பொருளடக்கம்சிலப்பதிகாரம்

காட்சி 3 / 38

காட்சி-3

விழாவும் வினாவும்

சேரன் அரண்மனை

மூல ஸ்கேன் 19, 20

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[பிறந்த நாள் விழா நடைபெறும் கொலுமண்டபம் மிக்க அழகுற அமைக்கப்பட்டிருக்கிறது. வேந்தன் நெடுஞ்சேரலாதனும் அரசி நற்சோணையும் அமர்ந்திருக்கிறார்கள் அரியாசனத்தில்! வில்லேந்திய வீரர்குல மங்கையரின் கூத்து நடைபெறுகிறது. செங்குட்டுவனும் இளங்கோவும் மண்டபத்தில் நுழைந்திடும்போது, கூத்தாடும் பாவையர், அவர்களை எதிர்கொண்டழைத்து அரசர் இருக்கையிடம் அழைத்துச் செல்கிறார்கள். இருவரும் பெற்றோரை வணங்கி அருகே அமர்கிறார்கள். தொடர்ந்த கூத்து முடிகிறது. நெடுஞ்சேரலாதன் எழுந்து வாழ்த்துரையாற்றுகிறான்]

நெடுஞ்சேரலாதன் : அவையத்துப் பெருமக்களே! சேர நன்னாட்டின் செழிப்பையும் புகழையும் பெருக்கிடும் ஆற்றல் பெற்ற செங்குட்டுவனை மகனாகப் பெற்றதை எண்ணி எண்ணி என் மனம் துள்ளுகிறது இன்று! தம்பியுடையான் படைக்கஞ்சான் எனும் பழமொழிக்கேற்ப இளங்கோவை இளையோனாகப் பெற்ற என்னருஞ் செல்வனை வாழ்த்துகிறேன், இந்த நன்னாளில்! விரைவில் செங்குட்டுவன் முடிசூடி செங்கோல் ஏந்தி, தமிழ் அறம் வளர்ப்பான் என்றும்...அந்நாள் அண்மையில் அமையுமென்றும் அறிவிக்கின்றேன்...

அவையோர் : வாழ்க செங்குட்டுவன்! செங்குட்டுவன் வாழ்க!!

[நிமித்திகன் குறும்புச் சிரிப்புடன் எழுகிறான்]

நிமித்திகன் : வாழ்க செங்குட்டுவன்! வாழ்க எதிர்கால மன்னர் இளங்கோ!!

சேரலாதன் : என்ன? நிமித்திகரே! என்ன கூறுகிறீர்?...

நிமித்திகன் : நான் கூறவில்லை அரசே! ஊழ்வினை அப்படித்தான் கூறுகிறது! முடியினையும் உரிமை மூத்தமகன் செங்குட்டுவனுக்குத் தான் உண்டெனினும்... விதி புனையும் கதையோ வேறுக இருக்கிறது! இளையவன் இளங்கோ தான் சேர மண்டிலத்தை ஆளுவனும்...

சேரலாதன் : [வியப்புடன்] என்ன?...

அவையோர் : மூத்தவனிருக்க இளையவனுக்குப் பட்டமா?

[செங்குட்டுவன் முகம் மாறுகிறது. அதை இளங்கோ கவனிக்காமல் இல்லை.]

இளங் : இல்லை! இல்லை!! என் அண்ணனே ஆளப் பிறந்தவர்!

சேரலாதன் : இளங்கோ! நிமித்திகர் வாக்குப் பொய்க்காது!

இளங் : பொய்க் காது படைத்தவர்களுக்கு நிமித்திகர் வாக்குப் பொய்க்காது!... இது உண்மைக் காது!...அவர் ஆருடங்கேட்டுக் கலங்காது!...

நிமித்திகன் : ஊழ்வினையை மாற்ற இயலாது இளங்கோ!...

இளங் : ஏன் இயலாது? “ஊழையும் உப்பக்கம் காண்பவர் உலைவின்றித் தாழாது உஞற்றுபவர்” எனக் குறள் கூறும் கருத்தை உண்மையாக்குகிறேன்! நீர் கூறும் விதியை மதியால் வெல்லுகிறேன்!

நிமித்திகன் : மூத்தவன் இராமன் காடாள வேண்டும்; இளையவன் பரதன் நாடாள வேண்டும் என்ற விதியை யாராவது மாற்ற முடிந்ததா?

இளங் : பரதனும் ஆளவில்லை; இராமனும் ஆளவில்லை; பதினெட்டு வருடம் பாதரட்சை அல்லவா நாடாண்டது! நிமித்திகரே,பழைய இதிகாசங்களைக்காட்டி விதியை நிலைநிறுத்த எண்ணாதீர்! இதோ...நான் படைக்கிறேன் புதிய இதிகாசம்! உமது ஆரூடத்தை அறிவால் வெல்லுகிறேன்...அண்ணனையே அரசுக்குரியவராக்குகிறேன்! ஏற்றுக் கொள்ளும் நிமித்திகரே எனது அறைகூவல்! உமது கூற்று தூள்! தூள்!! தூளாகப் போகிறது பாரும்!...வருகிறேன்!...

[இளங்கோ மண்டபத்தை விட்டு வெளியேறுகிறான். அவை, வியப்பில் ஆழ்கிறது. அரசரும் அரசியும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்கிறார்கள், வேதனையோடு!]