காட்சி 6 / 38
காட்சி-6
பூம்புகார்ப் பொற்றொடி
மூல ஸ்கேன் 26, 27, 28
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[சாத்தனார் குரலுடன் பூம்புகார்க் காட்சிகள்]
சாத்தனார் : காவிரியாறும் கடலும் முத்தமிட்டுக் கொள்ளும் இடத்தில் அமைந்துள்ள அழகுத் திருநகராம் பூம்புகார்ப் பட்டினம்! புலிக் கொடியின்கீழ் ஆட்சி நடத்தும் சோழப் பேரரசின் தனிப்பெருந் தலைநகரம்—ஆங்கே ஆண்டுதோறும் நடைபெறும் இந்திர விழா பெருமை வாய்ந்த திருவிழா!
கடற்கோளுக்கு முன், கடாரம் வரை பரந்து கிடந்த சோழ மண்டலத்து மூதாதையொருவன் - இந்திரன் என்னும் பழந்தமிழன் - அவன் நினைவாக நடைபெறும் எழுச்சி விழா!
அவ் விழாவில் நகர மாந்தரும் வெளிநாட்டு வணிகப் பெருமக்களும் பங்கு கொண்டு ஆடிப்பாடி மகிழ்வர்...
பட்டினப் பாக்கம், மருவூர்ப் பாக்கம், நாளங்காடி எனப் பிரிக்கப்பட்டுள்ள பூம்புகாரின் முப்பகுதிகளிலும் மகிழ்ச்சிக் கூத்து!... கரிகால் சோழனுக்கு அவந்தி மன்னன் பரிசாக அளித்த தோரண வாயில்!...
வச்சிர நாட்டு மன்னன் காணிக்கையாகத் தந்த முத்துப் பந்தல்! மகத தேசத்து வேந்தன் கப்பமாக அளித்த பட்டிமண்டபம்! எங்கெங்கும் இன்பப் பெருவெள்ளம்! வீதிகளில் பூரண கும்பம்! பொற் பாவை! பாவை விளக்கு!—எங்கும் விழாக் கோலம்! தெருவெல்லாம் தமிழ் முழக்கம்!
“ஞாயிறு போற்றுதும்........ “திங்களைப் போற்றுதும்........... “மாமழை போற்றுதும்........
[சிலப்பதிகாரப் பாடலும், மகளிர் ஆட்டமும்]
[சாத்தனரின் குரல் தொடர்கிறது]
சாத் : பூரிப்பு மலிந்த அந்த நன்னாளில் புகார்ப் பட்டினத்துக் கடற்கரையின் வெண் மணல் திட்டின் மீது தன்னந்தனியே நின்று, அலைகடலில் ஆவலோடு எதிர்நோக்குகிறாள்; ...மழை நிகர் கொடை வள்ளல் மாநாய்கன் திருச்செல்வி ஈகைவான் கொடியன்னாள் இணையற்ற பேரழகி...போதிலார் திருவினாள் ......
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெருங் குணத்துக் காதலாள்—பெயர் மன்னும் கண்ணகி யென்பாள் மன்னே!
[கண்ணகி நிற்கின்ற காட்சி! அவள் கடல் மீது விழியோட்டுகிறாள். கப்பல். வருங் காட்சி! கண்ணகி முகத்தில் உற்சாகம். வந்த கப்பல் சிறிது தொலைவில் நிற்கிறது...கப்பலில் இருந்தோர் சிறுசிறு படகுகளில் ஏறி, கரைப்பக்கம் வருகின்றனர். அவர்களில் கிரேக்கர், ரோமானியர் முதலிய வெளிநாட்டினரும் இருக்கின்றனர்.
கோவலனும் அவனுடன் ஒரு கிரேக்கத்துக் கிழவனும் வருகின்றார்கள், சிறிய படகொன்றில் ஏறிக்கொண்டு!
படகு வருவதைக் கண்டு கண்ணகி துடிப்புடன் படகு நோக்கிக் கடலில் நடக்கிறாள்; அலைகளைப் பொருட்படுத்தாமல்!
கோவலனும் படகில் இருப்புக் கொள்ளாமல் தவிக்கிறான்!
கிரேக்கக் கிழவன் : யார் அந்தப் பெண்? இவ்வளவு துணிவோடு கடலில் சதிராடுகிறாள்?
கோவலன் : அவள்தான் என் வாழ்க்கைத் துணைவி; கண்ணகி!
கி. கிழவன் : ஆகா...உன் துணைவி! தமிழ் நாட்டு முத்துக்களைப் போலவே தமிழ்நாட்டுப் பெண்களும் அழகிகள் தான்! ஆகா! எங்கள் கிரேக்க நாடு இதுவரை இப்படியொரு அழகியைப் படைக்கவே இல்லை!
[கண்ணகி கடலில் மூழ்கி மூழ்கிப் படகிடம் வருகிறாள். கோவலனும், துடிப்போடு படகிலிருந்து குதித்துக் கண்ணகியிடம் வருகிறான். இருவரும் அலைகளால் தழுவப்பட்டுத் தாங்களும் தழுவிக் கொள்கிறார்கள்.]
கோவ : கண்ணகி!
கண் : எத்தனை நாளத்தான் எண்ணியிருந்தீர்கள்; என்னையிப்படி தனியே தவிக்கவிட!
கோவ : தனிமை எனக்கு மாத்திரம் இனிமையாகவா இருந்தது! தங்கமே...இந்தா... உனக்காகக் கிரேக்கத்தில்வாங்கிவந்த பரிசு!
[தந்தத்தால் ஆன ஒரு அழகிய பொருளைத் தருகிறான் ]
கண் : தமிழ்நாட்டு யானைத் தந்தம் கிரேக்கக் கலைஞர்கள் கைபட்டு எவ்வளவு நேர்த்தியாக மாறி இருக்கிறது, அத்தான்!
கோவ : தமிழகத்து மயில் தோகைகள் ஆடையாக உடுத்திக்கொண்டு, கலாப நடையிலும், கட்டழகிகள் ஏராளம், கிரேக்கத்தில்! தமிழ்நாட்டு முத்துக்களை வைத்திருப்பவர்கள் தான் கிரேக்க, ரோமானிய, எகிப்து தேசங்களில் பெருமைக் குரியவர்கள் என்று கருதப்படுகிறார்கள்.
கண் : அப்படியா?
கோவ : அவர்களுக்குத் தெரியவில்லை தமிழ் நாட்டில் முத்து, பவளம், மயில், அகில் இவை எல்லாவற்றையும் விட, விலை மதிப்பற்ற பொருள் ஒன்று இருப்பது...
கண் : என்னதான் அது? எனக்கே தெரியவில்லே?
கோவ : என் கண்ணகிதான் அந்த ஒப்பற்ற பொருள்! உயிர் படாச் சிற்பம்! உயிரோடும் ஓவியம்! வெளி நாடுகளில் நான் உலாவும் போதெல்லாம் “கண்ணகி பிறந்த தமிழ் நாடு” என்று என் காதல் நெஞ்சம் கவிதை பாடிக்கொண்டே இருக்கும்.
கண் : அத்தான், இனிமேல் என்னைப் பிரியமாட்டீர்களே?
கோவ : தமிழை விட்டுச் சுவை பிரியுமா?
கண் : வேற்று மொழி குறுக்கிட்டால்?
கோவ : விண் கனவு! விழிக்கு ஒளி போல— வீணைக்கு நாதம் போல—விண்ணுக்கு நிலவு போல...என்றென்றும் உன் அருகிருப்பேன்.
கண் : விண்ணுக்கு நிலவா? அத்தான்! அது, கண்ணுக்குத் தெரியாது ஒருநாள்! காரிருள்! அமாவாசை அதன்பேர்! வேண்டாமத்தான் அதுபோல!
கோவ : கண்ணகி! கயலெழுதி வில் எழுதிக் கார் எழுதிக் காமன் செயல் எழுதித் தீர்ந்த முகம்—தேன் சிந்தும் திங்கள் முகம்—மறப்பேனு கண்ணே! வா! விழாக் கோலம் பூணுவோம்! பிரிந்திருந்த நாட்களில் அனுபவித்த துன்பத்திற்கு இந்த ஒருநாளில் முடிவுகாண்போம், வா!...
[அப்போது, படகிலிருந்து மெதுவாக இறங்கிக் கிரேக்கக் கிழவர் அருகே வந்து]
கி. கிழவர் : என்ன கோவலா! என்னை மறந்தே விட்டாய் போலிருக்கிறது?...
கோவலன் : மன்னிக்கவும்!...
[கண்ணகிக்கு அவரை அறிமுகப் படுத்துகிறான்]
கண்ணகி : இவர் கிரேக்கத்தில் பெரிய செல்வந்தர்!
[கண்ணகி வணங்குதல்]
திலசிறந்த வாணிப வேந்தர்! அங்கே நமது பொருள்கள் இவர் மூலமாகத்தான் விற்பனையாகின்றன—பார்வைக்குக் கிழவரே தவிர—ஒரு வாலிபனுடைய குறும்பு அத்தனையும் இவருக்கு உண்டு!
கி. கிழவர் : இரு! இரு! என்ன அப்படிச் சொல்லி விட்டாய்?...என்னைப் பார்த்தால் கிழவனுகவா தெரிகிறது?......தமிழ்ப் பெண்ணே! நீ சொல் நான் கிழவனா?
கண்ணகி : இல்ல தாத்தா!....
கி. கிழவர் : ஆங்...அப்படிச் சொல்! கோவல! தாத்தா என்றால் என்ன?
கோவலன் : ஆணழகர் என்று அர்த்தம்...
கி.கிழவர்: ஆங்...மகிழ்ச்சி...மகிழ்ச்சி பொருத்தம்...பொருத்தம்...
கோவலன் : என்னிடம்தான் கண்ணகி, இவர் தமிழே கற்றுக் கொள்கிறார்...
கண்ணகி : அப்படியானால் முத்தமிழில் இயல், இசை இரண்டும் தெரிந்திருக்கும்.
கி. கிழவர் : ஆங்...இயல்...இசை...‘தெரியும்’ கூத்துதான் தெரியாது!...
கண் : அத்தான்; இந்திர விழாவையொட்டி, இன்று முத்துப் பந்தலில் மாதவியின் நடனம் இருக்கிறது...மூவருமேசென்று பார்க்கலாமே!...
கி. கிழவர் : நடனமென்றல் ?...
[நடனம் போல் அபிநயங் காட்டி]
கோவலன் : கூத்து!