பொருளடக்கம்சிலப்பதிகாரம்

காட்சி 16 / 38

காட்சி-16

மணிமேகலை பிறப்பு

மாதவி வீடு

மூல ஸ்கேன் 50

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[மாதவி வீட்டில் குழந்தைக்கு நன்னிராட்டு விழா...மிக்க குதூகலமாக நடைபெறுகிறது... குழந்தையைத் தொட்டிலில் இட்டு, மாதவியும் தோழியரும் பாடுதல். பாட்டினிடையே...கோவலன் வரவே... குழந்தையைத் தூக்கி, அவனிடம் தருகிறாள். அவன் குழந்தையை முத்தமிடுகிறான்.]

மாத : குழந்தைக்குப் பெயர் சூட்டுங்கள்!

கோவ : பெயரா?...

[குழந்தையைப் பார்த்து]

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்த நற்கூட்டே! பொதிகைமலை விட்டெழுந்து, சந்தனத்தின் பூந்தாது வாரி வருகின்ற இன்பத் தென்றலே! குழலியும் யாழையும் வெல்லுகின்ற குறளியும் வெல்லும் உன் குறுஞ்சிரிப்பு! கோவலன் குலக் கொடியே; மங்கையர் இனத்துக்கு நீயோர் மணி! உன் காலசைவு கையசைவு எல்லாமே கவி! எல்லாம் மேகலை!...மேகலை!...மேலானகலை!- அதனால் நீ மணிமேகலை!...வாழிய மணிமேகலை!!....

[மணிமேகலை என்ற பெயரை வைத்து அனைவரும் வாழ்த்துப் பாடுதல். கோவலன், மாதவி, வசந்தமாலை, எல்லோரும் தான தருமங்கள் உற்சாகமாகச் செய்தல்! ஒரே கொண்டாட்டம்! கூத்து! பாட்டு..]

[வீதியில் ஒரு மதங்கொண்ட யானை ஒரு மறையவனைப் பிடித்தல்... பலரும் ஓட்டம்! ஒரே அல்லோலல்! கோவலன் ஓடிவந்து மிக்க கஷ்டப்பட்டு யானையை அடக்கி வெற்றி பெறுகிறான். அனைவரும் கோவலனுக்கு மாலையிட்டுக் கொண்டாடிப் புகழ்கிறார்கள்..... மாதவி, ஓடிவந்து அணைத்துக்கொள்கிறாள்.]