பொருளடக்கம்சிலப்பதிகாரம்

காட்சி 13 / 38

காட்சி-13

துன்பப் புயலில் கண்ணகி

கண்ணகி வீடு

மூல ஸ்கேன் 44, 45

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[கண்ணகி கண்கலங்கியவாறு அமர்ந்திருக்கிறாள். அப்போது மாசாத்துவானும் அவர் மனைவியும் வருகிறார்கள்....]

மாசாத்துவான் : வரமாட்டானம்மா... வர மாட்டான்!......

கண் : மாமா!......

[எழுகிறாள் கண்ணீரைத் துடைத்தவாறு]

மாசாத் : அந்த வஞ்சகன் வரமாட்டான் கண்ணகி! வலையிலே விழுந்த மீனை விட்டான் கோவலன்!... நீயோ தரையிலே விழுந்த மீனை விட்டாய்!....

கண் : இல்ல மாமா! நீங்கள் நினைப்பது போல் எதுவும் நடக்கவில்லை......உட்காருங்கள்......உட்காருங்கள் அத்தை!... இதோ பழம் கொண்டு வருகிறேன்!..........

[ஓடிப்போய்ப் பழத்தட்டை எடுத்து வந்து வைக்கிறாள்.]

மாசாத் : என் அன்பு மருமகளே! தும்பை மலர் போன்ற தூய்மையான உன் இருதயத்தை உணர முடியாத உன்மத்தன் மகனைப் பெற்றேன்! மன்னித்து விடம்மா என்னை!... உனக்கேற்பட்ட கவலையை ஒரு நொடியில் நீக்குகிறேன்—இப்போதே மாதவி வீட்டுக்குப் போகிறேன். எனக்கு மகனாகப் பிறந்த மகா பாதகனை விலங்கிட்டு இழுத்து வருகிறேன்!...

கண் : வேண்டாம் மாமா! என் விருப்பத்தோடு தான் அவர் மாதவி வீட்டுக்குப் போயிருக்கிறார்.... நான்தான் அவரை வழியனுப்பி வைத்தேன்.......நீங்கள் அங்கு போய்த் தாறுமாறாக நடந்துகொண்டால்... அவரை அவமானம் சூழ்ந்து கொள்ளும். நான் பதித்துரோகி யாகிவிடுவேன்!

அத்தை : கண்ணகி! என் தங்கமே! உன்னைப்போல ஒரு பெண் என் வயிற்றில் பிறக்கவில்லையே!

கண் : அத்தை!... நான் உங்கள் வயிற்றில் பிறந்திருந்தால்... அவர் எனக்குக் கணவனைக் கிடைப்பாரா?...

மாசாத் : அவனைவிட அழகிலும் குணத்திலும் உயர்ந்தவனை உனக்குக் கணவனாக ஆக்கியிருப்பேன்....

கண் : மாமா! அவரைக் குறைகூறிப் பேசவதை என்னால் பொறுக்க முடியாது!...... உங்களைப் பற்றிக் குறைவாகப் பேசினால் அத்தை-சும்மாயிருப்பார்களா?......

மாசாத் : அத்தையா? உன் அத்தையா? கோவலனைப் போல் நான் ஒரு மாதவியைத் தேடிப் போயிருந்தால் இந்நேரம் உன் அத்தை பெரிய இராமாயண-பாரதப் போராட்டமே ஆரம்பித்திருப்பாள். நீதான் வாயில்லாப் பூச்சியாக இருக்கிறாய்!......

கண் : நீங்கள் யாரும் கவலைப்படாதீர்கள்!... அவர் விரைவில் திரும்பி வருவார்.... அவருக்கு என்மீதுள்ள அன்பு...நெடு வானத்தில் எழுகின்ற மின்னல் அல்ல! தொடுவானத்து எல்லையையும் கடக்கின்ற ஒளிப்பிழம்பு! என்றைக்கும் அவர் என்னுடையவர்!

மாசாத் : சரியம்மா, கண்ணகி!... அவன் திருந்தி... திரும்பி வரும்வரையில் தனியாக இருப்பானேன்? எங்கள் வீட்டுக்கு வந்து விடு!....

கண் : மாமா, எங்களைத் தனி வாழ்வு நடத்த ஏற்பாடு செய்தீர்கள்; தமிழர் வழக்கப்படி!.... அதில் நான் தோல்வி கண்டால் அல்லவா இந்த வீட்டை விட்டு அகலவேண்டும்! அவர் என்னை நெருப்பில் நிற்கவிட்டுப் போனாலும், அவர் வரும் வரை அங்கேயே நின்று கொண்டிருப்பேன்....

மாசாத் : மானாய்கன் மகளே!... உன் மன உறுதியைப் பாராட்டுகிறேன். தமிழ்க் குலத்தின் பெருமைக்கு நீயொரு சான்று! உன் இருதயத்தின் ஆழத்தில் படிந்திருக்கும் ஆறாத துயரம் விரைவில் நீங்க ஆசி கூறுகிறேன்... வருகிறேனம்மா.......

கண் : சரி மாமா!......

அத்தை : கண்ணகி...வரட்டுமா!...தேவந்தி... என் கண்ணகியைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்!...தேவை எதாவது இருந்தால் என்னிடம் நீயாவது வாம்மா!...

[தேவந்தி தலையசைத்தல்]

கண்ணகி, வருகிறேனம்மா!...

கண் : சரி அத்தை! கவலைப்படாமல் போய் வாருங்கள்!......

[அவர்கள் போகிறார்கள். கண்ணகி கண்கலங்கியவாறு சிரித்த முகத்தோடு வழி அனுப்புகிறாள்....]

[கண்ணகி அமர்ந்திருக்கிறாள். அப்போது மானாய்க்கனும் கண்ணகியின் தாயும் வருகின்றனர்]

மானாய்க்கன் : கண்ணகி!

கண் : அப்பா! அம்மா! வாருங்கள்!

மானாய் : என்னம்மா இது...புருஷனையும் பறி கொடுத்துப் பொருளையும் பறிகொடுக்க ஆரம்பித்துவிட்டாயா?

கண் : பொருள்!... யார் சம்பாதித்த பொருள்! திரை கடலோடி அவர் தேடிய திரவியம் தானே எல்லாம்! அவர் திருப்திக்காகச் செலவிடுவதில் என்னப்பா தவறு?...

மானாய் : ஐஸ்வரியம்...அள்ள அள்ளக் குறையாத ஆழ்கடல் நீரல்ல!... மெல்ல மெல்லக் கரைந்துவிடும் என்பதை மறவாதே மகளே!

கண் : செல்வம் குறைந்தால் பிறகு சேர்த்துக் கொள்ளலாம்-என் சிந்தை கவர்ந்த அத்தானுக்கு என்மீது அன்பு குறைந்துவிட்டால்... பிறகு...

மானாய் : அன்பு!... அவனுக்கு உன்மீது அன்பு!... அன்பு இருந்தால், அவன் ஏன் கணிகை ஒருத்தியின் காலடியில் கிடக்கிறான்? மாதவியாம் மாபாதகி ஒருத்தியல்லவா அவனுக்கு மகாராணியாகிவிட்டாள்!...

கண் : மாதவியை இகழாதீர்கள்... அவள் என்னைவிட உயர்ந்தவள். அழகில் மட்டுமல்ல; அன்பிலுங்கூட, அவரைப் பிரிந்து நான் உயிரோடு இருக்கிறேன்! அவள் அவரைப் பிரிந்தால் அரைக் கணமும் உயிர் தரிக்கமாட்டாள்!...அதன்காரணமாகத்தான் அத்தான்கூட அங்கேயே தங்கிவிட்டார்... என்மீது அவருக்கு அன்பில்லாமல் இல்லை; கணவனைப் பிரிந்து உயிர்வாழும் கல்மனம் கண்ணகிக்கு உண்டு! மாதவியின் மனமோ உடனே வாடும் மலர் போன்றது என்பதை அவர் நன்றாக அறிவார் அப்பா!...

மானாய் : அப்பயோ...குணக் குன்றையல்லவா என் குலக் கொடியாகப் பெற்றிருக்கிறேன். கோவலா! இந்தக் குளிர் பூங்கொத்தைக் கொடு நெருப்பில் வீசிவிட்டுப் போகலாமா நீ?...

[கண்ணகி கண்களில் நீர் வழிகிறது]

கண் : கவலைப்படாதீர்கள் அப்பா!

தாய் : தங்கமே! உன்னை நாங்கள் தேற்ற வந்தால் நீ எங்களைத் தேற்றுகிறாயா? பதுமைபோல் உன்னைப் பரிதவிக்க விட்டு விட்டு, அந்தப்பாவி.......

[கோபமாக]

கண் : அம்மா! நிதானித்துப் பேசுங்கள். இப்படி யெல்லாம் அவரைச் சபிப்பதாயும், திட்டுவதாயும் இருந்தால் இனிமேல் யாரும் இங்கே வராதீர்கள்....யாரும் இங்கே வராதீர்கள்!... யாரும் இங்கே வராதீர்கள்!...

[விம்மி விம்மி அழுகிறாள்.]