காட்சி 2 / 38
காட்சி-2
செங்குட்டுவன் பிறந்தநாள் விழா
வஞ்சி
மூல ஸ்கேன் 18
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[செங்குட்டுவனின் தனி மாடம். அவனை அழகு படுத்திக் கொண்டிருக்கிறாள் அவன் துணைவி வேண்மாள்.]
செங்குட்டுவன் : வேண்மாள்! விழாக்கோலம் பூணச் செய்து என்னைக் கொலு மண்டபத்திற்கு அனுப்புகிறாயே, இதுபோலவே போர்க் கோலம் பூணச் செய்து களத்திற்கு வழி அனுப்ப வேண்டிய காலமும் வருமல்லவா?
வேண்மாள் : பிறகென்ன; விழுப்புண் பெறுதவர்கள் வீரர்கள் அல்லவே! களத்திலே ஏற்படும் காயங்களை ஆற்றுவதற்கு என் உதட்டிலே வைத்திருக்கிறேன் மருந்து!
செங்கு : கண்டேன்! ஆண்டுதோறும் பிறந்த நாள் விழா நமக்கு மாத்திரம் வருகிறது...
வேண் : நமக்கொன்று பிறக்கவில்லே என்கிறீர்களா?....இன்று கொலு மண்டபத்திற்கு வரும் நிமித்திகனிடம் ஆருடம் கேளுங்களேன்;எப்போது நீங்கள் தந்தையாவீர்கள் என்று!
[அப்போது மகிழ்ச்சியுடன் இளங்கோ நுழைகிறான்]
இளங்கோ : ஆருடமா? நிமித்திகனிடமா? அவன் பொய்யுரைகளே நீங்களும் நம்புகிறீர்களா அண்ணி?
செங்கு : [புன்னகை தவழ] இளங்கோ?
இளங் : விழாவுக்கு நேரமாகிறது அண்ணா! புறப்படுங்கள்!
செங்கு : நான் முன்பே தயார்! உன் அண்ணி தான் மெருகு கொடுத்துக் கொண்டேயிருக்கிறாள் அலங்காரத்துக்கு!
இளங் : அண்ணி! விடை கொடுத்து அனுப்புங்கள் அண்ணனுக்கு! நான் வாயிற்புறம் காத்திருக்கிறேன், அண்ணா!
செங்கு : இரு இரு இளங்கோ! நானும் வருகிறேன்! குறும்புக்காரா!...வேண்மாள்!...
[“வருகிறேன்” என்பதை விழியால் உணர்த்திவிட்டுத் தம்பியுடன் செங்குட்டுவன் தனி மாடத்தை விட்டு வெளியேறும் காட்சியை வேண்மாள் பார்த்தவாறு மகிழ்ச்சிப் பெருமூச்சு விடுகிறாள்.]