பொருளடக்கம்சிலப்பதிகாரம்

காட்சி 14 / 38

காட்சி-14

மாதவியின் மாண்பு

காவிரி ஆற்றோரம்

மூல ஸ்கேன் 46, 47, 48

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[காவிரி யாற்றோரத்துக் கனி குலுங்கும் சோலை யொன்றில்... மாதவியும், கோவலனும் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடுதல். மாதவியின் எழில் நடனம்...]

[மாதவி திடீரெனச் சோர்ந்து உட்காருகிறாள்.]

கோவலன் : ஏன்? ஏன் மாதவி இவ்வளவு களைப்பு?...

[அருகே வந்து]

மாதவி : ஒன்றுமில்ல...முன்போல என்னால் இப்போதெல்லாம் நீண்ட நேரம் ஆட முடியதில்ல...

கோவ : இனிமேல் நான் உன்னை ஆடச் சொல்லவேயில்ல...போதுமா?

மாதவி : கோபத்தினாலா?...

கோவ : கோபமில்லே கோகிலமே!....நீ அதிகமாக ஆடக் கூடாதென்று எனக்குத் தெரியும்...

மாதவி : ஏன்?...எதற்காகவாம்?

கோவ : ஊகும்...நான் சொல்ல மாட்டேன்; உனக்கு வெட்கமாயிருக்கும்....

மாதவி : எனக்கென்ன வெட்கம்...நீங்கள் சொல்லத்தான் வேண்டும்.

கோவ : சொல்லட்டுமா?....

மாதவி : ம்!...

கோவ : சொல்லி விடுவேன்...

மாதவி : சொல்லுங்கள்....

கோவ : ஊகும் ...சொல்ல முடியாது....

மாதவி : முடியாதல்லவா...சரி; நான் போய் வருகிறேன்!....

[எழ முயல்கிறாள்]

கோவ : மாதவி...

மாதவி : ம்...விடுங்கள் என்னை!...

[எழுகிறாள்]

[கோவலன் தும்முகிறான்]

மாதவி : நூறாண்டு வாழ்க!

[என்று பக்கத்தில் போய், சிறிது தொலைவில் அமர்ந்து முகத்தை மூடி அழுகிறாள்]

கோவ : மாதவி...ஏன் அழுகிறாய்?

மாதவி : நீங்கள் தும்மினீர்கள்...

கோவ : ஆமாம்...தும்மினேன்...நீ வாழ்த்தியும்...பிறகேன் அதை அழித்து....அழுகிறாய்?....

மாதவி : யாரையோ நினைப்பதால் தானே தும்மினீர்கள்?...என்னை விட வேறு யாரை நினைக்கிறீர்கள்?

கோவ : அய்யோ...நான் யாரையும் நினைக்கவில்லை...மாதவி!...யாரையும் விட நான் உன்னைத்தான் அதிகமாக நேசிக்கிறேன்; காதலிக்கிறேன்!...

மாதவி : யாரையும் விட!...யார் யாரை விட? அல்லியை விடவா?... அடுத்த வீட்டுத் தாமரையை விடவா? சொல்லுங்கள்... யார் யாரைவிட அதிகமாக என்னைக் காதலிக்கிறீர்கள்?...

கோவ : அடடா! இது என்ன வம்பு? பெண்களுக்கே இது மாதிரி நேரத்தில் இப்படித்தான் எதற்கெடுத்தாலும் கோபம் வருமோ என்னவோ?...

[வேறு பக்கம் போகிறாள். மாதவி, பின் சென்று]

மாதவி : இது மாதிரி நேரம் என்கிறீர்களே; எது மாதிரி நேரம்?...

கோவ : அதுதான்; நடனமாடினால்...களைப்பு வருகிறதே; அதுமாதிரி நேரம்...

மாதவி : ஏன்...களைப்பு வருகிறது?...

கோவ : ஓகோ...மறுபடியும் விட்ட இடத்துக்கே வந்துவிட்டாயா?...

மாதவி : நீங்கள் சொல்ல மாட்டீர்களே சரி!.

[போகிறாள்]

கோவ : நில்! மாதவி!...மாதவி!...

மாதவி : என்ன!...மாதவியா?...

கோவ : ஆமாம்...மா...தா...வி...தான்! இனிமேல்—நீ...மாதவிதான்!...மாதா...மாதா...நீ...மாதா...நான்...பிதா! அதனால்தான் உன்னால் அதிக நேரம் நடனமாட முடியவில்லை.

மாதவி : போங்கள்...

[வெட்கம்]

கோவ : பார்த்தாயா...பார்த்தாயா!..அதனால் தான் சொல்லமாட்டேன் என்றேன்...

மாதவி : அத்தான்!....

கோவ : மாதவி!....

[சோகக் குரல் கேட்கவே, திடுக்கிட்டுத் திரும்புதல்]

குரல் : பகவானே! என்னை ஏன் இந்தக் கதிக்கு ஆளாக்கினாய்?...கணவனில்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?...அய்யோ...அய்யோ...இந்தக் கோலத்தில் என்னைக் கைவிட்டுப் போக அவர் மனம் எப்படித் துணிந்தது?...கடவுளே!...நீயாவது என் கணவரின் கல்மனத்தை மாற்றி நல்வழியில் திரும்பச் செய்ய அருள்புரிய மாட்டாயா? அய்யோ...யாரும் எனக்கு அபயம் அளிக்கமாட்டார்களா? இந்த ஏழையின் குரல், என் கணவரின் இருதயத்தைத் தொடாவிட்டாலும்; இறைவா! உன் இருதயத்தையுமா தொடவில்லை?...

[கோவலனும் மாதவியும் வியப்போடு குரல் வந்த பக்கம் வருகிறார்கள். ஒரு பிராமண மாது கையில் குழந்தையுடன் தலைவிரி கோலமாக, காவிரி யாற்றைப் பார்த்து நிற்கிறாள்; ஓலமிட்டபடி!....]

[அருகே வந்து]

கோவ : அம்மையே!...தாங்கள் யார்?...தங்களுக்கு என்ன நேரிட்டது?...

பிராமண மாது : அய்யா....அந்தணர் ஒருவரின் துணைவி நான். நான் அறியாமற் செய்த ஒரு குற்றத்தை மன்னிக்க மனமின்றி என் கணவர் என்னை வெறுத்துப் பிரிந்து விட்டார்....

கோவ : அப்படி யென்ன குற்றம்?..

பிராமண மாது : என் கணவர் ஒரு கிளிப்பிள்ளை வளர்த்து வந்தார்!...ஒரு நாள் அவர் ஊரில் இல்லை...நீராடுவதற்குக் குளத்திற்குச் சென்ற நான் குழந்தைக்குக் கிளிப்பிள்ளையைக் காவல் வைத்துவிட்டுச் சென்றேன். அப்போது குழந்தையைக் கடிக்க ஒரு பாம்பு வரவே, அதைக் கிளி கொன்று....அந்த ரத்தத்தோடு வெளியே ஓடிவந்தது... குளத்திலிருந்து திரும்பிய நான், குழந்தையைத்தான் கிளிப்பிள்ளை கொன்றுவிட்டதென்று தவறுக் கருதி, அதன்மீது குடத்தை வீசிக் கொன்று விட்டேன்....இந்தக் குற்றத்தைப் பொறுக்க மாட்டாமல்...என் கணவர்...என்னையும் குழந்தையையும் தவிக்க விட்டு...வெளிக் கிளம்பி விட்டார்....

கோவ : த்ச்...த்ச்....அப்படியா?

பிராமண மாது : அதோ... அதோ... படகில் அவர்தான் போய்க்கொண்டிருக்கிறார்..... அய்யா...தயவு செய்து படகை நிறுத்தச் சொல்லுங்கள்!

கோவ : ஏ...படகோட்டி!...படகை நிறுத்து!.. நிறுத்து!....

[சத்தமிட்டு]

கரைக்குக் கொண்டுவா!...

[படகு கரைக்கு வருகிறது]

[படகிடம், பார்ப்பனமாது பிள்ளையுடன் ஓடி]

பிராமணமாது : என்னை மன்னித்து விடுங்கள்; குழந்தை முகத்திற்காகவாவது திரும்பி விடுங்கள்!...

அந்தணர் ; சே!...முடியாது!... என்னை யாரும் தடுக்காதீர்கள்!

கோவ : அந்தணரே!...இவர்களைத் தனியே தவிக்க விட்டு நீர் வெளிச் செல்வதால்; இறந்த கிளிப்பிள்ளை உயிர் பெற்று விடுமோ?

அந்த : அநியாயமாக அதைக் கொன்ற பாவத்திற்கு விமோசனம் தேடவே நான் புறப்பட்டிருக்கிறேன்.

கோவ : உண்மை! கிளிப்பிள்ளைக்காக விமோசனம் தேட; பெற்ற பிள்ளையையும், கொண்ட மனைவியையும் விட்டு விட்டுப் போகிறீர்! அவர்கள் ஆதரவற்று அநியாயமாகச் செத்தால், அந்தப் பாபம் வேறு உம்மைச் சுற்றுமே!...அதற்கு விமோசனம் எங்கு போவது?...அந்தணரே பாம்பு குழந்தையைக் கடிக்குமா கடிக்காதா என்று தெரியாமலே கிளி அதைக் கொன்றுவிட்டது! அது போலவே, கிளி குழந்தையைக் கடித்ததா, கடிக்க வில்லையா என்று தெரியாமலே உமது மனைவி அதைக் கொன்றுவிட்டார்கள்! அதனால்...சரிக்குச் சரி ஆகிவிட்டது. நீர் உமது மனைவியோடு வீட்டுக்குப் போவதே முறை....

அந்த : அருமையான விளக்கம்... இந்த அந்தணனுக்கும் புரியாத விளக்கம்;....

கோவ : எல்லாம் தமிழ் மறை தந்த பழக்கம்!...

அந்த : நாங்கள் வருகிறோம்...வாழ்க! வாழ்க!

[போகிறார்கள்...போனதும்]

மாத : அத்தான்... நான் ஒன்று கேட்பேன், கோபிக்கக் கூடாது.

கோவ : கேள்; என் செல்வமே!

மாத : மனைவியை விட்டுப் பிரிந்த மறையவருக்கு அறவுரையாற்றினீர்களே; அது போல் தானே தங்கள் துணைவி...என் அக்காள் வாடிக்கொண்டிருப்பார்கள்... எத்தனை முறை சொல்லுகிறேன்; போய்ப் பார்த்து வாருங்கள் என்று.

கோவ : கண்ணகி முகத்திலே விழிக்க வெட்கமாயிருக்கிறது கண்ணே!

மாத : நீங்கள் என்னைக் காதலிப்பது அவ்வளவு வெட்கக்கேடான காரியமா? அதையாவது சொல்லுங்கள்.

கோவ : சரி...சரி...வா...போகலாம்!

மாத : ஊகும் - ஊருக்கு உபதேசம் செய்தால் போதாது! நீங்கள் கண்ணகியக்காணப் போய்ப் பார்த்துவருவதாக உறுதி கூறினால்தான் உங்களோடு பேசுவேன்.

கோவ : சரி, ஆகட்டும்!...

மாத : உண்மையாகவா?...

கோவ : நிச்சயமாக...இன்று போகிறேன். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு எனக்கும் போக வேண்டும் போலிருக்கிறது....

மாத : இந்த அந்தணரைப் பிரிவதற்கே அந்த அம்மை அப்படி அழுதாளே; அழகின் வடிவமான தங்களைப் பிரிந்து அக்காள் எவ்வளவு வேதனைப்படுவாள்...அய்யோ அக்காள் கண்ணீர் விட்டால்...அது என் வயிற்றில் இருக்கும் கருவைக் கூடப் பாதிக்கும்!

கோவ : மாதவி! இப்படியெல்லாம் என்னை பயமுறுத்திப் பணியவைக்க வேண்டாம். நான் கட்டாயம் போய் வருகிறேன். சரிதானே?

மாத : அத்தான்!...

கோவ : மாதவி...வா!...