டும் ... நாங்கள் அருணோதயத்திற்குள் கடற்கரைக்குச் செல்ல வேண்டும்...அதற்குப் புரவி பூட்டிய தேரும் தயாராகட்டும்!... கடற்கரையில் ... நாங்கள் அமர்ந்து கானல்வரி பாடப் புன்னை மரத்து நிழலில் ... புதுமணற் பரப்பில் ... சித்திரத் திரைகட்டி விதானம் விரித்த வெண்காற் கட்டில் ஏற்பாடாகட்டும்!...

வசந்த : இதோ, ஒரு நொடியில்.......