பொருளடக்கம்சிலப்பதிகாரம்

காட்சி 10 / 38

காட்சி-10

கலையரசி கண்ட உவகை

மாதவி இல்லம்

மூல ஸ்கேன் 39, 40, 41

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[கோவலன் வருகைக்காக இல்லம் அலங்கரிக்கப்படுகிறது, அவசர அவசரமாக....]

[கோவலன் வரும் அழகிய வண்டி.... மாதவி வீட்டு வாயிலின் முற்றத்தில் வண்டி நிற்கிறது. கோவலன் வண்டியினின்றும் இறங்குகிறான். ஆடலழகிகள் எதிர்கொண்டு அழைக்கின்றனர். வீட்டுக்கும், முன் வாயிலுக்கும் இடையே உள்ள தோட்டத்துப் பாதையில் மிக உற்சாகமான வரவேற்புத் தரப்படுகிறது. மாதவி ஓடிவந்து காலில் விழுந்து வணங்குகிறாள். பின், எழுந்து அவனை எதிர் கொண்டழைத்தவாறே அவன் முகத்தை விட்டுக் கண்ணைத் திருப்பாமல் செல்லுகிறாள். இரு புறமும் நடன மணிகள் தமது திறமையைக் காட்டுகின்றனர்.... வாயிற் படியண்டை செடியொன்றுக்கு ஊற்றிய தண்ணீர் உடைப்பெடுத்துக் குறுக்கே ஓடுவதைக் கண்ட மாதவி, அதில் கோவலன் கால்படக் கூடாதென்று, தன் தலையில் அணிந்துள்ள நீண்ட பட்டுச் சால்வையை எடுத்து, அந்தச் சிறு சேற்றுநீர் மீது விரிக்கிறாள். கோவலனும் அதில் கால் வைத்து நடக்கத் தயங்கி, பிறகு மாதவியின் முகத்தைப் பார்த்து, அவள் கெஞ்சுகிற கண்களுக்கு இரங்கி, பட்டு மீது கால் வைத்து நடக்கிறான். வசந்தமாலை கையில் வைத்திருந்த மாலையை மாதவி வாங்கி கோவலன் கழுத்தில் போட, அதை அவன் தானே பெற்றுக் கழுத்தில் போட்டுக் கொள்கிறான். நடனக் கூடத்திற்குக் கோவலன் அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள சிறப்புமிக்க இருப்பிடத்தில் உட்கார வைக்கப்படுகிறான். கருத்தைக் கவர்கின்ற நடனங்கள் மாதவியின் தலைமையில் நடைபெறுகின்றன. பெருங் கூட்டமென ஆடிக் கொண்டிருந்த பெண்கள் எப்படியோ ஒவ்வொருவராக அதை விட்டு நீங்கி விடுகின்றனர்.]

நடனங்களில் கோவலன் மயங்கி அமர்ந்திருக்கிறான்.

ஆடலழகிகள் ஒவ்வொருவராகக் குறைந்து இறுதியில் மாதவி மட்டுமே ஆடிக் கொண்டிருக்கிறாள்.

ஆடுகிறாள்.

ஆடுகிறாள்.

ஆடிக்கொண்டே இருக்கிறாள். விரகதாபம், காதலில் ஏமாற்றம், கோவலன் தன்னை ஏற்றுக் கொள்ளாததால் ஏற்பட்ட விரக்தி, மிதமிஞ்சிய சோகம் அனைத்தும் கலந்த ஆட்டம் ஆடுகிறாள்.

கோவலன் திகைப்பு.

அவள் மேலங்கியின் நுனி பட்டு அங்குள்ள கல்தூண்கள் கூட மத்தள ஓசை கிளப்புகின்றன. பலகணியில் படர்ந்திருக்கும் பச்சைக் கொடியில் அவள் விரல் படுகிறது. அதிலே யாழ் ஓசை-வீணையின் நாதம் அதிர்கிறது! விரகதாபத்தால் கை வளை கழன்று கீழே “தொப்” என்று விழுகிறது. அது வும் இசையாய் ஒலிக்கிறது.

உணர்ச்சிகள் அனைத்தும் பீறிட்டுக் கிளம்ப ஆடிக்கொண்டே இருக்கிறாள். சோகம் உச்ச கட்டம் அடைகிறது. அப்பொழுதும் ஆடுகிறாள்.

கோவலன் இதயம் படபடக்கிறது.

அந்த நடனக் கூட்டத்தில் ஒரே அமைதி.

அந்த அமைதியிலே கொடி போலத் துவள்கிறாள் மாதவி.

தணலில் விழுந்த புழு, துடித்து அடங்கி இறுதியில் மெதுவாக அசையுமல்லவா, உயிர் விடுவதற்கு; அதுபோல நெளிகிறாள்.

ஆட்டம் நிற்கவில்லை...இதுபோல ஆடியதே இல்லை.

“தடால்!”

மாதவி பேச்சு மூச்சற்ற நிலையில் தரையில் விழுந்து விட்டாள். கோவலன் “மாதவி” எனக் கதறி அவளைப் போய்த் தூக்குகிறான். அருகேயுள்ள தண்ணீரை எடுத்து முகத்தில் தெளிக்கிறான்.

பக்கத்தில் உள்ள பழத்தை அவசரமாகப் பிழிந்து பழச்சாறு தருகிறான், அவளுக்கு.

அவள் தலையைத் தன் மடியில் கிடத்திக் கொண்டு]

கோவலன் : மாதவி! மாதவி!!

[சிறிது நேரம் கழித்துக் கண் விழித்த மாதவி தாரை தாரையாகக் கண்ணீர் விடுகிறாள்]

கோவ : மாதவி...மாதவி... அழாதே! ஏன் இப்படி நடனமாட வேண்டும்?

மாதவி : பிரபு! இதுதானே என் கடைசி ஆட்டம்!...

கோவ : ஏன் அப்படிச் சொல்லுகிறாய்?...

மாதவி : என் கலைத் திறமை முழுவதையும் யாரிடம் காட்ட வேண்டுமோ அவரிடம் காட்டி விட்டுக் கடைசியாகக் கண்ணை மூடவே இந்தத் திட்டம் தயாரித்தேன் பிரபு!...

கோவ : உன் அவசர முடிவால் நாடு போற்றும் நாட்டியக் கலையே அழிந்து விடும்!...

மாதவி : உற்சாகமான உள்ளத்திலேதானே கலை உதயமாக முடியும்!

கோவ : யார் சொன்னது? சோகப் பெருவெள்ளத்திலும் கலை பெண்ணும் அலை எழுகிறது மாதவி!...

மாதவி : மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும் தமிழகத்தில் மாதவி மட்டும் ஏன் சோகக் கலையை வளர்க்க வேண்டும்; மக்களின் துன்பத்தில் ஆழ்த்த வேண்டும்?

கோவ : அப்படியென்ன உனக்குத் துன்பம் வந்து விட்டது?...

மாதவி : அப்படியானால்...என் வாழ்வில் சோகக் கறை நீங்கி விட்டதா? சோலைக் குயில் கூவி விட்டதா?...காலப் பறவை என் வாழ்வின் விடிவுக்கு வாழ்த்து கீதம் பாடி விட்டதா? சொல்லுங்கள் பிரபு!

கோவ : மாதவி!...

மாதவி : பொன் வேண்டேன்...பொருள் வேண்டேன்...மண்ணுளும் மறவேந்தர் தருகின்ற புகழ் வேண்டேன். எந்நாளும் கண்ணுளன் நீர் அருகிருந்தால்...ஊன் வேண்டேன், உயிர் வேண்டேன், தேன் வேண்டேன், தேவர் வாழ் உலகும் வேண்டேன்.

கோவ : மாதவி!...

மாதவி : படர்கின்றேன் உம்மீது கொடிபோல, தொடர்கின்றேன் அத்தானின் அடிச் சுவட்டை! சுடர் தந்தேன் வாழ்வுக்கு என ஒரு வார்த்தை கூறுங்கள் கண்ணு!

கோவ : மாதவி!...

மாதவி : “மயக்குகின்ற மாதர் வழி வந்தவள் நீ” என மனக் கலக்கம் கொள்ளுகின்றீர்.... உண்மைதானே?..

கோவ : இல்ல கண்ணே!...

மாதவி : ஆ!...

கோவ : மாதவி!...

[மாதவி அவன் மடியில் மயங்கிச் சாய்கிறாள்]