காட்சி 8 / 38
காட்சி-8
கண்ணகி இல்லறம்
கோவலன் வீடு:—பள்ளியறை
மூல ஸ்கேன் 33, 34, 35
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[அழகான மஞ்சம். மஞ்சத்திலே மல்லிகை மலர்கள் பரப்பப் பட்டுள்ளன. பலகணி வழியே நிலவு! நிலவைச் சுற்றி விண் மீன்கள்! நிலவொளியில் கோவலனும் கண்ணகியும்]
கண் : அத்தான்! முதலில் நான் பயந்தே விட்டேன். என் நெஞ்சில் நெருப்பு பட்டது போல் இருந்தது அந்த நிகழ்ச்சி.
கோவ : அந்த நெருக்கடியிலிருந்து மாதவியை விடுவிக்க அதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது.
கண் : பயத்திலே கூட என் இருதயத்தின் ஆழத்தில் கடல் முத்தைப் போல் நம்பிக்கை குவிந்து கிடந்தது அத்தான்!
கோவ : பெண்களே சந்தேகப் பிறவிகள். என் கண்ணகி மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?
கண் : போங்களத்தான்; நான் உங்களைச் சந்தேகப்படவே மாட்டேன். நீங்கள் என் ஒருத்திக்கு மட்டுமே உரியவர்!
கோவ : ஆமாம் கண்ணகி! நீ யில்லாமல் என் வாழ்வுக்குச் சுவையே யில்லை!
கண் : ஈடு இணையற்ற என் இன்பப் புதையல் இடையிலே வந்த மாதவி பறித்துக் கொண்டு போய்விடுவாளோ என நடுங்கினேன். “மாமுது பார்ப்பார் மறைவழி காட்டிடத் தீவலம் செய்து நிகழ்த்திய திருமணம்” சக்தியற்றுப் போய்விடுமோ எனக் கலங்கினேன்!...
கோவ : கண்ணகி! அன்று, நீல விதானத்து நித்திலப்பூம் பந்தலின்கீழ் நீயும் நானும் கரம் பிடித்தபோது நெஞ்சில் எழுந்த உறுதியை என்றும் தளர விடமாட்டேன்.
கண் : உண்மைதானே அத்தான்! என்னை மறக்க மாட்டீர்கள் அல்லவா?...
கோவ : மறக்காதது மட்டுமல்ல, மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! காசறு விரையே! கரும்பே! தேனே! அரும்பெறற் பாவாய்! ஆருயிர் மருந்தே!...என வருணித்துக் கொண்டே யிருப்பேன். நீ மலையிடைப் பிறவாமணி! அலையிடைப் பிறவா அமிழ்தம்! யாழிடைப் பிறவா இசை!....
கண் : அத்தான்!...
கோவ : கண்ணகி!...
[அப்போது தாழ்வாரத்தில் “கண்ணகி” என்ற குரல் கேட்கிறது. கண்ணகி, கோவலனைப் பிரிந்து, வெளியே செல்கிறாள்.]
[கண்ணகி, தாழ்வாரத்துக்கு வருகிறாள். அங்கே மாநாய்கனும், அவன் மனைவியும்—சோகமுகத்துடன் நிற்கிறார்கள்.]
தாய் : கண்ணகி!
[என ஓடிவந்து தழுவிக்கொண்டு]
கண்ணகி, என்னம்மா! உன் தல எழுத்து இப்படியாகுமென்று நான் கனவுகூடக் காண வில்லையே!...
[விம்மியுடன்]
கண் : அம்மா!!!
மாநாய்கன் : கண்ணகி, கவலைப்படாதே! எல்லாம் நன்மையாகவே முடியும்! நீயும் உன் கணவனும், இணைபிரியாமல் இல்லறம் நடத்துவீர்கள் என்றுதான் நேற்று வரையில் நம்பி யிருந்தேன்...நடுவே இப்படிப் புயல் கிளம்பும் என்று நினைக்கவே யில்லையம்மா!...
[மேலும் விம்மியுடன்]
கண் : அப்பா!
[அதற்குள் மாசாத்துவானும் அவன் மனைவியும் வேகமாக வருகிறார்கள்]
[கோபமாக]
மாசாத் : கண்ணகி! எங்கே கோவலன்?
கண் : மாமா!...
மாநாய் : மாசாத்துவான்! பார்த்தீர்களா உங்கள் மகன் செய்த வேலையை! என் மகளே இப்படி வேதனை வடிவமாகி விட்டாளே?
மாசாத் : மாநாயகரே! கவலைப்படாதீர்! அவனுக்கு நான் பாடங்கற்பிக்கிறேன்...... கண்ணகி! பயப்படாதே! இந்த மாசாத்துவானுக்கு மருமகளாக வாழ்த்து; மனங் கலங்க உன்னை விடமாட்டேன்!...
கண் : மாமா! சொல்வதைக் கேளுங்கள்!.... அவரைப் பற்றித் தவறு எண்ணாதீர்கள்; அவர் என் தெய்வம்!
மாசாத் : உனக்குத் தெய்வம்; எனக்கு மகன்!...என் பாரம்பரைக்கே களங்கத்தை ஏற்படுத்தி விட்டு, அந்தக் கணிகை மாதவியை மணக்க நான் ஒருக்காலும் சம்மதிக்க மாட்டேன்.
கண் : அவர் ஒன்றும் அவளை மணக்கப் போவதில்ல.
மாசாத் : மணக்கப் போவதில்ல; கற்புக் கனி யுன்னைத் தாரமாக்கித் தனி வாழ்வு நடத்துவதற்கு வசதி தந்தால், பிணி போலத் தொத்துகிறான் பிறிதோர் பக்கம்! நன்று! நன்று! இந்த நாச வேலைக்கு இப்போதே முற்றுப்புள்ளி வைக்கிறேன்.
கண் : அத்தை!...மாமா! உண்மை உணராமல்......
அத்தை : உண்மைதான் உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெரிகிறதே கண்ணகி! நீ கவலைப்படாதே யம்மா! கோவலனே உன் மாமா எப்படியும் அழைத்து வந்து விடுவார்!
தாய் : பார்த்தீர்களா! அழுதழுது முகமெல்லாம் வீங்கியிருக்கிறது என் பெண்ணுக்கு! இரண்டு கண்ணும் எப்படிச் சிவந்திருக்கிறது பாருங்கள்! கண்ணகி; இந்தக் கோலத்தில் உன்னைப் பார்க்கவா தவங்கிடந்து உன்னைப் பெற்றேன்....
[அழுகிறாள்!]
கண் : அம்மா!...
மாசாத் : ம்! இதோ போகிறேன்; இரண்டு சொன்று பார்த்துவிட்டு வருகிறேன்...
[உள்ளிருந்து சிரித்துக்கொண்டே வந்தவாறு]
கோவ : அப்பா! எங்கேயப்பா போகிறீர்கள்?
மாசாத் : யார்! நீயா?...கோவலா! நீ இங்கே தானு இருக்கிறாய்?
கோவ : ஏன் வேறு எங்கே போகவேண்டும்?
[கண்ணகியிடம்]
மாசாத் : என்னம்மா இது; அப்படியானால் நான் கேள்விப்பட்டதெல்லாம் பொய்தானு?
கோவ : கேள்விப்பட்டது உண்மைதான், ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன்னுக்கு மால் வாங்கிய வரையில்! கிளியைக் கிழவனிடமிருந்து காப்பாற்றிய படலம், அவ்வளவு தான்! அதற்கு மேல் நீங்கள் கேள்விப்பட்டிருந்தால் அது ஏதோ கோள் சொல்லும் கோட்டான்களின் வேலை!...
தாய் : கண்ணகி!
கண் : நீங்கள் எல்லோருந்தான் என்னைப் பேச விடாமல் வளைத்து விட்டீர்களே; வருத்தம் தெரிவிக்க!...
மாநாய்கன் : அப்படியானு....
கோவ : காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்ட இல்லறம் இனிது நடைபெறுகிறது மாமா! கடைசி வரையில் கண்ணகி கண் கலங்காமல் பார்த்துக் கொள்ளும் கடமை எனக்கிருக்கிறது!...
மாசாத் : அவசரப்பட்டு விட்டோம் கோவலா!...இந்த நல்ல மகனைப் பெறுவதற்கு இவன் தந்தை என்ன பாக்கியம் செய்தானோ என்று பார் முழுதும் என்னைப் பாராட்டிப் புகழும். அது போதும் மகனே, எனக்கு!
[தழுவிக் கொள்கிறார் கோவலனை]
கண்ணகியின் தாய் : கண்ணகி! இப்படியொரு நல்ல குடும்பத்திற்கு மருமகளாகும் பாக்கியம் உன்னைத் தவிர வேறு யாருக்கம்மா கிடைக்கும்?
[கண்ணகி ஆனந்தக் கண்ணீர்]