பொருளடக்கம்சிலப்பதிகாரம்

காட்சி 4 / 38

காட்சி-4

இளங்கோ துறவு

சேரலாதன் மாளிகை

மூல ஸ்கேன் 21, 22, 23

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[ஆங்கு சேரலாதன், நற்சோணை, செங்குட்டுவன், வேண்மாள் இருக்கிறார்கள். செங்குட்டுவன் முகம் இப்போது ஒளியோடும் தெளிவோடும் இருக்கிறது.]

செங்குட்டு : இளங்கோ யார்? என் தம்பி தானே! நான் ஒருவன் பிறக்கவில்லையென்று கருதிக்கொண்டு அவனுக்கு முடிசூட்டுங்களேன்!...

சேரலாதன் : மூத்தவனிருக்கும்போது இளையவனுக்கு...முறையல்லவே செங்குட்டுவா!

செங்குட்டு : இறைவனருள் அப்படித்தான் இருப்பதாக நிமித்திகர் கூறிவிட்டாரே! தந்தையே! தம்பிக்கே நாடு உரியதாகட்டும்! விதி வழி அவனுக்கு வரவேண்டியதை நான் தடை செய்யமாட்டேன்! படைத் தளபதியாக இருந்து நாட்டையும் தம்பியையும் பாதுகாப்பேன்.....

[“அண்ணா” என மென்மையான குரல் கேட்டு அனைவரும் திரும்புகிறார்கள். இளங்கோ, இளங்கோவடிகளாக மாறி நிற்கிறான்! துறவுக் கோலம்!....]

செங்கு : தம்பி! இது என்ன கோலம்?

இளங் : தாய்மையுள்ளங் கொண்ட அண்ணனுக்காகத் தம்பி ஏற்றுக்கொண்ட துறவுக் கோலம்! இளங்கோ அரசனல்ல; இளங்கோ அடிகள்!....

நற்சோணை : இளங்கோ, என் ஆசை மகனே, உன்னை இப்படிக் காண வேண்டுமென்பது விதியா?

இளங் : விதி இதுவல்ல தாயே! நான் வேந்தனுக வேண்டுமென்பது விதி! இது, மதி!

செங்கு : தம்பி! வேண்டாம் இந்தக் கோலம்! ஏற்றுக்கொள் சேரப் பேரரசை! என் உள்ளமெல்லாம் நிறைந்தவனே! எழில்மிகு வஞ்சித்திலநகரின் வீதிகளில் ஏறுபோல் பவனி வரவேண்டிய நீ, துறவிக் கோலம் பூண்டு, துடிக்க விடாதே எங்களை!...

சேரலாதன் : அன்புத் திருமகனே! உன் தியாக உள்ளத்தைத் திறந்து காட்டிவிட்டாய்! தென்னகத்து மண்ணிலெல்லாம் புகழ் மணக்கச் செய்து விட்டாய்! ஆளப் பெற்று வளர்த்த எங்களைப் பித்தராக்குவது முறையா என எண்ணிப் பார்!...

நற்சோணை : ஆமாம் கண்ணே! இளங்கோ! ஈட்டிகள் ஆயிரத்தை எங்கள் இதயத்தில் பாய்ச்சாதே!

[வேண்மாள் கண்ணீர் விட்டவாறு தூணில் சாய்ந்திருக்கிறாள்.]

அதோ பார்; உன் அண்ணி கண்ணீர் விடுவதை.......அப்பா துடிப்பதை.......அண்ணன் கலங்குவதை.......பெற்ற வயிறு புலம்புவதைக் கேளடா மகனே, கேள்!

இளங் : யாரும் என்னைத் தடுக்க வேண்டாம்!...விதியை வெல்வதற்கு நான் தேர்ந்தெடுத்த முடிவு இது! விதி விட்ட வழியில் நடப்போமென்று இருந்தால் வேதனைக் களமாகி விடும் தமிழ்நாடு! விதிப்படியே வெற்றி தோல்வி யென எண்ணியிருந்தால்....அப்பா இமயத்தின் நெற்றியிலே விற்கொடியைப் பறக்கவிட்டிருக்க முடியாது! விதியை எதிர்க்கிறேன்....மேலும் மேலும் எதிர்க்கிறேன்! எடுத்த எடுப்பிலேயே எனக்குக் கிடைத்த வெற்றி இது! என்னை வாழ்த்தி வழியனுப்புங்கள்!...

செங்கு : இளங்கோ! எங்கு போகிறாய்?

இளங் : இன்பத் தமிழகத்தை விட்டு எங்கும் போய்விட மாட்டேன். திலகநகருக்கு அருகேயுள்ள குணவாயிற் கோட்டத்திலேயே தங்கப் போகிறேன்! அடிக்கடி அனைவரையும் சந்திக்கிறேன்.

அப்பா!...

அம்மா!...

அண்ணி!...

அண்ணா!...

வருகிறேன்......

[அனைவரது விழிகளிலும் நீர் பெருகி வழிகிறது]

[இளங்கோவடிகள் வெளியேறுகிறார் அரண்மனையைத் துறந்து.]

அரண்மனை வாயிற்புறம்.

[இளங்கோவடிகள் வெளியேறுவதைக் காவலர் அனைவரும் கண்கலங்க கவனிக்கிறார்கள்! நாவலர், பாவலர் அனைவருமே அமைதி நிறைந்த சோகத்தோடு மரம்போல் நிற்கிறார்கள். பெண்டிரும், பாலரும், உழவரும், வணிகரும் சித்திர உருவங்களாய் அசையாது நின்று விடுகின்றார்கள். மாளிகையிலிருந்து அன்னை, தந்தை, அண்ணன், அண்ணி காணுகிறார்கள். இளங்கோவடிகள் வெகு தொலைவில் போய் விடுகிறார்........ எதிரே நிமித்திகன் வருகிறான்.]

நிமித்திகன் : யார்? இளங்கோவா?... என்ன இது?...

இளங்கோ : நீர் பெருமையோடு பேசினீரே அந்த விதியின் வீழ்ச்சி! மதியின் வெற்றி! தோல்வி கண்ட முகத்தைத் தொங்க விட்டுக் கொண்டு உமது தொழிலையே துறந்து விட்டு என்னைத் தொடர்ந்து வாரும்.

நிமித் : ஆ!...

இளங் : ஏன் முடியாதா?....உள்ளம் பக்குவமடையவில்லையா? ஊழ்வினை தடுக்கிறதா? வருகிறேன்!

[நிமித்திகன் வியப்போடு தனக்குள்]

நிமித் : இப்போது பிழைப்பே போனது; இனி மாளிகைப் பக்கம் போனால் மானம் போய் விடும். தோல்வி! பெரிய தோல்வி!!

[திகைத்து நிற்கும் நிமித்திகரோடு காட்சி முடிகிறது.]