பொருளடக்கம்சிலப்பதிகாரம்

காட்சி 5 / 38

காட்சி-5

சிலம்பின் தோற்றம்

சேரநாடு

மூல ஸ்கேன் 24, 25

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[பெரியாற்றங்கரையை அடுத்துள்ள மலை வளமிக்க பகுதி. தினைப்புனங்களில் கிளிகள் ஓட்டுகின்ற ஒலியும் ஆலோலப் பாடல்களும்... யானைகளும் புலிகளும் நிறைந்த இடமென்பதை விளக்கும் குறிநிலைகள்....மலைப்பகுதியில் மலைமகளிரும் ஆடவரும் அவரவர்கள் தலையிலும் தோளிலும் பல பொருள்களைச் சுமந்து நடக்கின்றனர். கூடைகள், மூட்டைகள், மான்குட்டிகள், புலிக்குட்டிகள், குரங்குகள்... இப்படிப் பலவகைப் பரிசுப் பொருள்களுடன் பயணம் நடத்துகின்றனர். வரும் வழியில், மலைவடிவாரத்தில் நின்று கொண்டிருந்த இளங்கோவடிகளை வணங்குகின்றனர்.]

இளங்கோவடிகள் : மலைவாழ் தமிழர்களே!.... பெரியாற்றங்கரை நோக்கிப் போவதுபோல் தெரிகிறதே...எதற்காகவோ?

ஒருவன் : அடிகளாருக்குத் தெரியாதா? தங்கள் அண்ணன் செங்குட்டுவ மன்னரும் புலவர் சாத்தனரும் இயற்கை வளங் காண்பதற்காகப் பெரியாற்றங்கரைக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பரிசாக இவைகள்...

இளங் : அப்படியா! நானும் வருகிறேன்.

[அனைவரும் பயணத்தைத் தொடருகிறார்கள்.]

[பெரியாற்றங்கரை: இரண்டு யானைகள் போர் நடத்துவதை செங்குட்டுவன், வேண்மாள், சாத்தனார் மூவரும் வேடிக்கை பார்க்கிறார்கள்... அப்போது— இளங்கோவும் மலைமாந்தரும் வருகிறார்கள்.]

செங்கு : தம்பி!

இளங் : அண்ணா!

[தழுவிக் கொள்கிறார்கள்]

இளங் : அண்ணி...சுகந்தானே!

[அவள் தலையசைக்கிறாள்]

இளங் : சாத்தனரே...தாங்களும்...

சாத்தனார் : மலைவளம் காணவந்தேன். மன வளம் மிகுந்த தங்களைக் காணும் வாய்ப்பும் பெற்றேன்.

இளங் : அண்ணா! இந்தப் பகுதி மலை மக்கள் தங்களுக்குப் பரிசுப் பொருள்கள் அளிக்க விரும்புகிறார்கள்.

செங்கு : அப்படியா!...

மலைமக்கள் : வணக்கம்!...

[அனைவரும் வணங்குதல்]

யானைத்தந்தம், தேன், சந்தனக் கட்டை, தேங்காய், கரும்பு, மாங்கனி, பலாக்கனி, வாழைக்குலை, சிங்கக்குட்டி, புலிக்குட்டி, யானைக்குட்டி, குறும்பாடு, மான்குட்டி, கிரிப்பிள்ளை, தோகைமயில், புனுகுபூனை, கிளி ஆகிய பரிசுப் பொருள்கள் எதிரே குவிக்கின்றனர்.]

செங்கு : மிக்க நன்றி! மகிழ்ச்சி!! தமிழ்நாட்டு வளங்கள் என்றென்றும் வாழ்க! அன்புள்ளவர்களே...இந்தப் பகுதியில் ஏதாவது புதுமை உண்டா?

ஒருவன் : உண்டு, உண்டு! கணவனை இழந்தொரு பெண்... கண்ணகி யென்ற பெயருடையவள்... அதோ அந்த வேங்கை மரத்து நிழலிலேயே பல நாட்கள் நின்றுகொண்டிருந்தாள்... கணவன் வருவான் வருவான்

என்று கண் கலங்கக் கூறிக் கொண்டிருந்தாள்...திடீரென ஒருநாள் அவளைக் காணவில்லை...எங்கு போனாளோ, தெரியாது. கணவன்தான், இறந்தவன் திரும்பி வந்தானோ...அல்லது அவள்தான் அவனோடு போய்விட்டாளோ...தெரியாது எங்களுக்கு! அவளைப்போல ஒரு பெண்ணை இதுவரை நாங்கள் கண்டதில்லை....

செங்கு : கண்ணகி...!

சாத்த : ஆமாம்! கற்புக்கரசி கண்ணகி! நல்ல நேரத்தில் மலைமக்கள் நினைவூட்டினர்கள்...நான் அவள் கதையைச் சொல்லுகிறேன். இளங்கோவடிகள் அதை ஒரு காவியமாக எழுதட்டும்! கண்ணகி காவியம் சேர, சோழ, பாண்டிய நாட்டுப் பெருமைகளைக் சொல்லும் ஒப்பற்ற கருவூலமாக அமையட்டும்...! முடியுடை மூவேந்தர்க்கும் இக்கதை உரியதாகையால் இளங்கோவடிகள் இதனை எழுதுவதே பொருத்தமாகும்.

செங்கு : சொல்லுங்கள் புலவரே! இளங்கோ அதற்கு இலக்கியம் படைப்பான்! என்ன தம்பி! சரிதானே?

இளங் : சரி யண்ணா!

சாத்தனரே சொல்லுங்கள், கண்ணகி கதையை...

[சாத்தனார் அங்குள்ள புலிக்குட்டியைத் தடவிக் கொடுத்தவாறு கதையைத் துவங்குகிறார்...]

[இளங்கோவடிகள் எழுதத் தொடங்குகிறார்.]

[புலிக் கொடி பறக்கிறது. சாத்தனரின் குரலுடன் காட்சி மாறுகிறது.... பூம்புகார்ப் பட்டினக் காட்சிகள் துவங்குகின்றன.]

சாத்த : காவிரி யாறும், கடலும் முத்தமிட்டுக் கொள்ளும் இடத்தில் அமைந்துள்ள அழகுத் திருநகராம் பூம்புகார் பட்டினம்! புலிக் கொடியின்கீழ் ஆட்சி நடத்தும் சோழப் பேரரசின் தனிப்பெருந் திலகராம்!...