காட்சி 7 / 38
காட்சி-7
கலைக்கரசி மாதவி
முத்துப் பந்தல்
மூல ஸ்கேன் 29, 30, 31, 32
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[மாதவியின் நடனம் நடைபெறுகிறது... சோழ மன்னனும் அரச மரபினரும், மற்றும் அரண்மனை மகளிரும், வணிகப் பெருவேந்தர்களும், அமர்ந்திருக்கிறார்கள். மாதவியின் தாய் சித்ராபதியும், கூனியும், தோழி வசந்தமாலையும் மேடை முகப்பில் அமர்ந்திருக்கிறார்கள். கோவலன், கண்ணகி, கிரேக்கக் கிழவர் மூவரும் பந்தலில் நுழைந்து அவர்களுக்குரிய இருக்கைகளில் அமருகிறார்கள். அவையினரும் அரசர் முதலானவரும் வியப்பும், மகிழ்வும் அடையும் வண்ணம் மாதவியின் நடனம் நடைபெறுகிறது. கிரேக்கக் கிழவர் நடனம் கண்டு அயர்ந்து விடுகிறார்.]
[இடையே]
கிரேக்கக் கிழவர் : கோவலா! அது ஓவியமா?...சிலையா?....உயிருள்ள பெண்தானா?...
கோவலன் : வயதாகிப் பழுப்பேறிவிட்ட உங்கள் இருதயத்தில் கூட இளமையின் வசந்தத்தை எழுப்புகின்ற இவள் பெயர் மாதவியாம்—நான் கூட இன்று தான் முதல் முதலாகப் பார்க்கிறேன்!...
[ஆட்டம் தொடர்ந்து நடைபெற்று அவையினரின் பாராட்டுதலுடன் முடிவுபெறுகிறது........ மாதவி மேடையினின்றும் இறங்கி வந்து சோழ மன்னனை வணங்கி நிற்கிறாள்...]
சோழன் : எண்ணும், எழுத்தும், இயல் ஐந்தும், பண் நான்கும், பண் நிறை கூத்துப் பதினொன்றும் —மண்ணின்மேல் போக்கினள்; பூம்புகார்ப் பொற்றொடி மாதவி, தன் வாக்கினில் ஆடரங்கின் வந்து!
[எனக் கூறி, சோழன், இலயாலும், பூவாலும் செய்யப்பட்ட ஒரு மாலையும்; தலைக்கோல் ஒன்றும், ஆயிரத் தெட்டு கழஞ்சு பொன் முடிப்பும் பரிசாக அளிக்கிறான். பின் சோழன் அதைவிட்டு அகலுகிறான்.]
(நாட்டியத் தலைவன் கையிலுள்ள கோலுக்குத் தலைக்கோல் என்று பெயர்.)
[சித்ராபதி, கூனியின் காதில் ஏதோ ரகசியமாகச் சொல்லுகிறாள்...... கூனி, மாதவியிடமுள்ள மாலையைக் கையில் வாங்கிக்கொண்டு மேடையில் நின்று ......]
கூனி : பெரியோர்களே! சித்ராபதியின் மகள் மாதவியின் கலைத் திறனை இதுவரை சுவைத்தீர்கள். மாதவியை வாழ்க்கைத் துணைவியாகப் பெறும் பாக்கியம் நமக்குக் கிடைக்காதா என்று எத்தனையோ பேர் காத்துக் கிடக்கிறார்கள்! அதற்காக இப்போது ஒரு சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது!.
கி. கிழவர் : அப்படிச் சொல்! அப்படிச் சொல்!! சுயம் வரத்தில் என்ன செய்ய வேண்டும்?
நான் தயார்!......
[எல்லோரும் சிரிப்பு]
கூனி : அரசரால் மாதவிக்குப் பரிசாக அளிக்கப்பட்ட இந்த மாலையை ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் கொடுத்து வாங்குகிறவர்—அவளுக்குக் கணவனுகலாம்!...
[அவையில் ஒருவருக்கொருவர் “ஆயிரத்தெட்டுப் பொன்! ஏ, அப்பா!” எனப் பெருமூச்சு விடுகின்றனர்.]
கி. கிழவர் : இதோ; ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன்!
[மேடையருகே ஓடுகிறான். சித்ராபதியும், கூனியும்...ஒருவருக் கொருவர் மகிழ்ச்சி!]
மாதவி : வசந்தமாலி? ...?....!....!
[தோழியிடம் திரும்பி வந்து]
வசந்த : [திகைப்புடன்] மாதவி!...
[மேடைக்கு வந்த கிழவர் பொன் முடிப்பை அவிழ்த்துக் கொட்டியவாறு]
கி. கிழவர் : ம்! தமிழ் நாட்டு முத்து வாங்கக் கொண்டு வந்தேன். ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன்! இந்தா—இது இந்த மாலைக்காக அல்ல! மாதவிக்காக! கொடு மாலையை....
[மாதவி, திடுமென கூனியின் கையிலுள்ள மாலையைப் பிடுங்கிக்கொண்டு சித்ராபதியைத் தழுவியவாறு—“அம்மா” என விம்முகிறாள்.]
சித்ரா : மாதவி!...என்ன இது குழந்தை மாதிரி! கொடு மாலையை!...
வசந்த : ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன்னுக்காக...இந்த நூற்று எட்டு வயதுக் கிழவனே மாதவி மணப்பதா?...
கி. கிழவர் : யாருக்கு நூற்று எட்டு? ஆளப் பார் இளவெட்டு! எனக்கு அறுபத்தெட்டு முடிந்து நான் எட்டு தான் ஆகிறது ஞாபகம் வைத்துக்கொள்!...
[கோவலனும் கண்ணகியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுதல்.]
வசந்த : அந்தோ! இந்தச் சபையில் ஆயிரத்தெட்டு பொன் தரக்கூடிய வாலிபர்கள் யாருமே இல்லையா?...கிளியை வளர்த்து இந்தக் கிழட்டுப் பூனை கையிலே கொடுப்பதா?...
நான் சொல்வதைக் கேளுங்கள்! மாதவியின் சுயம்வரத்தை ஒத்தி வைத்து விடலாம்.
சித்ரா : உஸ்! பேசாமலிரு! இந்தச் சித்ராபதி வாக்குத் தவறமாட்டாள்! மாதவி திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டும்.
வசந்த : அதை யார் மறுத்தார்கள்! ஆனால் யாரை?...
சித்ரா : இந்த மாலை வாங்கியவரை!
வசந்த : அப்படியானால், இவர் இந்த மாலையை வாங்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன்! ஐயா பெரியவரே!...தயவு செய்து எங்கள் மாதவியைக் காப்பாற்றுங்கள்!...
கி. கிழவர் : காப்பாற்றுகிறேன் — வாழ்க்கை முழுதும் அவளை வைத்து நான் காப்பாற்றுகிறேன்;அதற்கு என்னிடமிருக்கிற பொருள் போதும்!
வசந்த : பொருள் போதும்! ஆனால் வயது போதாதே தங்களுக்கு! இன்னும் நாலு வருடமோ, ஐந்து வருடமோ?
சித்ரா : பேசாதே; வசந்தமாலி! மாதவி வீண் பிடிவாதம் செய்யாதே! கொடுத்துவிடு மாலையை! ஒருவனையே மணந்து வாழ்வேன் என்று நீதான் சொன்னாய்; இப்போது நீயே என்னை அவமானப்படுத்துகிறாய்.....
மாதவி : அம்மா...ஒருவரை மணந்து வாழ்வேன் என்றேன்—இப்போது கன்னிப் பெண்ணுகவே காலங் கழிக்கத் தீர்மானித்து விட்டேனம்மா.
சித்ரா : உன் இஷ்டப்படி நாட்டியமாட என்னால் முடியாது!...
[கண்ணகி கோவலனிடம்]
கண் : ஐயோ, பாவம்; மாதவி!...அத்தான்! நீங்கள் தான் போய் அவளைக் காப்பாற்றுங்களேன்!
[மேடையில் கிழவரின் காலில் மாதவி விழுந்து]
மாதவி : பெரியவரே! என்னை மன்னித்து விடுங்கள்!
கி. கிழவர் : இதென்ன வேடிக்கை! ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் கொடுத்து மாலையை வாங்குகிறவர் உன்னை அடையலாம் என்றார்கள்!...அதுவும் சபை நடுவில்! இப்போது மாறுவது என்னால்...எனக்கு ஒன்றும் புரியவில்லையே!
[கோவலன் மேடைக்கு வந்து]
கோவ : பெரியவரே! மாலையும் வேண்டாம் மாதவியும் வேண்டாம்; வாருங்கள் போகலாம்.......
கி. கிழவர் : நன்றாயிருக்கிறது கோவலா; உங்கள் தமிழ் நாட்டு நியாயம்!
கோவ : கிழவனுக்கு இளங் கிளி மாலையிடுவது தமிழ் நாட்டுப் பண்பல்ல!
கி. கிழவர் : பிறகேன் மாலை வாங்குகிறவர் மாதவியை அடையலாம் என்று கூற வேண்டும்?....
கோவ : மாலை வாங்கத் தகுதியுடையவன் மாதவியை அடையலாமென்பது அவள் தாயாரின் நிபந்தனை. மாதவியை அடையத் தகுதியுடையவனே மாலையை வாங்கலாமென்பது என் தீர்ப்பு. வாருங்கள் போகலாம்.
கி. கிழவர் : முடியாது! என்னைத் தவிர வேறு யாரும் மாதவியை அடைய முடியாது!
கோவ : ஏன்?...
கி. கிழவர் : ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் தரக்கூடிய தகுதி வேறு யாருக்குமில்லை இங்கு!
கோவ : என்ன சொன்னீர்? தமிழகத்தின் தகுதி பற்றி இழித்துரைத்த முதல் மனிதனே நீர் தான். இதோ இதுபோல நூறு மால்களை வாங்கக்கூடிய ஆற்றலும் செல்வமும் தமிழருக்குண்டு என்பதை மெய்ப்பிக்கிறேன்...கொடு மாதவி மாலையை! ம்! இதோ ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் பெறுமானமுள்ள முத்தாரம்!
[என மாதவி கையிலுள்ள மாலையைப் பெற்றுக்கொண்டு, தன் கழுத்திலுள்ள முத்தாரத்தை அவள் கையில் தருகிறான். கண்ணகி அதிர்ச்சி]
[கோவலன், மேடையினின்றும் இறங்கி கண்ணகி இருக்குமிடம் வந்து...]
கோவ : கண்ணகி, வா—போகலாம்!...
கண் : அத்தான்!...
கோவ : பயப்படாதே—வா!
[அவையும் கலைகிறது. கூட்டத்தோடு கூட்டமாகக் கிரேக்கக் கிழவரும் நழுவுகிறார். கூட்டத்தோடு கோவலன் - கண்ணகியும் வெளியேறுகிறார்கள்.]
[கோவலன் போய்விட்டது கண்ட மாதவி வசந்தமாலியிடம்]
மாதவி : வசந்தமாலி! அவர் மாலையை வாங்கிக்கொண்டு போய்விட்டாரே!
வசந்த : ஏன்? என்ன செய்ய வேண்டுமென்கிறாய்?...
சித்ரா : இது கூடவா புரியவில்லை? அவரை வீட்டுக்கு அழைத்துவரச் சொல்கிறாள்...என்னம்மா மாதவி, அப்படித்தானே?...
[மாதவி நாணத்தால் தலைகுனிந்து வசந்தமாலையை நோக்குதல்]