காட்சி 11 / 38
காட்சி-11
கற்பரசியின் கலக்கம்
கண்ணகி வீடு
மூல ஸ்கேன் 42
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[கண்ணகி தெருக்கதவின் ஓரம் நின்றவாறு, கோவலன் வரவு பார்த்திருக்கிறாள். பல்லக்கு வண்டி மெல்ல அசைந்தாடி வருகிறது. ஆவலுடன் பார்க்கிறாள். வண்டிக்காரன் மட்டுமே இறங்கி வருகிறான்......]
கண்ணகி : அவர் எங்கே ?
வண்டிக்காரன் : அவர் வரவில்லை!
கண் : ஆ !...
வண் : ரோமாபுரிப் பயணத்தைக் கூட ஒத்தி வைத்து விட்டாராம்.
[கண்ணகி அசைவற்று நிற்கிறாள்......... வண்டிக்காரன் போய்விடுகிறான். அப்போது கண்ணகியின் தோழி தேவந்தி வருகிறாள். கண்ணகி அசைவற்று நிற்பதைப் பார்த்து வியந்து]
தேவந்தி : கண்ணகி!......
[கண்ணகி மெதுவாகத் திரும்பி தேவந்தியைப் பார்க்கிறாள்.]
ஏன் ......என்ன நடந்தது ?
கண் : ஒன்றுமில்ல தேவந்தி!......
தேவ : பிறகேன் அழுகிறே?......
அவர் எங்கே, உன் புருஷன் ?...
கண் : நாளைப் பயணத்திற்காக ஏற்பாடுகள் செய்யப் போயிருக்கிறார்....
தேவ : ஓகோ ... நாளைப் பயணமா ? அந்தப் பிரிவை நினைத்துத்தான் இப்பவே அழுகிறாயாக்கும்! அடி அசடு!... வா உள்ளே !
[உள்ளே அழைத்துச் சென்று]
தேவந்தி : ஆமாம்........ அந்த மாதவி உன் புருஷனுக்கு ஆள்மேலே ஆள் விட்டாளே; அது என்னடி ஆச்சு கண்ணகி?....
(இருபொருளில்) கண்ணகி : தோல்வியில் முடிந்தது!...
தேவந்தி : அதானே! அதானே!... சீதையை விட்டு ராமன் பிரிவானே?.... கண்ணகியை விட்டுக் கோவலன் பிரிவானே? இடையிலே அந்த மாதவி ஒருத்தி, சூர்ப்பனகை மாதிரி வந்து அவமானப்பட்டாளே; ஏன்?....
கண்ணகி : மாதவியை இகழாதே; தேவந்தி! அவள் கொடுத்து வைத்தவள்; பாக்கியசாலி.