காட்சி 9 / 38
காட்சி-9
பிரிவினை தந்த பேதை
கண்ணகி.கோவலன்—கட்டில் அறை
மூல ஸ்கேன் 36, 37, 38
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[கண்ணகி கையில் மாலையுடன்! தீபம் எரிந்து கொண்டிருக்கிறது;
மாலையுடன் பாடிக் கொண்டே, மாலையைக் கோவலன் கழுத்தில் அணிவித்து, அவன் கால்களில் கரந்தொட்டு வணங்குகிறாள்.
கோவலன் அவளைத் தூக்கி நிறுத்தியவாறு,
“பெய்யெனப் பெய்யும் மழையே! கொழுநனைத் தொழுதெழும் நேரிழையே!”
என்ற பொருளில் பாடுகிறான்...இருவரும் மெய்ம்மறந்து தங்கள் பாசத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
பாட்டு முடிகிறது...
கோவலன் தனியே சென்று வருத்தமாக அமருகிறான். கண்ணகி அருகே சென்று]
கண் : என்னத்தான்...ஏன்?
கோவ : ஊடல்!...
கண் : ஊடலா?...அப்படியென்றுல்?...
கோவ : சரிதான் போ...ஊடல் என்றுல் தெரியாதா?...திருக்குறள் இன்பத்துப் பாலிலேயே தில சிறந்தது அது தானே...ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் கோபித்துக் கொள்வது; பிறகு சமாதானமாகி, சந்தோஷமாக இருப்பது.
கண் : வேண்டாம், வேண்டாம்; கோபிப்பானேன்; பிறகு சமாதானமாவானேன்?
கோவ : சமாதானம் ஆவதற்காகவே சண்டை போட்டுக் கொள்வதுதான் கண்ணகி; ஊடல்!...
கண் : அப்படியானால் இப்போது ஊடல் ஆரம்பமா?...
கோவ : இது ஒன்றும் ஊடல் இல்ல; கண்ணகி! உனக்குப் பிடிக்காத செய்தியொன்று சொல்லப் போகிறேன்.
கண் : என்னத்தான் ?...
கோவ : உன்னைப் பிரிந்து செல்லும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது...
கண் : ஆ!
கோவ : ஆமாம்; நாளைக் காலையில் ரோமாபுரிப் பயணம்!
கண் : மறுபடியும் வெளிநாட்டுக்கா?. அத்தான்; விளையாடுகிறீர்களா?
கோவ : இல்ல கண்ணகி; ஐம்பதாயிரம் முத்துக்கள் அகஸ்டஸ் சீமான் அரண்மனைக்குத் தேவையாம்...அதை ஏற்றிச் செல்ல வேண்டும்...நானே நேரில்!...
கண் : கடல் அலையில் கட்டுமரம் போல் தவிப்பதற்கோ பிறந்தேன், இல்ல; இந்தப் பயணத்தைத் தடுப்பதற்குத் துணிந்தேன்.
கோவ : தடை வேண்டாம்; தணல் வேண்டாம் உன் விழியில்! புனல் கடந்து ஒளி முத்து விற்று வந்தால், மடை திறந்த வெள்ளம் போல் பொற்காசு குவியும், தமிழர் வளத்தைத் தரணி அறியும். விடை கொடு பாவாய் - அத்துடன் விருந்தளிக்கும் உன் இதழ்க்கடையை இங்குக் கொடு!
கண் : முத்துச் சுமை ஏற்றிக் கத்து கடல் கிழிச் செல்லையிலே, குத்து விளக்கொன்றை இங்குச் செத்து மடிய விட்டுச் செல்கின்றேரும்... என நினைப்பீரா அத்தான்?...
கோவ : நினைக்கமாட்டேன் கண்ணே; உனை மறந்தாலன்றோ நினைப்பதற்கு! கண்ணகி! மூச்சு வாங்குவதற்கும் விடுவதற்கும் நினைப்பை வைத்துக் கொள்வதில்லை! என் உயிர் மூச்சே! ஏதேதோ எண்ணுதே! நீயின்றி நானில்லை! நிலவின்றி வானில்லை!
கண் : விண் மீன்கள் படையெடுத்தால்?
கோவ : புலால் உண்ணேன்...
கண் : ரோம் நாடு - அழகிகள் வாழ் தேன் கூடாமே!...
கோவ : அங்கு நான் ஓர் முடவனுயிருப்பேன். கொம்புத்தேன் தமிழகத்தில் உண்டென்று உன் கொய்யா இதழ் நினைத்து உறங்குவேன். கனவுக் கற்பனையில் உன் எழிலே உண்ணுவேன்.
கண் : உறங்குவீர்கள் நீங்கள்; அதனால் என்னைக் கனவில் உண்ணுவீர்கள் நீங்கள். கனவு தன்னில் உம்மைக் காணுகின்ற பாக்கியமும் எனக்குக் கிட்டாதே, அத்தான்!...
கோவ : ஏன் கண்ணகி?...
கண் : தூங்கினால் அல்லவா கனவு காண? நீங்களில்லையேல் என் விழிகளுக்கு உறக்கமேது?
கோவ : வருந்தாதே கண்ணகி... விடை கொடு; இந்த ஒருமுறை உன்னைப் பிரிந்து செல்வ! பிறகு என்றென்றும் அணுப்பொழுதும் உனைப் பிரியேன்...எங்கே; சிப்பியிலே விழியாத சிரிப்பு முத்தைக் காட்டிடுவாய்; என் சிந்தையிலே உறவாடும் செந்தமிழின் நலம் பாடித் திரும்புகிறேன்.
கண் : பிரிவு தரும் வேதனையால், பலாப்பழத்தின் தோல்மீது படுத்ததுபோல், புரள்வேன் அத்தான் பஞ்சணையில்!...
கோவ : பிரிந்தவர் கூடி விட்டால், பழத்துக்குள் இருக்கின்ற சுளைபோலச் சுவையேறும் செந்தமிழே!...
கண் : என்னதான் சொன்னாலும்; என்னை எடுத்துப் பிரிவென்னும் தணல் மீது போடுதற்கே முயல்கின்றீர்!
[அழுகிறாள்]
கொல்லாமற் கொல்லாதீர் கண்ணுளா!...
கோவ : கண்முத்துச் சிந்தாதே கண்ணகி! எண்ணிரண்டு பதினாறு கிழமை; அதன் பின்னர் அகல்வதில்லே உன்னைவிட்டு என்றுமே!...
கண் : மெய்தானு அத்தான்...
கோவ : பிரியவில்லை...பிரியவில்லை...பிறகென்றும் பிரியவில்லை...
கண் : பிரியவில்லையா?...பிரியமில்லையா?...
கோவ : கண்ணகி! ஏன் உனக்கு இப்படிச் சந்தேகம்?...
கண் : அத்தான்!...
[கண்ணீர் வடிக்கிறாள். துடைக்கிறான்...]
கோவ : கண்ணகி!...
[தெருக் கதவு தட்டப்படும் ஒலி கேட்கிறது...இருவரும் கவனித்தல்]
கோவ : நீ இரு! நான் பார்த்து வருகிறேன்.
[பள்ளியறை வாயிலைக் கடந்து, கூடத்தைத் தாண்டி, தெருக் கதவைத் திறக்கிறான் கோவலன். வசந்தமாலை வணங்கி நிற்கிறாள்]
கோவ : யார்? மறுபடியும் வந்து விட்டாயா?
வசந்த : மன்னிக்க வேண்டும்! மாதவி உயிரையே அர்ப்பணிக்கத் தயாராகி விட்டாள்!
கோவ : நீ எந்த வகையில் கிணை தொடுத்தாலும் பதில் ஒன்றேதான். மாதவியை மணப்பதற்காக நான் மாலையை வாங்கவில்லை.
வசந்த : பிறகு? மாதவியைக் கொள்வதற்காக மாலையை வாங்கினீர்களா?
கோவ : என்பது தவறுதான்! அவளை அந்தக் கிரேக்கக்கிழவனிடமே ஒப்படைத்திருக்க வேண்டும்.
வசந்த : மாதவி கேட்கிறாள், அழகில் குற்றமா, ஆடலில் குற்றமா, எதில் குற்றம் என் வெறுக்கிறீர் என்று?
கோவ : யார் சொன்னது அப்படி? அவள் அழகுக்கும் ஆடலுக்கும் பொருத்தமான ஆண் மகன் இன்னும் இந்த உலகத்தில் பிறக்கவில்லை!
[கோவலன் தர்ம சங்கடத்தில் துடிக்கிறான். கண்ணகி வந்தவாறு...]
கண் : அத்தான்!
கோவ : மாதவியை மணக்க வேண்டுமாம் நான்...தூது வந்திருக்கிறார்கள்; முடியாது என்று கூறிவிட்டேன்!...
வசந்த : முடியாது என்பதையாவது நேரில் வந்து கூறி விடுங்கள்.
கண் : நீங்களே போய் நிலைமையை விளக்கிக் கூறினால் அவள் மனத்துக்கும் ஒரு சாந்தி ஏற்படும் அல்லவா?....
கோவ : கண்ணகி!...
கண் : சீக்கிரம் திரும்பி விடுங்கள்! இதோ...
[என்று மேலங்கியை எடுத்து வந்து தருகிறாள்... அவன் காலணியைக் கொண்டு வந்து காலில் மாட்டி விடுகிறாள்.]
கோவ : நான் போகவே தேவையில்லை; உன் நூல்தான் எல்லாம்...
கண் : மாதவி நல்ல பெண்! அவள் மனமும் நோகக் கூடாதல்லவா?... “நானே ஒரு நல்ல மணமகனைப் பார்த்து, திருமணம் செய்து வைக்கிறேன்” என்று கூறிவிட்டு, வாருங்கள்!
கோவ : சரி கண்ணகி; வரட்டுமா?
கண் : வரும் வரையில் நான் இங்கேயே நின்று கொண்டிருப்பேன்; சீக்கிரம் திரும்பி விடுங்கள்...
கோவ : சரி! வருகிறேன்...
கண் : சிறிது நேரம் பிரிவதற்கே முடியவில்லை. ...நாளை ரோமாபுரிக்கு எப்படி வழியனுப்பப் போகிறேன்!...
கோவ : வரட்டுமா?...
கண் : அத்தான்!...
கோவ : கண்ணகி!...
[பிரிகிறார்கள்]
[பல்லக்கு போன்ற அழகிய வேலைப் பாடமைந்த வண்டியில் கோவலன் ஏறிக்கொள்ளவே, வண்டி போகிறது...கண்ணகி பார்த்தவாறு நிற்கிறாள்...]